10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள் மத்தியில், அதே பத்து எண்ணுதுக்குள்ள படவுலகத்தை விட்டே அனுப்பி வைக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய் மில்டன்! அவர்தான் அப்படி… கதை கேட்ட விக்ரமுக்கு கழுத்துக்கு மேலே வறட்சியோ என்னவோ? போதும் சாமீய்… உங்க ஆக்ஷன் அலட்டல்! மிடியல…

விக்ரமின் அறிமுகக்காட்சிக்காகவே இன்னும் நாலு டிக்கெட்டை எக்ஸ்ட்ரா வாங்கி தியேட்டர் வாசலிலேயே கிழித்துப் போடலாம்! அப்படியொரு திராபை. அதென்னங்கப்பா… ஆக்ஷன் படம்னா பாதி கட்டுன பாலம், அரைகுறையா உடைஞ்ச பில்டிங்னு சேம் லொக்கேஷன் பிடிக்கிறீங்க? கதைக்குதான் வறட்சின்னா, லொக்கேஷனுக்குமா? இந்த லட்சணத்தில் லொக்கேஷனுக்காகவே உத்தரகாண்ட் வரைக்கும் ஓடுகிறது கதை!

கேட்க கேட்க பணத்தை கொட்டிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த படத்துல ஏதோ ஒண்ணு இருக்கு என்று நம்பி ஒடிய யூனிட்டுக்கும் ஆயுசுக்கும் மறக்காத மாதிரி ஒரு அழுகாச்சி பூங்கொத்தை அனுப்பி வைங்க மக்களே….

சரி, கதை என்ன?

எந்த வேலை கொடுத்தாலும் பத்து எண்றதுக்குள்ள முடிச்சுடுவாராம் விக்ரம். அவரால் முடியாத விஷயமேயில்லை என்கிற அளவுக்கு புஜபலம் மிக்கவர். ஒரு மின்னல்வேக சேசிங்கில் இவரது பராக்கிரமத்தை அறிந்து கொள்ளும் பசுபதி, அவரை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார். அவர் கொடுக்கும் வேலைகளை செய்து முடிப்பதுதான் விக்ரமின் பகுதிநேர வேலை. மிச்ச நேரத்தில் அவர் டாக்ஸி ஓட்டவும் சொல்லிக் கொடுப்பாராம். அங்கே படிக்க வரும் ஸ்டூடன்ட்தான் சமந்தா. பற்றிக் கொள்கிறது பளக்கம். ஒரு கட்டத்தில் ஒரு காரை கொண்டுபோய் உத்ரகாண்டில் சேர்க்கும் வேலை தரப்படுகிறது விக்ரமுக்கு.

பாதி தொலைவுக்கு போன பின்தான் தெரிகிறது, அதே காரில் முழு மயக்கத்தோடு வருகிறவர் தன் உயிர் லவ்வி சமந்தா என்று! ஒப்படைக்கப் போவது கார்தான் என்று இவர் நினைக்க, சமந்தாதான் என்று நகர்கிறது கதை. யார் இந்த சமந்தா? ஏன் அவரை கடத்த வேண்டும்? விக்ரம் சமந்தாவை காப்பாற்றியது எப்படி? ரொம்ப இழுக்காம விட்ருங்க பாஸ்… என்று ரசிகர்கள் கொந்தளித்தாலும் பரவாயில்லை என்று சவுகரியப்படுகிற நேரத்தில் குட்பை சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். ஐயோ பாவம் விக்ரம் ரசிகர்கள்…

இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரி இருக்கிறது உடற்கட்டு. ஆனால் கன்னட பட ஹீரோ மாதிரியல்லவா இருக்கிறது பேஸ்கட்டு? ஸாரி விக்ரம். உங்க ரிட்டையர்மென்ட்டுக்கு தகுந்த டைம் வந்தாச்சு! இவரும் சமந்தாவும் ஒரே ரூமில் ஒரே கட்டிலில்… தொடாமலே ரொமான்ஸ்? படாமலே பர்பாமென்ஸ்… ப்ளீஸ் விட்ருங்க ஜோடிஸ்!

டீயோடு சேர்ந்த பன்னும் டீக் வுட் கலராகும் அல்லவா? பேரழகி சமந்தாவும் சில காட்சிகளில் இம்சிக்கிறார். துடிப்பான பெண்ணாம். செய்கிற சேஷ்ட்டைகள் எதுவும் நார்மல் மனுஷியாக இல்லையே சா…மந்தா! (விக்ரம் அப்படிதான் விளிக்கிறார்) அதுவும் அந்த உத்ரகாண்ட் எபிசோடில் காணப்படும் அவரது கோப முகம், அப்பதான் பல் ஆஸ்பிடலில் இருந்து சிகிச்சை முடிந்து வருவதை போல இருக்கிறது.

ஒரு காட்சியில் மட்டும் “ஏன் இப்படி எட்டிப்பார்குற. நான் காட்ட மாட்டேனா?” என்று சமந்தா தன் மேல் பட்டன் சங்கதிக்காக வருந்த, தியேட்டர் ஜிலீர் ஆகிறது.

படத்தில் வரும் வில்லன்களை ஒரே கூண்டில் நிற்க வைத்து, ஒரேயடியாக சிரித்துவிட்டு நடையை கட்டிவிடுவது நல்லது. அவ்வளவு படுத்துகிறார்கள். ஒரே ஆறுதல் பசுபதி. கொடுக்கப்பட்ட கேரக்டரை அசால்டாக ஊதித்தள்ளுகிறார்.

டி.இமானின் இசையில் அந்த வைக்கம் விஜயலட்சுமி குரலில் வருகிற பாடல் இனிமை. மற்றதெல்லாம் தகர டப்பா. பின்னணி இசை? கேட்கவே வேண்டாம். அதுவும் அவ்வண்ணமே!

ஒளிப்பதிவாளர் பாஸ்கரனுக்கு மட்டும் அநேக நமஸ்காரம். மிரட்டுகிறது அந்த சேசிங். அதற்கேற்றார் போல ஓடிய கேமிராவின் வேகம்!

பருத்தி சட்டையை விட பகட்டு சட்டையே மேல் என்று நம்பும் விக்ரம் மாதிரியான ஹீரோக்களுக்கு எட்டு எண்றதுக்குள்ள மார்கெட்டு உருள்றதுதானே ஒரே முடிவாக இருக்க முடியும்! போங்க… ஓரமா உட்கார்ந்து ஒரு கோலிசோடா குடிங்க, சரியாகிடும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. KARTHICK says

    பத்து என்றதுக்குள்ள படம் படு போராக உள்ளது. மரண மொக்கை. ஒரு தடவை கூட பார்க்க தகுதி அற்ற படம். கதை மெதுவாக நகர்கிறது.

  2. alam says

    ஏமாற்றம் தான் மிச்சம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முதல்ல லைட்டை நிறுத்துங்க… நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்!

சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே? என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்... நானும் ரவுடிதான் தியேட்டர்களில்...

Close