விடியும் வரை பேசு விமர்சனம்

யூத்துகளின் சிம் கார்டில் செமத்தியாக ஒரு கீறல் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் முகன். (முன்னாடியே ஒரு படம் இயக்கியிருப்பதாக ரெக்கார்டுகள் சொன்னாலும்.) காதே இல்லாமல் கூட இருந்து விடுகிற இன்றைய யூத்துகள் செல்போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள் என்பதை முதல் பாதி முழுக்க குறியீடுகளால் நிரப்புகிறார் இவர். வேறொன்றுமில்லை, எந்நேரமும் யாராவது யாருடனாவது செல்போனில் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி அறிமுகமில்லாத யுவதிகளின் போன் கால்களை அட்டர்ன் பண்ணினால் என்னாகும் என்பதை இரண்டாம் பாதியில் இவர் சொல்லி முடிக்கும் போது போனை கண்டுபிடித்த புண்ணியாத்மா எந்த லோகத்திலிருந்தாலும் ‘ இந்த பூலோகம் இப்படியா போயிட்டு இருக்கு?’ என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்தும். செல்போனே தீய்ந்து போகிற அளவுக்கு பேசித்தள்ளும் எல்லா ‘கடலை வண்டி உரிமையாளர்களும்’ ஒருமுறை இந்த படத்தை பார்த்தால் ஜென்ம சாபல்யம் நிச்சயம்.

கிராமத்தில் விதவை அம்மா, அன்பான தங்கச்சி, அழகான முறைப்பொண்ணு, தன் குடும்பத்தை பாதுகாக்கும் தாய்மாமா என்று ஒரு அஞ்சரைப் பெட்டி போல அழகான வாழ்க்கை வாழும் ஹீரோ அனித், வேலை விஷயமாக சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் செல்போன் வடிவில் வருகிறது சவப்பெட்டி. அடையாளம் தெரியாத ஒருத்தி இவருடன் செல்போனில் கடலை போட, யாரென்றே தெரியாமல் காதலிக்க ஆரம்பிக்கிறார் அனித். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அடிமையாகி அவள் முகம் பார்க்க துடிக்கிறார். ‘பர்த் டே அன்னைக்கு மீட் பண்றேன்’ என்று வாக்குறுதி கொடுக்கும் அவள், அதற்கப்புறம் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட, இப்பால் ஹீரோவின் நிலை என்ன? இது ஒருபுறம் என்றால்,

போனில் கடலை போட்டவள் அதே சேவையை வேறொரு எண்ணில் தொடர…. அவனோ குண்டு வைக்கும் கொலைக்கார தீவிரவாதி. ஒரு நாள் அவன் போலீசில் சிக்குகிறான், அவனுடன் அடிக்கடி போனில் பேசும் அவளும் சிக்குகிறாள். நடுவில் ஹீரோவின் நிலைமையும் வடை மடிக்கப்பட்ட தினசரி பேப்பர் போல அந்தல சிந்தலவாகிறது. க்ளைமாக்சில் அதையும் அயர்ன் பாக்சில் தேய்த்தெடுத்து ‘சுபமஸ்த்து’ என்று கதையை முடிக்கிறார் முகன்.

ஒரு மனவியல் பிரச்சனையை திரைக்கதையாக வடிக்கும் போது ஏற்படுகிற சங்கடங்களும் சவுகரிய குறைச்சல்களும் ஆயிரம் அபாய சங்குகளாக சேர்ந்து ஊதினாலும், சாமர்த்தியமாக அதை பிரசன்ட் செய்த விதத்தில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார் டைரக்டர். (இத்தனைக்கும் தயாரிப்பாளரும் இவர்தானாம்)

அறிமுக ஹீரோ அனித்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்பது முதல் ஆறுதல். அவரது தோற்றம் நல்ல முரட்டு ஆக்ஷன் படங்களுக்கு ஏற்றது என்பதால், தமிழ்சினிமாக்களின் க்ளைமாக்சுகளுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட பின்னி மில் அருகே நடமாட்டத்தை வைத்துக் கொண்டால் ஆக்ஷன் வேடங்களில் குதித்து அடி பின்னி எடுக்கிற படங்களாக சிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியமாகி தெருவில் திரியும் இவர், அந்த வழியாக நடந்து போகும் எந்த பெண்ணாவது போனில் கடலை போட்டுக் கொண்டு போனால் பிடித்து வைத்து வெளுப்பதை நன்றாகவே ரசிக்க முடிகிறது. தெருவுக்கு நாலு பேர் இப்படி கிளம்பினால் போதும். நகரங்களில் ‘கடலை வண்டிகள்’ பெருமளவு குறையும்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அந்த கிராமத்து ஹீரோயின் வைதேகி அழகோ அழகு. அதுவும் அசர வைக்கும் சின்னாளப்பட்டியழகு. பொறுத்தமான படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தால், சீக்கிரமே ‘ஆடி‘ கார் வாங்கிவிடலாம் (சுய சம்பாத்தியத்தில்தான்) நகரத்து தேவதை நன்மாவுக்கு எல்லாமே எடுப்பு. முன் வரிசை முத்துக்களான அந்த பல் வரிசை உட்பட. எவனையாவது வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே கடலை போட துவங்கி, கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் புலம்பி தவிப்பது நல்ல முடிவுதான்.

இதுபோக படத்தில் கால் டசன் நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கிரேன் மனோகர் ரசிக்க வைக்கிறார். படத்தில் அனித்துக்கு நண்பர்களாக நடித்திருக்கும் கதிர் உள்ளிட்ட மற்ற நண்பர்களும் அவரவர் பங்குக்கு அட்வைஸ் மன்னர்களாகிறார்கள். நிஜத்திலும் அதுதானே நடக்கிறது பல இடங்களில்? கதிர் கொஞ்சம் ஸ்பெஷலாக கவர்கிறார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடிக்கும் கொடுப்பினை இனி இவரை பின் தொடரலாம்.

புதுமுக இசையமைப்பாளர் மோகன்ஜியிடம் சரக்கு இருப்பதை நிரூபிக்கிறது பாடல்கள்.

ஹலோ மைடியர் ராங் நம்பர்… என்று துவங்கி கதையை காதல் வழிய முடித்திருக்கலாம். ஆனால் சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட நினைத்திருக்கிறார் முகன். அப்படியே பேஸ்புக் போன்ற இன்னபிற அபாய சங்கிலிகளையும் ஒரு இழுப்பு இழுத்து எச்சரிக்கை மணி ஒலிக்க செய்திருந்தால் வைட் ஆங்கிள் பார்வையாகவும் இருந்திருக்குமே?

சம்மரி போல சொல்ல நினைத்து சரமாரியாக கொட்டியிருக்கிறார் முகன். நாட் ரீச்சபுள் அட் த மூவ்மென்ட்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
22 ந் தேதி வரணும்… சிம்பு அழைப்புக்கு செவிசாய்த்த ஹன்சிகா

போசாம ’வாலு’ என்பதற்கு பதிலாக ‘அனுமார் வாலு’ என்று வைத்திருக்கலாமே என்று அப்படத்தின் தயாரிப்பாளரே தடுமாறுகிற அளவுக்கு ஷுட்டிங்கை இழுத்தடித்துக் கொண்டேயிருந்த சிம்பு, சமீபகாலமாக வாலு மீது...

Close