வீரம் விமர்சனம்

ஏற்கனவே தன் ரசிகர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் மினியேச்சராகவே கொண்டாடப்படுகிறார் அஜீத். அந்த அழகான எம்.ஜி.ஆர் தொப்பியில் வெள்ளை வெளேரென ஒரு வீர(ம்) இறகை செருகி மேலும் பெருமை சேர்த்திருக்கிறார் சிறுத்தை சிவா. ‘மாஸ் அடி அடிக்கணும், மற்றவங்க துடிக்கணும்’ என்பதற்காகவே செயல்பட்ட மாதிரி தெரிகிறது. வசனங்களிலும், காட்சியமைப்புகளிலும் கண்ணுக்கு தெரியாத ஒரு கட் அவுட் வைக்கிறார்கள் அவருக்கு. அதில் கம்பீரமாக தலை நிமிர்ந்திருக்கிறார் அஜீத்.

ஓப்பனிங் டயலாக்கிலேயே ரசிகர்களை பார்த்து ‘நல்லா திருப்தியா சாப்பிடப் போறீங்க’ என்கிறார் அஜீத். சாப்பாடா அது? அறுசுவையையும் தாண்டிய அல்டிமேட் சுவை.

ஊரில் ‘விநாயகம் பிரதர்ஸ்’ என்றால், பாதி பேருக்கு கிட்னி வரைக்கும் தலை சுற்றுகிறது. அந்தளவுக்கு அடிதடி, வெட்டுகுத்து வேலையாகவே திரிகிறார்கள் பிரதர்ஸ். அதேநேரத்தில் தானிய கிடங்கு, மார்க்கெட் வியாபாரம் என்று இன்னொரு பக்கம் கவுரமான தொழிலும் செய்கிறார்கள். தம்பிகளுக்காக கல்யாணமே செய்து கொள்ளாத இந்த தலை நரைத்த அண்ணனுக்கு திருமணம் என்கிற டை அடிக்க துடிக்கிறது தம்பிகளின் மனசு. காரணம், அண்ணன் திண்ணையை காலி பண்ணினால்தானே தம்பிகளாகிய தங்களுக்கு டும் டும் டும்?

பொருத்தமாக வந்து சேர்கிறார் தமன்னா. பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்து தங்கும் அவரை நைசாக அஜீத்துடன் கோர்த்துவிட திட்டம் தீட்டுகிறது பிரதர்ஸ் கோஷ்டி. நினைத்த மாதிரியே எல்லாம் நடக்க, அஜீத் காதலில் விழுகிறார். தம்பிகளும் நிம்மதி. அப்புறமென்ன? கல்யாணம்தான் என்று நினைக்கிற நேரத்தில் இன்னொரு ட்விஸ்ட். கதை மீண்டும் ஆக்ஷன் களத்திற்குள் விழுந்துவிட, அதை மல்லிகை சரத்தால் மெல்ல கட்டி மேலே இழுக்கிறார் டைரக்டர். உப்பு காரம் சில இடங்களில் ஓவராக போனாலும் அஜீத் சொன்ன சுவை அப்படியே மனசில் நிற்க, ‘ஹிட்ரா மாப்ள…’ என்றபடி வெளியே வருகிறார்கள் ரசிகர்கள்.

அஜீத்! தனக்கு என்ன வருமோ, அதை மட்டும் அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார். ஃபைட்டில் வளைகிற இடுப்பு, பாட்டுக்கு சுணங்கினாலும் எல்லாவற்றையும் ரசிக்க வைப்பது எது? அந்த மேஜிக்தான் மனுஷனை இன்னும் உயரத்திலேயே வைத்திருக்கிறது போலும். நீ என்ன சாதிரா? என்று கேட்கும் வில்லனிடம், நீ தேவர்னு நினைச்சா தேவன், நாடார்னு நினைச்சா நாடான், தலித்துன்னு நினைச்சா தலித் என்று துவங்கி ஊரிலுள்ள சாதிகளையெல்லாம் பட்டியல் போடுகையில் தியேட்டர் அதிர்கிறது. வாழ்க கோஷம் போடுகிறவர்களை, ‘முதல்ல அதை நிறுத்துங்க’ என்கிற அவரது துணிச்சலுக்கும் தலை வணங்கி கோஷமிடுகிறார்கள் ரசிகர்கள்.

