ஆயிரம் ரோசாப் பூ… ஆயிரம் மன்னிப் பூ! -ஆர்.எஸ்.அந்தணன்

கிளி ஜோசியம் கண்டு பிடிச்சவன் எவனோ, அவன்தான் பிராணிகள் வதை சட்டத்தின் முதல் தண்டனை குற்றவாளி. ஒரு நெல்லுக்காக அது பார்க்குற ஓவர் டைம் இருக்கே… அடாடாடா…! அப்படியே விட்டுச்சா சோதிட சமூகம்? கிளியே பார்க்குது, எலி பார்க்காதா? என்று யோசித்து அதற்கும் ஒரு ‘அடுத்த கட்டத்தை’ கண்டு பிடிச்சவன் இருக்கானே, அவன்தான் ஜோதிட விஞ்ஞானி. இப்படி கிளி, எலி, அணில், முயல்னு கூண்டுக்குள்ளே கிடந்துகிட்டு நம்ம எதிர்காலத்தை கணிக்கிற அத்தனை பிராணிகளுக்கும் ஜென்ம சனியில்லாம வேறென்ன?

சமீபத்தில் ஒரு ஜோசியம் படிச்சேன். எங்கதான் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? இது ரோசா சோதிடமாம். ஒரு ரோசாப்பூவை ஒரு பொண்ணு தலையில் எந்த ஸ்பாட்ல வைக்கிறாளோ, அதை வச்சு அவ கேரக்டரை சொல்லிடலாம்னு எழுதியிருந்தார் அந்த பூ சோதிட புண்ணியகோடி. அதாவது காதுக்கு மேல் சைட்ல வச்சா அந்த பொண்ணுக்கு காதல் உணர்வுகள் ஜாஸ்தி இருக்குமாம். அதுவே உச்சந்தலையில் வச்சா புருஷனுக்கு அடங்காதாம். அப்படியே பின்னங்கழுத்துக்கு மேலன்னா… வேற என்னவோ? இதையெல்லாம் படிச்சுட்டு எந்தெந்த வீட்ல மோர் பானை உடையுதோ? நிறுத்துங்கப்பா உங்க கற்பனை கலவரத்தைன்னுதான் சொல்லத் தோணுது. பட்… ஒரு ரோசாப் பூவால ஒரு நடிகைக்கும் ஹீரோவுக்கும் நடந்த தள்ளுமுள்ளுவை கேட்கிற வரைக்கும்!

அந்த நடிகை ஒரு காலத்தில் இடுப்பை ஆட்டினால் இன்டஸ்ட்ரியே ஆடியது. வளர்த்தி… வசீகரமான சிரிப்பு என்று பஞ்சாபி கோதுமையை போல ஜொலித்தார். தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் அவருடன் நடிக்க போட்டியிட்டார்கள். அவரும் முடிந்தவரை வளர்ந்த ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் ஜோடியாக நடித்து விட்டார். அதற்கப்புறம் காதல் கல்யாணம் என்று வேறொரு பக்கம் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரது பிரிவியஸ் காதல்களில் ஒன்றுதான் இது. அந்த கால கட்டத்தில்தான் ஒரு ஒத்த ரோசா கதற விட்டது அந்த மாஸ்டரை.

அவர் பெரிய டான்ஸ் மாஸ்டர். தொழிலில் கரை கண்ட அவரிடம், ‘பார்க்க ராஜா மாதிரி நல்லாதானே இருக்கீங்க. நடிக்கலாமே?’ என்று தூபம் போட்டு மேக்கப் தடவியது இன்டஸ்ட்ரி. இத்தனை காலமும் யார் யாரையோ ஆட்டுவித்தோம். பேர் வாங்கிக் கொடுத்தோம். நாமே ஆடி பேர் வாங்கிக் கொள்வோமே என்று நினைத்த மாஸ்டர் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு இதே நடிகைக்கு பலமுறை ஸ்பாட்டில் டான்ஸ் சொல்லிக் கொடுத்தவருக்கு, இந்த முறை அவரே சேர்ந்து டூயட் ஆடுகிற பொன்னான வாய்ப்பு.

ஐதராபாத்தில் ஷுட்டிங்…. நாட்கள் நகர நகர இவர்களின் நெருக்கம் காதலானது. அப்புறமென்ன? ஷுட்டிங் ஸ்பாட்டில் திரும்பிய இடமெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தது இருவருக்கும். ஒரே ஓட்டலில் தங்கினார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே ரூமில் பம்மினார்கள். அப்படியொரு நாளில்தான் அந்த அசம்பாவிதம். உனக்கு என்னெல்லாம் பிடிக்கும்?’ என்று தெரியாத்தனமாக நம்ம ஹீரோ கேட்க, ‘காதோரம் ஒரு ஒத்த ரோசா வச்சுகிட்டு தழைய தழைய புடவை கட்டி உன் கைய புடிச்சுகிட்டு நடக்கணும்’ என்றார் ஹீரோயின்.

