பண்ணைபுரத்தில் தவறவிட்டேன்… சென்னைபுரத்தில் அடைந்துவிட்டேன்… -ஆனந்த யாழை மீட்டுகிறேன் 04 -தேனி கண்ணன்

இந்த வாரத்தை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்கோடு ஆரம்பிக்கலாம்.. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் அது. இப்பலாம் எம்புள்ளய அடிச்சிட்டாரு, உன் புள்ளய அடிச்சிட்டாருனு வாத்தியார் மேலயே வழக்கு போடுறாங்க. பழனியப்பா வித்யாலயம் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் போது ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு ஆள் ஸ்கூலுக்கு வருவார். அந்த ஆளை பார்த்தாலே நெஞ்சுக்குள்ள ’கெதுக்’னு இருக்கும். காரணம் அவர் கையில வெச்சிருக்குற மூங்கில் குச்சி கட்டு. ஒரே அளவா வெட்டப்பட்டு பெருத்த பென்சில் போல இருக்கும். இந்த இளம் மூங்கில்கள் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தான் அதிகம் வளரும்.(இங்குதான் இசைஞானியும் முதன் முதல் புல்லாங்குழல் செய்ய மூங்கில் எடுத்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.)

ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு வளர்ந்த மூங்கில்களை இளம் பருவத்தில் வெட்டி அதை பக்குவமாக அனலில் வாட்டி அந்த குச்சியின் மேல் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அழகாக படம் வரைந்து கொண்டுவருவார்கள். ’அடிக்கப் போற குச்சிக்கு அலங்காரம் வேறயா’னு நாங்கலாம் பீதியோடு பார்த்து கொண்டிருப்போம். வாத்தியார் டீச்சரெல்லாம் பேரம் பேசி குச்சிகளை ஆளுக்கொன்றாக வாங்குவாரகள். நுங்கு, தேங்காய் இறக்கி விற்கும் அந்த ஆள் எங்கள நொங்கெடுக்குறதுக்கும் ஒரு வேலை பார்த்தாரு. அந்த மூங்கில் குச்சிக்கு ’மணிப்பிரம்பு’னு பேர். ஓங்கி உள்ளங்கையில அடிச்சா உச்சந்தலயில கிர்ருன்னு கரண்ட் அடிக்கும். இது இப்ப தப்பா தெரியலாம்,. ஆனால் என்னை பொருத்தவரைக்கும் வாத்தியார்கிட்ட அடி வாங்கலைன்னா அவன் வாழ்க்கையில அடி வாங்க வேண்டியிருக்கும்னுதான் சொல்லுவேன்.

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து எல்லோரையும் வரிசையாக ரெண்டு ரெண்டு பேராக நிற்க வைத்து வெளியே அழைத்துப்போனார்கள். எங்கே போகிறோம் என்பது தெரியாமல் அத்தனை பேரும் போகிறோம். பழனிசெட்டி பட்டி என்கிற என் ஊரின் ஒதுக்குப் புறமாக இருக்கும் ராஜ் சினி பேலஸ் தியேட்டரின் முன்பு போய் நின்றோம். ‘ஒருதலை ராகம்’ படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கிரது. மாணவர்கள் மத்தியில் பயங்கர கூச்சல் ஆரவாரம் .பல்ளிக்கூடமே ஒரு காதல் படத்தை பார்க்க அழைத்துச் சென்றதற்கு காரணமும் இருந்தது. தேனியில் மையப்பகுதியில் இருந்த தியேட்டர்களெல்லாம் வாங்க மறுத்ததால் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த ராஜ் தியேட்டரில் படம் வெளியாகி 120 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.