‘இன்னைக்கு ரிஜக்ட் பண்ணிடுறேன்’ என்று தமன்னாவிடம் பேசக் கிளம்பி ஒவ்வொரு நாளாக தட்டிப்போய் கடைசியில் இருவரும் கட்டிக் கொள்கிற அந்த காட்சியில் விளைகிறது கவிதை. இப்படி அஜீத் நின்றால், நடந்தால், சிரித்தால், சினந்தால் தீபாவளி கொண்டாடுகிற ரசிகர்களை, மேலும் குலுக்கி தள்ளுகிறது சந்தானத்தின் சிரிப்போ போபியா. அவ்வளவு ஏன்? முதல் பாதி சக்கரத்தில் இலகுவாக கிரீஸ் தடவி இழுத்துச் செல்வதே சந்தானம்தான் என்றாலும் தப்பில்லை. ‘டேய்… கடைசிவரைக்கும் உங்களுக்கு அண்ணி கையால சாப்பாடு இல்ல. இந்த பன்னி கையாலதான்’ என்கிற போது ரகளையாகிறார்கள் ரசிகர்கள். செகன்ட் ஆஃப்பில் சந்தானமும் தம்பி ராமய்யாவும் சேர்ந்து அடிக்கும் கலாட்டாவுக்கு கீழே உலக கவலைகளையெல்லாம் போட்டு புதைத்துவிட்டு சிரிக்கிறார்கள்.

சற்றே பூசியிருக்கிறார் தமன்னா. வெறும் டூயட்டுகளுக்கு மட்டுமேதான் நாயகிகள் என்கிற லா, தமன்னாவால் உடைக்கப்பட்டிருக்கிறது. நடிக்கவும் நிறைய சான்ஸ் தருகிறார் சிவா. அஜீத் ஒவ்வொரு கோழியாக அள்ளி வெயிட் போட்டுக் கொண்டிருக்க, அவர் கோழிகளிடமும், ஆடுகளிடமும் பேசுவதாக நினைத்து உருகுவதும், அஜீத்தின் போதைமிகு தள்ளாட்டத்தை சூரிய நமஸ்காரமாக நினைத்து ஏமாறுவதுமாக தமன்னாவின் ஏரியாவிலும் எக்கச்சக்க பசுமை.

படத்தில் வரும் டிபிக்கல் வில்லன்களுக்கும் காமேடி ஷர்ட் போட்டு கலகலப்பு மூட்டியிருக்கிறார்கள். அதிலும், கம்பீரமாக வந்து ஏலம் கேட்டு கடைசியில் நார்த் பக்கம் வரமாட்டீங்கதானே என்று கன்பார்ஃம் பண்ணிக் கொண்டு அங்கே ஓடுகிற அந்த கடா மீசை வில்லன் கூட எரிச்சலுட்டவில்லை. நாசர் வழக்கம் போல… அவரைப்போல அஜீத்திற்கு தம்பியாக நடித்திருக்கும் அத்தனை பேரும் தலா நாற்பது மார்க் வாங்கி பாஸ். மாவட்ட கலெக்டராக வரும் ரமேஷ்கண்ணாவும் அவரது மனைவி தேவ தர்ஷினியும் ஓஓஓஓஓஓஓ….

ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் வசனங்களுக்கு மட்டும் தனியாக கைத்தட்டல்கள் விழுகிறது தியேட்டரில். ‘நமக்கு கீழே உள்ளவங்களை நாம பார்த்துகிட்டா, நமக்கு மேல உள்ளவன் நம்மளை பார்த்துப்பான்’ என்று அஜீத் பேசும் வசனத்தை அர்த்தம் பூசி ரசிக்கிறார்கள்.

வெற்றியின் ஒளிப்பதிவில் கடுமையான உழைப்பு தெரிகிறது. அதிலும் அந்த ட்ரெய்ன் ஃபைட் காட்சியில் ரிஸ்க்கை அப்படியே உணர்த்தியிருக்கிறார். இசை தேவி ஸ்ரீ பிரசாத். நம்ம ஊரு நாட்டுபுற ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த பாடல் மட்டும் அருமை. டான்ஸ் மாஸ்டர் தினேஷ், பாடலாசிரியர் விவேகா, பாடகர்கள் பரவை முனியம்மா, புஷ்பவனம் குப்புசாமியும் மனம் கவர்கிறார்கள். நடுநடுவே வேஷ்டி சட்டைக்கு விடுதலை கொடுத்துவிட்டு கோட் சூட்டோடு அஜீத் வெளிநாட்டில் ஆடிப்பாடும் அத்தனை பாடல்களும் பிலிமுக்கு இழைத்த தண்டம்.

இது மசாலா டீ தான். ஆனாலும் பஞ்சாமிர்த டேஸ்ட்! மறுபடியும் இதே டைரக்டருடன் ஒரு ‘ரிப்பீட்’ அடிங்க அஜீத்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
மன்னர் ஓ.கேவா? ராஜுபையா ஓ.கேவா? சூர்யா படத்திற்கு தலைப்பு வைப்பதில் இழுபறி

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எந்த பெயரை வைத்தால் அது பிற்காலத்தில் பிரச்சனையை தராது என்று சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கிறார்களாம்...

Close