ஆனந்த யாழை மீட்டுகிறேன்… -1 – வீணையில்லாத சரஸ்வதி வாலி சார்…

வணக்கம்.

newtamilcinema.in மூலமாக உங்களோடு பேசுவதில் பெருமையடைகிறேன். பல பிரபலமான வாரப்பத்திரிகைகளில் சினிமா நிருபராக பதினாறு வருடங்கள். பணியாற்றியிருக்கிறேன். பத்திரிகையே குடும்பம், குடும்பமே பத்திரிகை என்பதுதான் எனது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. இங்கே நான் சந்தித்த பிரபலங்களில் பலரை எழுத்தையும் தாண்டி நேசித்திருக்கிறேன். அதன் விளைவாக உருவானவைதான் நான் எழுதப் போகும் இந்த தொடரில் வரும் சம்பவங்கள்.

இந்த பிரபலங்களை சந்திக்க நான் பஸ் ஏறிப்போன நாட்களில் என்னை பணித்தனுப்பிய வார இதழ் ஆசிரியர்கள் தொடங்கி, பஸ் டிக்கெட் கொடுத்த கண்டக்டர்கள் வரைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். மெல்ல உயர்ந்து டூ வீலரில் பயணித்த நாட்களில் பெட்ரோல் வழங்கியவர்களில் தொடங்கி பஞ்சர் பார்த்தவர் வரைக்கும் இந்த கட்டுரை உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வணக்கம்.

உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் பலராலும், ஒரு முறை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கியவர்களுடன் நான் உணவருந்தியிருக்கிறேன். நான் கனவு கண்ட விஷயங்கள் மட்டுமல்ல, கனவு காணாத அற்புதங்களையும் இவர்கள் எனக்காக நிகழ்த்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இப்போது மட்டும் ஏன் வந்தது?

வேறொன்றுமில்லை, அற்புதங்களை பற்றி பேச ஏன் நேரம் காலம் பார்க்க வேண்டும். தோன்றியது… எழுத ஆரம்பித்துவிட்டேன். சுவாரஸ்மாக இருக்கும் என்று நம்புகிறேன். கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

என்றும் அன்புடன்,

பத்திரிகையாளன் என்ற பெருமையோடு தேனி கண்ணன்

 

 

வாலி சாரை சந்தித்து பேசுவதென்பதே ஒரு இனிமையான அனுபவம். 82 வயதிலும் எந்த நேரமும் எதையாவது படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த வாலி லேசில் யாரையும் சந்திக்க ஒப்புக் கொள்வதில்லை. அவருக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் மூலம் வருபவர்களை மட்டுமே சந்திக்க ஒப்புக்கொள்வார். அப்படி ஒப்புக்கொண்டால் அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய வருமானம் வரும் விஷயம் வந்தாலும் அதை தவிர்த்து விடுவார். அப்படி அவர் தவிர்த்தவர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர் என்றால் பாருங்கள். பேச ஆரம்பித்தால் கருப்பு வெள்ளை காலகட்ட சினிமா கலைஞர்களின் வாழ்க்கை, இலக்கியம், பாடல்கள், கண்ணதாசனைப் பற்றிய அபூர்வ செய்திகள் என்று திரும்பும் போது தலை நிறைய தகவல்களோடு திரும்பலாம். என்னை வாலி சாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. பாசத்திற்குரிய அண்ணன் பழநிபாரதி அவர்கள்தான். நான் எப்போது கவிஞரை சந்திக்க சென்றாலும் அண்ணனையும் அழைத்து சென்றுவிடுவேன்.

ஒருநாள் ’வாலி 1000’ நிகழச்சியின் துவக்க நாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏவி.எம். ஸ்டுடியோவிற்கு போயிருந்தேன். வீணையில்லாத சரஸ்வதி மாதிரி நடு நாயகமாக வாலி உட்கார்ந்திருக்க, சுற்றிலும் சக பத்திரிக்கையாளர்கள் அமர்ந்திருந்தனர். என்னை பார்த்ததும், “வாய்யா..நீ வர்றதா பழநிபாரதி சொன்னாப்ல” என்று கையை பிடித்து அழுத்தினார். கேள்வி பதில் நேரம் தொடங்கியது. ஆளாளுக்கு கேள்விகளை வீச சளைக்காமல் சிரிக்க சிரிக்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கவிஞர்.

