வைகோ மீது போடப்பட்ட பொடா வழக்கு ரத்து
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உட்பட 9 பேர் மீது போடப்பட்ட பொடா வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்தது. 2002ஆம் ஆண்டு திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக வைகோ, மதிமுக எம்பி கணேச மூர்த்தி உட்பட 9 பேர் மீது பொடா சட்டம் பாய்ந்தது. இதில் வைகோ ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். இந்த வழக்கை எதிர்த்து மத்திய சீராய்வுக் கமிட்டியிடம் முறையிடப்பட்டது. மத்திய சீராய்வுக் கமிட்டியும் 2004ஆம் ஆண்டு இந்த பொடா வழக்குக்கு முகாந்திரம் எதுவும் இல்லை தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கை ரத்து செய்ய தமிழக அரசு முடிவெடுத்து இதற்கான மனுவை பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் இம்மனுவை பொடா நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார். வைகோவின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தியது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.