மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சி….

“பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார், பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்”, கரகாட்டக்காரன் படத்தோட டைட்டில் பாடல்ல இளையராஜா பாடி இருப்பார். ஒவ்வொரு பாட்டை உருவாக்கும்போதும் நிகழ்ந்த கதைகள் நிறைய கேள்விபட்டிருப்போம்.

ஆனா அந்தப்பாட்டுக்கள், நம்ம வாழ்க்கையில உருவாக்குன கதைகளை நம்ம கணக்கெடுத்து பாத்ததில்ல. ஏன்னா அந்தக்கணக்கை அவ்வளவு சீக்கிரம் எடுத்துற முடியாது. அதுலயும் இளையராசா பாட்டுன்னா சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு ஊர்லயும் வண்டி கட்டி ஏத்திக்கிட்டு வரலாம்கிற அளவுக்கு ராசாவோட பாட்டுக்களோடு கலந்த கதைகள் இருக்கும்.

கண்ணாடி ஏசுராஜன் சித்தப்பா, எங்க ஊர் மோகன்னு பேர் எடுத்தவர். ஒரு டேப் ரெக்கார்டரை திண்ணையில வச்சிக்கிட்டு “வானுயர்ந்த சோலையில” தொடங்கி “மலையோரம் வீசும் காத்து” வரை சோக வாசம் வீச வைப்பார். அந்தப்பாட்டுக்களை வச்சி அவர் காதலிச்ச பொண்ணுங்க லிஸ்ட் பெரிசு.

ஏசுராஜன் சித்தப்பா, கிரேஸ் அக்கா, சமுத்திரம் மாமா, ஞானசாந்தி அத்தை, இசக்கியப்பன் அண்ணன், அன்னபூரணி சித்தி, கஜேந்திர மாமா, திராவிடமணி மாமன், கட்ட உதேக்(உதயகுமார் தான் இப்டி சின்னதா ஆயிருச்சி) அண்ணன், மோகன் சித்தப்பா… இவங்க தான் எங்க ஊர்ல முன்னணி பின்னணி பாடக, பாடகியர்கள்.

பொங்கல் விழான்னு வந்துட்டா, இந்த வருசம் பாட்டுப்போட்டில யார் ஜெயிக்கப்பாங்கன்னு, மேட்ச் பிக்சிங் நடக்குற அளவுக்கு பரபரப்பா இருக்கும். இந்தப்பட்டியல்ல உள்ளவங்க பாடுற பாட்டை வச்சி, அந்தப் பாட்டை அவங்க யாருக்காக பாடுறாங்கன்னு கூட்டத்தில சலசலப்பு கௌம்பும். பாட்டுப்போட்டிங்கிற பேர்ல, அவங்க அவங்க பழைய காதலை நெனைச்சி உருகிப் பாடுறது சம்பந்தப்பட்டவங்களுக்கு மட்டுமில்லாம ஊருக்கே தெரிஞ்சிருக்கும்.

அந்த அளவுக்கு ஒவ்வொருத்தர் இதயத்துக்குள்ளயும், வாழ்க்கைக்குள்ளயும் பாட்டுக்கள் குவிஞ்சி கெடக்குது. எங்க செட் பையன்ங்க பாட்டுப்போட்டில கலந்துக்கிறேன்னு சொல்லிக்கிட்டு நேரடியா காதலையே அந்தப்பாட்டுல சொன்ன கதையெல்லாம் இருக்கு. அதோட அவன், இந்தப்பாட்டை, அவளுக்காகத்தான் பாடினான்னு, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க… அந்த காதல் பாடகர் மேடையை விட்டு இறங்கும்போதே பின்னிப்பெடலெடுத்த கதையெல்லாம் இன்னும் சுவாரஸ்யம்.

ஊருணி, குளம், கெணறு, பம்பு செட்டு, வாய்க்கா, வரப்பு…. எல்லா இடத்துலயும் பாட்டு, பாட்டு, பாட்டுத்தான். அது தெரிஞ்சி தான் என்னவோ, “ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது”ன்னு ஒரு பாட்டு போட்ருப்பாங்க போல..