படத்தில் அப்படி என்னதான் இருக்கு என்கிற ஆர்வமும் தியேட்டர் முதலாளியின் அழைப்பும் இந்த படத்திற்கு வர வழைத்திருந்தது எல்லாரையும். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்’ பாட்டு பயங்கர கரவொலிக்கு மத்தியில் ஓடியது. எனக்கு மட்டும் பாடலை ரசிக்க முடியவில்லை. வேறன்ன? இளையாராஜாவின் ரசிகன் நான். வீட்டில் இளையராஜாவின் போட்டோவை ஒட்டி வெச்சும், எப்ப பார்த்தாலும் அப்போ ரிலிஸான பாடல்களையும் முணுமுணுத்துக்கொண்டும் இருப்பேன். அதனால் டி.ஆர். பாடல்கள இவ்வளவு வரவேற்பை பெற்றதை என்னால் தாங்கிக் கொள்ள முடியல. மணிப்பிரம்பின் உதவியால் வரிசை மாறாமல் பள்ளி வந்து சேர்ந்தோம். யார் யார் படம் பார்க்கும் போது பேசினார்களோ அவர்களுக்கெல்லாம் மணிப்பிரம்பு மரியாதை நடந்தது. கொஞ்ச நாள் வரைக்கும் எல்லா பயல்களும் வாய்க்கு முன்னால கையை குவிச்சு வெச்சுக்கிட்டு ( மைக்காம் )‘வாசமில்லா மலரிது வசந்ததை தேடுது’னு க்ளாஸ் ரூமிற்குள் பாடிகிட்டு திரிஞ்சானுங்க. நான் ராஜாவின் ரசிகன்னு தெரிஞ்சு சில பசங்க வேணுமின்னு வெறுப்பேத்த ‘நான் ஒரு ராசியில்லா ராஜானு பாடி கடுப்பேத்துனானுங்க. பதிலுக்கு நானும் ராஜா சார் பாடலை பாடுவேன். இந்த எசப்பாட்டு நடந்துகொண்டிருந்தபோது தான் ராஜா சார் பண்ணைப் புரத்திற்கு இசைக்கச்சேரி நடத்த வரபோறதா செய்தி வந்து ஊரே பரபரப்பா இருந்தது. அங்கங்கே பேனர்களில் ராஜா சார் சிரிச்சுகிட்டும் மியூசிக் வாசிச்சுக்கிட்டும் இருந்தார். ஒவ்வொரு ப்ரண்ட்ஸா கூட்டிட்டு போய் பேனர் முன்னால நின்னுகிட்டு வெச்ச கண் வாங்காமல் ராஜா சாரையே பார்த்துகிட்டிருப்போம்.

பண்ணைப்புரத்துல கச்சேரி நடத்துறதுக்காக வரும் போது எப்படியாவது அவரை தூரத்திலிருந்தாவது பார்த்திடனும்னு நானும் ப்ரண்ட்ஸும் முடிவு பண்ணினோம். எங்க ஊர்லருந்து பண்ணைப்புரத்திற்கு 30 பைசா (இப்போது 21 ரூபாய்) எப்படி காசு சேர்க்குறது , அன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போகாமல் எப்படி லீவு போடுறதுன்னு வீட்டுக்கு தெரிஞ்சிடுமேன்னு எல்லாருக்கும் குழப்பம். பயம். ஆனால் போறதில் எந்த மாற்றமில்லை. அந்த நாளும் வந்தது. தேனியிலிருந்து பண்ணைபுரத்திற்கு ஸ்பெசல் பஸ் விடப்பட்டிருந்தது. போதாத குறைக்கு வண்டிகட்டி வேற மக்கள் கூட்டம் போய்கிட்டிருந்தது. கச்சேரி நடத்த கத்திரிகாய் தோட்டத்தையும், பனை மரங்களையும் அழித்து மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. பஸ்ஸெல்லாம் இளவட்ட பசங்களோட ஆரவாரம். பஸ்சுக்கு வெளியே குழாய் ரேடியோவை கட்டிகிட்டு ‘நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ’னு அலற விட்டுப் போனார்கள்.