குறும்புக்கார நிருபர் ஒருவர், “ஐயா நீங்க சினிமாவில் பெரிய ஜாம்பவான். உங்களுக்கு நடிகைகளோடு பழக்கம் இருந்திருக்குமே அதெல்லாம் இந்த டிவி தொடரில் வருமா?” என்று கேட்டு விட நான் ஆடிப் போனேன். கவிஞர் கோபப்படப் போகிறாரே என்று பதட்டம். ஆனால் வாலி தலையை ஸ்டைலாக சாய்த்து தாடியை தடவியபடி, “அதெல்லாம் நிறைய இருக்கே..பழக்கம் என்ன ஒண்ணா உட்கார்ந்து தண்ணியே அடிச்சிருக்கோம். அதெல்லாம் பழைய கதை.” என்று ஒரு புன்சிரிப்போடு பதிலளித்தார். இந்த திறந்த பதிலால் கேள்வி கேட்ட நிருபர் வாயடைத்துப் போனார்.

மறுநாள் அந்த நிருபர் கண்ணும் கருத்துமாக தினசரி வெளிவரும் அவர் பணியாற்றும் இதழில் அந்த செய்தியை பதிவும் செய்து விட்டார். நானும் நான் பணிபுரிந்த வார இதழில் ’நடிகைகளோடு பழகிய விஷங்களை வாலி டிவியில் வெளிப்படையாக சொல்லப் போகிறார்’ என்று எழுதிவிட்டேன். இது நடந்து ஐந்து நாள் கழித்து பழநிபாரதி அண்ணன் எனக்கு போன் பண்ணினார். “என்ன கண்ணா இப்படி பண்ணிட்ட..இந்த செய்தியை போய் எழுதலாமாய்யா. வாலி சார் உன் மேல கோபமா இருக்கார். எப்படி சமாளிக்கப் போற” என்று கடிந்து கொண்டார். “அண்ணே அந்த செய்தி ஐந்து நாளைக்கு முன் டெய்லி பேப்பர்ல வந்துருச்சுண்ணே.” என்றேன். ”இருக்கட்டும்ய்யா.. நெருங்கின வட்டத்துல இருக்குற நீ இதை எழுதலாமா. அடிக்கடி அவரை சந்திச்சுகிட்டிருக்கோம்ல. அதனால கடும் கோபத்தில் இருக்கார். அவரை எப்படியாவது சாமாளிச்சுக்கோ எனக்கு தெரியாது.” என்று கோபத்தோடு போனை வைத்து விட்டார்.

இதில் கொடுமை என்னவென்றால் சாட்சிக்காக அந்த செய்தித்தாளையும் நான் கொண்டு போய் காட்ட முடியாது காரணம் அந்த பேப்பர் சென்னையில் வெளியாகாது. வெளியூர்களீல் மட்டும்தான் வெளிவரும். என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு எனக்கு பதட்டம். ”வாலி சார்கிட்ட பேசிட்டு எனக்கு போன் பண்ணுன்னு” வேற பழநிபாரதி அண்ணன் சொல்லியிருக்கார். எப்படி வாலிகிட்ட பேசறது. என்ன சொல்லி திட்டுவாரோனு மனசுகுள்ள போராட்டம். ராஜா சார்கிட்ட எதுவும் சொல்லிடுவாரோன்னு இன்னொரு பயம் வேற. அவரை எப்படியெல்லாம் சமாதானப் படுத்தலாம்னு யோசிச்சு வெச்சுகிட்டு. போன் பண்ணினேன். “ஐயா நான் கண்ணன் பேசுறேன்.” “நீ பழநிபாரதிய கூட்டிகிட்டு வீட்டுக்கு வந்திடு.” என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட்டார். .எனக்கு தலை சுற்றியது. பழநிபாரதி அண்ணனிடம் கெஞ்சி கூத்தாடி அழைத்துக் கொண்டு என் வண்டியில் வாலி சார் வீட்டுக்கு புறப்பட்டோம். ( இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்று தோன்றலாம்,. ஒரு பத்திரிகையாளன் சின்ன செய்தியைப் போட்டு விட்டு எதற்காக இப்படி பயந்து சாக வேண்டும் என்று.. விஷயம் இருக்கிறது.