கல்யாணம், சடங்கு(மஞ்சள் நீராட்டு)… இப்டி வீட்ல என்ன விசேசம்னாலும் ராத்திரி மைக்ல ஒரே பாட்டுத்தான். “எடுத்து வச்ச பாலும், விரிச்சி வச்ச பாயும் வீணாகத்தான் போகுது, அந்த நிலாக்காயுது” பாட்டு, கொழுந்தியா பாக்யலெச்சிமியோட ஃபேவரைட் பாட்டு. கல்யாணமே ஆகலேன்னாலும் அவ உருகி உருகி இந்தப்பாட்டை பாடுவா. ஏன்னா, அவ விஜயகாந்த் ரசிகை. அவளுக்கு நாங்க நெறைய பேர் ரசிகர்கள்.

ஊருக்குள்ள யாரைப்பாத்தாலும் அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு கதையில ஏதாச்சும் ஒரு பாட்டாவது கண்டிப்பா இருக்கும். அந்தப்பாட்டு அவங்க வாழ்க்கையில எப்டி வந்துச்சிங்கிற கதையக்கேட்டா அது பாட்டை விட அது தித்திப்பா இருக்கும். அப்படி என் வாழ்க்கையில இருக்கிற, என்க்குத் தெரிஞ்ச சில பாட்டுக்கதைகளை இந்த தொடர்ல உங்களோட பகிர்ந்துக்கலாம்னு ஆசைப்படுறேன். இப்பேர்ப்பட்ட இனிப்பான பாட்டுக்கதைகள் உங்க மனசுலயும் இருக்கலாம், உங்க பக்கத்துல இருக்கிறவங்க மனசுலயும் இருக்கலாம். இந்தக் கதைகளை வாசிக்கும்போது…. உங்களுக்கு உங்க கதைகள் நினைவுக்கு வந்தா அதை என்னோட சந்தோசமா எடுத்துக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இளையராஜா என்று ஆரம்பித்தேன். பள்ளிக்கூட வாசம் இல்லாத சித்தியின் முகத்தில் ஒரு நொடியில் பல மொழிகளை வாசித்தேன். கண்களில் பிரமிப்பும் சாந்தமும் ஒருசேர மின்னியதை ரசித்தேன்.

ராஜாவின் பாட்டு என்றால் உனக்கு எந்தப்பாட்டு நினைவுக்கு வரும், ஏதாவது ஒரு பாட்டு சொல் என்றேன். நம்மில் யாருக்குமே சாத்தியமில்லாத ஒன்று அது. ஒரே ஒரு பாட்டு என்றால்… சித்தியின் முகத்தில் அதெப்படி ஒரு பாட்டை மட்டும் சொல்வது என்ற எதிர்க்கேள்வி. சரி… ஒவ்வொன்றாக சொல் என்றேன்.

அவள் வார்த்தையில்… அவள் வாழ்க்கையில் ராஜாவின் ராகம்….

“நான் சின்ன வயசுப்பொண்ணா இருந்த காலம், வருசா வருசம் நடக்கிற அம்மன் கோயில் கொடைவிழா… மேள செட்டு, கரகாட்டம்னா எனக்கு மட்டுமில்ல… ஊருல உள்ள எல்லாருக்குமே ஒரு இது இருக்கும். “குழந்தை ஆழ்வார்” மேள செட்டுன்னா நம்ம ஏரியாவுல அவ்ளோ செல்வாக்கு. நம்ம ஊருக்கும் அந்த குழந்தை ஆழ்வாருக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

ஒவ்வொரு வருசமும் குழந்தை ஆழ்வார் மேளந்தான் வேணும்னு வரி பிரிக்க கூட்டம் போடும்போதே ஆம்பளைங்க சொல்லிருவாங்க. கூடுமான வரை குழந்தை ஆழ்வாருக்கு சௌகர்யப்பட்ட தேதியாப் பாத்து கொடை விழாவை வைப்பாங்க. ஆம்பளைங்க வாய் தொறந்து சொல்லிருவாங்க… பொண்ணுங்களுக்கெல்லாம் வாய் தொறந்து சொல்லமுடியாது. இந்த வருசம் கொடைக்கு குழந்தை ஆழ்வார் மேளம்னு தெரிஞ்சா நம்ம ஊர்ப் பொண்ணுங்களுக்கு நடுநாக்குல நாலு குடம் தேன் ஊத்துன மாதிரி… அவ்ளோ இனிப்பான செய்தி அது.

