விமானத்தை போலவே சொகுசுப் பேருந்துகளிலும் கருப்பு பெட்டி
கடந்த ஆண்டு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 51 உயிர்களை பலி கொண்ட வால்வோ பேருந்துகளின் விபத்துகள் குறித்த தொழில்நுட்ப விசாரணையில் அந்த பேருந்துகளில் மரப்பலகைகளால் ஆன தரைப்பகுதி, எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய இருக்கைகள் மற்றும் அவசரகால வழிக்கதவு இல்லாதது போன்ற பாதுகாப்பு குறைவு அம்சங்களே காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சொகுசுப் பேருந்துகளிலும் விமானத்தை போலவே கருப்பு பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, சீட் பெல்டுகளை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கருப்பு பெட்டியில் பேருந்து பயணித்த தூரம், வேகம், இயக்கம், பேருந்தின் இடம் என பேருந்தைப் பற்றிய அனைத்து உண்மையான நிலவரங்களும் பதிவாகிக் கொண்டு இருக்கும். மேலும், ஓட்டுனரின் நடவடிக்கைகளையும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அவர் அதிக நேரம் பணியில் உள்ளாரா? என்பதையும் கூட பதிவு செய்து கொள்ளும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த வாரம் பெங்களுரில் இதுகுறித்து ஆலோசனை நடத்த போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கலந்து கொள்ள நாடு முழுவதுமுள்ள வால்வோ மற்றும் ஸ்கானியா ரக சொகுசுப் பேருந்து தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பான பேருந்து கட்டமைப்பை உருவாக்க பேருந்து வடிவமைப்புகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக இந்தியாவில் அதிக அளவில் இயங்கி வரும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சொகுசு பேருந்துகளில் கருப்பு பெட்டி மற்றும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்த போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.