‘அதுக்கென்ன… ஸாங்ல அப்படியொரு கெட்டப் வச்சுட்டா போச்சு’ என்று கேஷுவலாக இவர் சொல்ல, மொளக்கென்று முன் மண்டையில் குட்டினார் நடிகை. ‘ம்க்கூம். ஷுட்டிங்ல அவ்ளோ பேர் பார்க்கும் போது எதுக்கு?. நாளைக்கு ஈவினிங் வரும்போது பார்த்து பார்த்து ஒரு ரோஸ் வாங்கிட்டு வா. அதே கலர்ல ஒரு புடவை’ என்று கூறியிருந்தார்.

மறுநாள் ஷுட்டிங் பரபரவென போய் கொண்டிருந்தது. ஏதோ ஒரு அழுகாச்சி சீன். க்ளிசரின் தீர்கிற வரைக்கும் அழுது கொண்டிருந்தார் நடிகை. ஆனால் உள்ளுக்குள் அந்த ஒத்த ரோசா வந்து கண்ணாமூச்சு காட்டிக் கொண்டேயிருந்தது. இந்தப் பக்கம் ஆம்பள மனசாச்சே? சொன்ன வாக்குறுதி நேத்தே மறந்து போச்சு அவருக்கு- இவரும் ஏதேதோ காட்சிகளில் நடித்து முடித்து விட்டிருந்தார். ஷுட்டிங் முடிந்து அவரவர் அறைக்கு திரும்பியிருந்தார்கள். ரொம்ப கேஷுவலாக பதினொரு மணி பி.எம்முக்கு கதவை தட்டினார் ஹீரோ. அந்த இரவு ஏ.எம் வரைக்கும் நீளப் போவது தெரியாமலே! மெல்ல என்ட்ரி கொடுக்க, வந்தவரின் கைகளை ஆசையோடு கவனித்தார் ஹீரோயின். ம்ஹும். ஒரு அறிகுறியும் இல்லை.

‘ஹேய்… ரோஸ் எங்க?’ என்றார். அப்போதுதான் மண்டையில் பல்ப் எரிந்தது ஹீரோவுக்கு. சட்டென சுதாரித்துக் கொண்டு, ‘இன்னைக்கா சொல்லியிருந்த? நான் நாளைக்குன்னு நினைச்சேன். நாளைக்கு ஷ்யூர்ம்மா’ என்று சொல்லி முடிக்கும்போதே பொத் பொத்தென்று அடி விழுந்தது ஹீரோவுக்கு. ‘நான் எவ்வளவு ஆசை ஆசையா இருந்தேன். கெட்டவுட்… கௌம்பு முதல்ல’ என்று கழுத்தை பிடித்து வாசலுக்கு தள்ளிக் கொண்டு போனார். கண்களில் பொங்கிக் கொண்டிருந்தது கண்ணீர். அட… விஷயம் அவ்வளவு சீரியஸ்சா. இது தெரியாம போயிருச்சே என்று ஹீரோ துடிக்க, எதையும் கேட்கிற நிலைமையில் இல்லை பொண்ணு. துரோகி… நான் அவ்வளவு இளப்பமா போயிட்டேனா. இதுவே அவ கேட்டா சும்மாயிருப்பியா? என்று குரூப்பில் ஆடிக் கொண்டிருந்த யாரோ ஒரு அப்பாவி அழகியை அந்த நேரத்தில் வம்பிழுத்தார்.

ஆத்திரமும் அழுகையுமாக கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். இப்படியொரு அட்டாக்கை எதிர்பார்க்கவேயில்லை மாஸ்டர். பெருத்த சோகம் வந்து அவரது தொண்டையை அடைக்க, அதே ஓட்டலில் தங்கியிருந்த தன் உயிர் நண்பனும், அந்த படத்தின் அசோசியேட் டைரக்டருமான ஒருவரை கதவை தட்டி அழைத்தார். இந்த கண்றாவியெல்லாம் நடந்து முடிந்த நேரம் நள்ளிரவு பனிரெண்டு மணி.

‘டேய்… மாப்ளே. நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. கௌம்பு’ என்றார். அரை தூக்கத்திலிருந்தவர். ‘என்ன விஷயம்?’ என்று கேட்பதற்குள் அவரையும் இழுத்துக் கொண்டு சாலைக்கு வந்திருந்தார் மாஸ்டர்.