கச்சேரி நடக்குற காலையிலிருந்தே விழா மூட் தேனியிலிருந்து குமுளி வரை பரவிகிடந்தது. ஆனால் எங்க டீமுக்கோ கச்சேரி பார்க்க போக பத்து காசு கூட பெயரல. இன்னைக்கு ஸ்கூலுக்கு போறதா இல்லையான்னு நாலு பேரும் மீட்டிங் போட்டோம்.மதியத்துக்கு மேல சொல்லாமல் கொள்ளாமல் ஸ்கூலை விட்டு வெளியேறுவது என்று ஏக மனதாக முடிவானது. எல்லாம் சரி காசு? நாலு பேருக்கும் சேர்ந்து 1.20 காசு வேண்டுமே. நேரம் ஆக ஆக பதட்டம் ஆனது. பஸ்ல போற கூட்டம் வேற பாட்டப்போட்டு உசுப்பி விட்டு போனபடி இருந்தது. கடைசியில் வித் அவுட்ல போகலாம்னு முடிவானது. கூட்டத்துல டிக்கெட் கேட்கவா போறாரு என்கிற மெத்தனத்துல நாலு பேரும் ஏறிட்டோம். வீரபாண்டி, கோட்டூர், சின்னமனூர், உத்தமபாளயம் வந்ததும் பஸ் வரிசையா ரோட்லயே நின்றிருந்தது. அவ்வளவு ட்ராபிக். மெதுவாக நகர ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்துதான் பஸ்ஸில் செக்கிங் நடந்தது. நான் பின் பக்கம் என் நண்பர்கள் மூவரும் முன்பககம்.. நான் இருக்கும் வழியாக ஏறிய செக்கர் முதலில் என்னிடம் டிக்கெட்டை கேட்க, அப்பறம் என்ன….. கழுத்தச்சேர்ந்து அடிச்சு இறக்கி விட்டார்கள். எனக்கு அப்போதைக்கு அடி விழுந்தது கூட தெரியல. எப்படியாவது க்ச்சேரிக்கு போயாகனுமேங்கிற பதட்டம் தான் இருந்தது.

ஆனால் கச்சேரி ஆரம்பித்திருந்தது கூட்டத்திற்குள் நுழைந்து போவதற்கு பயமும் தயக்கமும் வந்து ஊருக்கு திரும்ப முடிவெடுத்தேன். நிகழ்ச்சியின் முதல் பாடலாக ‘வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும் குந்தனும்’ என்ற ஆண்பாவம் படப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது எனக்கு மனசு வலிக்க ஆரம்பித்தது. பாளயத்திலிருந்து என் ஊரான பழனிசெட்டி பட்டிக்கு 14 கிலோமீட்டர். நட நடன்னு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன். என் நண்பர்கள் மட்டும் எப்படியோ கச்சேரிக்கு போய் விட்டார்கள். மறுநாள் கச்சேரி பார்க்க முடியலன்னு வெளிய சொல்ல முடியாமல் ‘நானும் பார்த்தேன்’னு பொய் சொல்லிகிட்டு திரிஞ்சேன். (ப்ளாஷ் பேக் முடிந்தது)

பிரசாத் ஸ்டுடியோவில் ராஜா சார் கவிஞர்களுக்கு விருந்து கொடுத்து விட்டு எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ”,இப்படி கவிஞர்களை நீங்கள் சந்தித்த நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள்.” என்றார். உடனே ராஜா சார், “எல்லாம் கண்ணனோட ஐடியாதான். எப்படி அவனுக்கு இந்த யோசனை வந்ததுன்னு தெரியல.” என்றார். அந்த நிமிஷங்கள் எனது வாழ்க்கையில் முக்கியமான நிமிஷங்களாக இருந்தது.

அதே போல குமுதம் இதழில் இசைஞானியின் நூல் வெலியீட்டு விழா நடந்த விழா மேடையில் சர்ப்பரைசாக இசைஞானி கையால் எனக்கு பொன்னாடை போர்த்த பெயர் வாசிக்கப்பட்டபோது “அட உனக்குமாய்யா” என்று சிரித்துக் கொண்டே போர்த்தி விட்டார். பணிபுரியும் நிறுவனத்தில் ஸ்பெஷலாக இப்படி ஒரு மரியாதை கிடைப்பது அபூர்வம். அந்த மரியாதையை குமுதம் எனக்கு கொடுத்தது. இது நேரடியாக எனக்கு கிடைத்த மரியாதை என்பதை விட இசைஞானிக்காக எனக்கு தரப்பட்ட அந்தஸ்து என்றே எடுத்துக் கொள்கிறேன்.

(இன்னும் மீட்டுவேன்)
தேனி கண்ணனின் தொலைபேசி எண் – 09962915216

3 Comments
  1. Sridhar says

    அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள் கண்ணன்.

  2. Packiaraj says

    வாத்தியார்கிட்ட அடி வாங்கலைன்னா அவன் வாழ்க்கையில அடி வாங்க வேண்டியிருக்கும்னுதான் சொல்லுவேன்.
    அருமை சார்.

  3. ponmudi says

    நன்று!

Reply To Sridhar
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?

[nggallery id=70]

Close