இசைஞானி, வாலிசார், மு.மேத்தா ஐயா, பழநிபாரதி அண்ணன் இவர்கள் அனைவரும் பத்திரிகை துறையில் நான் நுழைவதற்கு முன்பிருந்தே அறிமுகமானவர்கள். என்னை எந்த நேரத்திலும் கண்டிக்கும் வகையிலான பாச வட்டத்திற்குள் வைத்திருப்பவர்கள். என் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர்கள் அவர்கள் முன்பு மட்டும் நான் பத்திரிகையாளன் அல்ல.).

வாலி வீடு வந்து விட்டது. வண்டியில் வரும்போதே கவிஞரை சாமாளிக்க எனக்கு ஒரு சின்ன ஐடியா பொறி தட்டியது. அதனால் லேசாக பயம் நீங்கியிருந்தது. ”மாடியில் ஐயா இருக்கிறார்” என்று சுவாமிநாதன் சொல்ல படியேறினார் பழநிபாரதி. பின்னால் பதுங்கி பதுங்கி நான்.

கதவை தட்டி “ஐயா கண்ணன் வந்திருக்கான்.” என்று சிரித்துக்கொண்டே அண்ணன் சொல்ல “வாய்யா..” என்று அவர் அழைத்தலும் என் கால்கள் நகரவில்லை. “அட உள்ள வா தேனி.” என்று சத்தமாக கூப்பிட்டார். போய் அவர் முன் உட்கார்ந்தேன் தரையை பார்த்தபடி.” ”என்ன தேனி பேசாமல் உட்கார்ந்திருக்கான்.” என்று கேட்க, “அந்த நியூஸ்க்காக நீங்க திட்டுவீங்களோன்னு பயந்து போயிருக்கான்.” என்றார் அண்ணன். “அட போய்யா அதெல்லாம் ஒரு விஷயமா.” என்றாரே பாருங்கள், நான் ஆகாயத்தில் பறந்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் பொக்கிஷங்கள். இதே போல் தவறான செய்தி வெளியானால் கருப்பு வெள்ளை காலத்தில் நடிகர், நடிகைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சிரிக்க சிரிக்க சொல்லி வயிறை புண்ணாக்கினார். அதிலும் சி.எல்.ஆனந்தனை பற்றி சொன்னது வெடிச்சிரிப்பு.

பேசிகொண்டிருக்கும் போதே ”அவதாரபுருஷன் காவியத்தில் எனக்கு ஒரு கவிதை பிடிக்கும்” என்றேன். ”எந்த கவிதை” என்ரார். ”சோறூட்டும் போது அழும் குழந்தை ராமனை கோசலை தேற்றுவதாக வரும் இடத்தில்,

’எந்த கண்ணும் கண்ணீர் வடித்தால்
உந்தன் கைதான் துடைக்கிறது
உந்தன் கண்ணே கண்ணீர் வடித்தால்
எந்தக் கையால் துடைக்கிறது’

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ஐயா” இதே சந்தத்தில் உங்களுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கேன் ஐயா.” என்றேன். ”அடடே சொல்லு” என்றார்.

“எந்த குரலும் கவி படித்தால்
உந்தன் குரல்தான் கேட்கிறது
உந்தன் குரலே கவி படித்தால்
அந்த கந்தன் குரலே கேட்கிறது.

என்றதும் என்னை நிமிர்ந்து பார்த்தவர்.”இவ்வளவு பாசம் வெச்சுகிட்டு நீபோய் அந்த மாதிரி எழுதலாமா. அதனால் தான் கோபப்பட்டேன். நீ நல்லா இருக்கணும்ய்யா.” என்று தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அந்த விரல் ரேகை இப்போதும் என் தலையில் பசுமையாக ஒட்டியிருக்கிறது, நிரந்தர ஆசிர்வாதமாக….

(இன்னும் மீட்டுவேன்)

தேனி கண்ணனின் தொலைபேசி எண் – 09962915216

Read previous post:
போச்சம்பள்ளி, டிஷ்யூ கோட்டா, கோட்டா, பனாரஸ்….

சிரிப்பில் நளினம், செயலில் மென்மை, அழகின் உச்சம் என்றால் அது பெண்மை. அப்படிப்பட்ட பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகளும், பூணும் அணிகலன்களும் தான்......

Close