விபத்திலிருந்து உயிரை காப்பாற்றிய நடிகை ரோஜா எம்.எல்.ஏ வுக்கு மு.களஞ்சியம் நன்றி

ஆகத்து மாதம் 20ம் தேதி எனது நெருங்கிய நண்பரின் இல்லத்திருமணம் ராஜமுந்திரியில் எனது தலைமையில்  அதிகாலை 4 மணிக்கு நடந்தது.நான் எனது உதவியாளர்களுடன் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு,காலை சுமார்  8 மணியளவில்  ராஜமுத்திரியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம்.
வரும் வழியில் நாங்கள் வந்துகொண்டிருந்த யுநோவா காரின் வலது  பக்கமுள்ள டயர் வெடித்து விட்டது.அது அகண்ட தேசிய நெடுஞ்சாலை என்பதாலும்,வாகன நெருக்கடியே அற்ற சாலை என்பதாலும் நல்ல வேகத்தில். ஓட்டுனர் வண்டியை ஒட்டி வந்ததால் டயர் வெடித்ததும் ஓட்டுனரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை.வாகனம் வலது புற நடை மேடை மீது மோதி ஏறியதும் முன் பக்க இடது புற டயரும் வெடித்து விட்டது.வாகனம் இடது புறமாக பல தடவை புரண்டு விட்டது.இவை அனைத்தும் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்து விட்டது.அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.நான் அரசு மருத்துவ மனையில் கிடத்தப்பட்டிருக்கிறேன்.வலி தாங்கிக்கொள்ள முடியவில்லை.கண்களை திறக்க முடிய வில்லை.தெலுங்கு மொழியும் எனக்கு முழுமையாகத் தெரியாது.
அரசாங்க மருத்துவ மனையில் மருத்துவர்கள் இல்லை.எனவே காவல்துறை அதிகாரிக்கும் அங்கிருக்கும் செவிளியருக்கும் தெலுங்கு மொழியில் வாக்கு வாதம் நடக்கிறது.
காவல்துறை அதிகாரி சொல்லுகிறார் ”மருத்துவர் தாமதமாக வந்தால் இவர்களை காப்பாற்ற முடியாது.ஆகவே உடனே வரச்சொல்லுங்கள்” என்கிறார்.எனக்கு அறைகொரையாக புரிகிறது.மனம் பதறுகிறது.  ”இவர்களை காப்பாற்ற முடியாது” என்கிறார்..என் உதவியாளர்கள் யார்? யாருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என மனம் பதறுகிறது. என்னால் கேட்க முடிய வில்லை.
நான் செத்துக்கொண்டிருக்கிறேன்.என் நினைவுகள் போயி போயி வருகிறது.முகத்திலே வழிந்த ரத்தம் உறைந்து போகிறது அந்த நேரம் ஒருவர் வருகிறார் அவர் என் அருகே நிற்கும் உயர் காவல்துறை அதிகாரியிடம்’நான் ரோஜா எம்.எல்.ஏ விடம் இருந்து வருகிறேன் மேடம் லைன்ல இருக்காங்க பேசுங்க”  என்று சொல்லுவதை அசரீரியாக உணர்கிறேன். அதன் பிறகு தான் நாங்கள் உடனடியா தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறோம்.மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்களால் போராடி காப்பார்ரப்பட்டிருக்கிறோம்.
இவை அனைத்தும் அடுத்த பத்து நிமிடங்களில் நடந்துள்ளது.மருத்துவ செலவுக்கு எந்த பணமும் கேட்காமல் ஆகச்சிறந்த தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு நாங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.அதற்கு காரணம் தமிழகத்தின் மருமகள்.எங்கள் அண்ணி ரோஜா எம்.எல்.ஏ அவர்களும்,எங்கள் அண்ணன் ஆர்.கே .செல்வமணி அவர்களும்  தான் என்று இரண்டு நாட்கள் கழித்து நினைவு திரும்பி அறிந்த பொது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அப்போது தான் நான் எனது உதவியாளர் பெருஞசித்தன் மூலமாக  திரைப்படத்திலே என் நம்பிக்கைக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட்ட, எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் செயல் வீரன் தோழர் அருண் குமார் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்கிற செய்தியை அறிந்து நொறுங்கிப்போனேன்.
என்னால்  அதை சீரணிக்க முடியவில்லை.
கதறி அழுகிறேன்.
எனது ரத்த அழுத்தம் உயர்கிறது.
மருத்துவர்கள் ஓடிவருகிறார்கள்.
செய்தி சொன்ன பெருஞசித்தனைத் திட்டுகிறார்கள்.
தோழர் அருண்குமார் எனது ஊர்க்காரர்.அமைதியான தமிழ்தேசிய உணர்வாளர்.அவரை காப்பாற்றி விட்டு நான் செத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.அருணை நினைத்து நினைத்து கலங்கிக்கொண்டே மருத்துவமனையில் ஒரு நடைபிணமாக நான் கிடக்கிறேன்.
எனினும் பிரதிபலன் பாராமல்  எங்களை நொடிப்பொழுதில் ஆபத்திலிருந்து  காப்பாற்றிய அண்ணி ரோஜா எம் எல் ஏ அவர்களுக்கும்
எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் சங்கத் செயலாளர் அண்ணன் ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதோடு என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அத்தனை தமிழக அரசியல் தலைவர்களுக்கும்,அனைத்துக்கட்சி தொண்டர்களுக்கும்.தமிழ்தேசிய இயக்கத் தோழர்களுக்கும்,திரைப்படத்துறை உறவுகளுக்கும்,பத்திரிக்கைத்துறை மற்றும் இணையம் சார்ந்த அனைத்து ஊடகத்துறையினருக்கும்,
என் மீது மாறாத அன்புகொண்ட  நண்பர்களுக்கும்,என் மீது பாசம் கொண்டு தொடர்ந்து விசாரித்து வரும் உலகமுழுதும் வாழும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் உயிர்த் தோழர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்கிக் கொள்ளுகிறேன்.
—மு.களஞ்சியம்.—-
திரைப்பட இயக்குனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சாட்டை அன்பழகன் திருமணம்

சாட்டை திரைப்படத்தின் இயக்குனர் அன்பழகன் -  எம்.மாலா திருமணம் நேற்று (31- 08 - 2014 ) அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்...

Close