‘டேய் விடியறதுக்குள்ள ஆயிரம் ரோஸ் வாங்குறோம். ஆறு மணிக்கெல்லாம் கதவை தட்டி இந்த ஆயிரம் ரோஸையும் அவ காலடியில் வச்சுட்டு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கணும்’. குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார் நம்ம ஹீரோ. காதலிக்கிற எல்லா கூமுட்டையும் இப்படி கீழ்ப்பாக்கம் மேப்போடதான் அலையும் என்பது தெரியாதவரா அந்த நண்பர்? ‘சரி விட்றா. சிம்புள் மேட்டரு’ என்று ஆறுதல் கூறியபடி அவரை அணைத்துக் கொண்டார். நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ரோசாப்பூக்களை கொட்டி விற்க ஐதராபாத் என்ன ரொமான்ஸ் நகரமா? ம்ஹூம்… ஒரு இடத்திலும் பூக்கடையும் திறந்திருக்கவில்லை. ரோசாவும் கிடைத்தபாடில்லை.

‘எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல. விடியறதுக்குள்ள ஆயிரம் ரோசா வேணும்டா’ என்றார் மாஸ்டர். அப்புறம்தான் நினைவுக்கு வந்தது. ‘டேய்… மொதல்ல ஒரு ஏடிஎம் பார்க்கணும்’ என்றார். போய் கைநிறைய பணத்தை எடுத்துக் கொண்டு நகரத்தை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தார்கள். போகிற இடத்திலெல்லாம் ‘என்னது? ரோஸ்சா? இந்த நேரத்துல எங்கப்பா கிடைக்கப் போவுது?’ என்பதே பதிலாக இருக்க, நொந்தே போனார் ஹீரோ. ஆனால் சளைக்காமல் தேடல் தொடர்ந்தது.

பூட்டியிருந்த பூக்கடைகளையெல்லாம் கதவை தட்டி திறக்க சொன்னார்கள். சாலையாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறு வியாபாரம் செய்யும் ஆயாக்களையெல்லாம் எழுப்பி ‘ரோசாப்பூ வேணுங்க்கா’ என்றார்கள் பரிதாபமாக. ‘யோவ்… குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றீங்களா?’ என்பவர்களை பணத்தால் அடித்தார்கள். ‘ஒரு ரோசாவுக்கு 100 ரூபா தர்றேன். ஆயிரம் வேணும்…’ என்று ஆசை காட்டிய ஹீரோவுக்கு கைமேல் பலன். கசங்கியும் கசங்காமலும் கொஞ்சம் கிடைத்தது. ‘ஸ்டார் ஓட்டல்களுக்கு போங்க. அங்க பொக்கே விப்பாங்க. அதை அவுத்து அதுலேர்ந்து தனித்தனி ரோசாவா பிரிங்க’ என்றொருவர் ஐடியா கொடுத்தார். இப்படி தெருவோரத்தில் கிடைத்தது கொஞ்சம், ஸ்டார் ஓட்டலில் கிடைத்தது கொஞ்சம், பூக்கடையில் பீராய்ந்தது கொஞ்சம் என்று விடிவதற்குள் ஆயிரம் ரோசாவை சேகரித்துவிட்டார் ஹீரோ.

விடிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கதவை தட்டி ஆயிரம் ரோசாக்களை காதலி தலையில் கொட்ட, சந்தோஷமோ சந்தோஷம் ஹீரோயினுக்கு. அப்படியே அவர் முன் மண்டியிட்டு ஆயிரம் ஸாரிகளை கேட்க ஆரம்பித்தார் ஹீரோ. எண்ணிக்கை பத்து பதினைந்தை தாண்டுவதற்குள் அப்படியே இறுகக் கட்டிக் கொண்டு அவரது வாயை பொத்தினார் ஹீரோயின். பொழுது சந்தோஷமாக விடிந்தது இருவருக்கும். ஆனால் முதல் நாள் முழுக்க உறங்காத ஹீரோ ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் என்ன செய்வார்?

‘ஹீரோவுக்கு டயர்டா இருக்காம். ரெஸ்ட் எடுக்கணுமாம். அதனால் இன்னைக்கு மட்டும் வேற ஏதாவது போர்ஷனை ஷுட் பண்ண சொன்னாரு’ என்றார்கள் சாரோட உதவியாளர்கள்.

இப்படி தேடி வந்த தொழிலை தெறிக்க தெறிக்க ஓடவிட்ட ஹீரோக்களுக்கெல்லாம் என்ன கிடைக்குமோ, அதைதான் காலமும் இவருக்கு கொடுத்தது. இப்போது சிங்கிள் ஷார்ட் பிலிமுக்கு கூட வழியில்லாம, வெத்து ரோசாவா ஆகிட்டாரு இந்த முன்னாள் ஹீரோ! சினிமா பொழுதுபோக்குதான். ஆனால் அதில் நடிக்கிறவங்க அதை பொழுதுபோக்கா நினைச்சா இதுதான் கதி!

நன்றி – குமுதம் ரிப்போர்ட்டர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:

Close