எத்தனையோ தமிழ் படங்கள்… எல்லாமே என்னென்னவோ காரணங்களால் உருவாகியிருக்கலாம். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அந்த படத்தின் ‘மூலக்கதையும்’ நிஜமாகவே அன்பை சொரிந்து ஆனந்தப்பட வைத்தது. ‘இரு காதல் ஒரு கதை’ என்ற அந்த படம் உருவானது எப்படி?
படத்தின் தயாரிப்பாளர் லட்சுமி என்ற பெண்மணி. இவரது அப்பா குஹா ஒரு இசையமைப்பாளர். சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் அவரது ஆரம்பகால லட்சியம். ஓடினார் ஓடினார்… ஆனால் வாய்ப்புகள் கை நழுவி அவரை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் குடும்ப பொறுப்புகள் தோளில் ஏறிவிட, தனது சொந்த கனவை மூட்டை கட்டிவிட்டு குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். சமயங்களில் மொட்டை மாடியில் உட்கார்ந்து தான் இசையமைத்த பாடல்களை சப்தம் போட்டு பாடுவாராம். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மகள் லட்சுமிக்கு, நம்ம அப்பாவுக்கு நாமே வாய்ப்பு கொடுப்போம் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. அதற்கப்புறம் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போன பின்பும் அந்த ஆசை மனதிலேயே இருந்ததாம். வாய்ப்பு வசதிகள் பெருகி, தன்னிறைவு பெற்றவுடன், கணவரிடம் அனுமதி கேட்டாராம். எதற்கு? அப்பாவை இசையமைப்பாளர் ஆக்கி ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பதற்காக.
அங்கேயும் க்ரீன் சிக்னல். அப்புறமென்ன? அதற்கப்புறம் உருவானதுதான் இரு காதல் ஒரு கதை. பன்னீர் செல்வம் என்ற புது இயக்குனரிடம் கதை கேட்டார் லட்சுமி. இசை எங்க அப்பாதான். மற்றதெல்லாம் உங்க விருப்பம் என்று கூறிவிட்டார். டைரக்டர் இன்னும் ஒரு படி மேலே போய், லட்சுமியின் மகனையே இந்த படத்தில் ஹீரோவாக்கிவிட்டார். ஏதோ குடும்பத்தினரின் ஆசைக்காக உருவான படம் என்று அலட்சியமாக நினைத்தால், அங்குதான் செக் வைக்கிறார் இசையமைப்பாளர் குஹா. ஒவ்வொரு பாடலும் தெறிக்க விடும் ஹிட் ட்யூன்கள். பாடல்களை ஒருமுறை கேட்கும்போதே, திரும்ப திரும்ப மனசுக்குள் ரிப்பீட் ஆகும் கலக்கல் ட்யூன்கள்.
படத்தில் ஒரு முக்கியமான பாடலை பாடியிருக்கும் கானா பாலா, ‘அந்த சகோதரி அவரோட அப்பாவுக்காக இந்த படத்தை எடுத்திருக்காங்க. அந்த சகோதரிக்காக நானும் ஒரு உதவி பண்ணணும்னு நினைக்கிறேன். நீங்க படம் ரிலீசப்போ சொல்லுங்க. என் செலவுல 10 ஆயிரம் போஸ்டர் அடிச்சு தர்றேன். அது மட்டுமல்ல, நான் இந்த படத்தில் பாடி நடிச்சதுக்கு உங்ககிட்ட முதல்ல ஒரு சம்பளம் கேட்டேன்ல? அது இப்போ வேணாம். நீங்களா பார்த்து, இந்தா இவ்ளோதான்னு சொல்லுங்க. வாங்கிக்கிறேன்’ என்று நெகிழ வைத்தார்.
ஒரு சினிமா விழா உள்ளே போகிற வரைக்கும் ஒரு மன நிலையில் வைத்திருக்கிறது. வெளியே வரும்போது வேறொரு மன நிலைக்கு தள்ளுகிறது. இரு காதல் ஒரு கதை படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஏதோ அவரவர் குடும்ப விழா போல முடிந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
லட்சுமி… உங்க அப்பாவை வச்சு இன்னும் பல படங்கள் எடுக்கணும். வாழ்க… வளமுடன்…
அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள்....