நம்ம ஊரு பொண்ணுங்கள்ல பாதிப்பேரு அவனுக்கு பரம ரசிகைகள். அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட நிறையப்பேரை எனக்குத் தெரியும்.

ஒடிசலான தேகம், மஞ்ச மஞ்சேன்னு ஒடம்பு, என்னத்த திம்பான்னு தெரியல, அந்தக் கலருக்கு. கலர் கலரா சிலுக்கு சட்டை போடுறதுல ராமராஜனுக்கெல்லாம் அவன் பெரியப்பன். ஏற்கனவே மஞ்சக்கலரா இருப்பான். வாயில பீப்பிய (நாதஸ்வரம்) வச்சி ஊதி ஊதி உதடு ரெண்டும் ரெத்தச் செவப்பா இருக்கும். அது போதாதுன்னு வாய் நெறைய மலையாள வெத்தலை போட்டு செவச் செவேன்னு… நாலு பக்க போகஸ் லைட் வெளிச்சத்துல கூட்டத்துக்கு மத்தியில… சில்க் சட்டை மின்ன…பீப்பீ எடுத்து வாயில வச்சிட்டான்னா ஒட்டு மொத்த கூட்டமும் சைலண்ட் ஆயிருவோம்.

“மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சி “ன்னு அவன் வாசிக்கும்போது எளசுல இருந்து பெரிசு வர… வேறெதைப் பத்தியும் யோசிக்காம மயங்கி நிப்போம்.

பாட்டை ஒரு சீரா வாசிக்கிறவன், திடீர்னு ஆயில் மோட்டார் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா வேகமா வாசிக்க ஆரம்பிப்பான். அதுக்கேத்த மாதிரி மேளக்காரங்களும் வேகமா அடிப்பாங்க. அவனோட நாதஸ்வரம் ஸ்பீடுக்கும் கண்ணுக்கும் ஜாடை காட்டியபடியே கரகாட்டக்காரிகளும் வேர்க்க, விறுவிறுக்க ஆடுவாங்க.

அதுலயும் இடையில வர மியூசிக்க… நிப்பாட்டி நிப்பாட்டி வாசிப்பாங்க பாரு, அருள் வராத சாமியாடியெல்லாம் கூட இந்த மஞ்சக்குளிச்சி மெட்டுல தனக்கே தெரியாம ஆடிக்கிட்டு இருப்பாங்க.

ராத்திரி இப்டின்னா மூணாவது நாள் சாமி ஊர் சுத்தி வரும்போது உள்ளுர் வெடலைகளெல்லாம் தெருவுல ஆட ஆரம்பிச்சிருவாங்க. ஒரே ஒரு தப்பட்டையை மட்டும் சாமிக்கு தொணையா அனுப்பி வச்சிட்டு குழந்தை ஆழ்வார் செட்டு மேளத்தை கூண்டோட நம்ம இளவல் படை தள்ளிட்டு வந்திரும்.

ஆடுற மாமன் மச்சானைப் பாக்கிறதை விட, வாசிக்கிற குழந்தை ஆழ்வார் மேல தான் பொண்ணுங்க கண்ணு இருக்கும். “பார்டி எப்டி வாசிக்கிறான்னு…” அவனைப் பிச்சு திங்கிற மாதிரியே பாப்பாளுக.

எப்போ, எங்க அந்தப்பாட்டைக் கேட்டாலும் அந்த வயசுக்கு போயிட்டு திரும்பி வருவேன் நான்”

இமைக்காமல் இடை மறிக்காமல் சித்தியிடம் கதை கேட்டு முடித்தேன்.

காரணம் குழந்தை ஆழ்வாருக்கு மயங்கிய அந்த கூட்டத்தில் நானும் ஒருவன். அந்த ஒரே ஒரு பாட்டு எல்லா வருட கொடைவிழாக்களிலும் திரும்ப திரும்ப பாடப்பட்டது, ஆடப்பட்டது. கொண்டாடப்பட்டது.

பாட்டுக்கள் மூலமாக கதை சொல்வது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் பல கதைகளுக்கு காரணமாக இ
ளையராஜாவின் பாட்டுக்கள் இருந்திருக்கிறது. இருந்திருக்கக் கூடும். அல்லது அந்தக்கதைகள் ராஜாவின் பாட்டோடு பின்னிப் பிணைந்தே இருக்கும்

உங்களிடமும் அப்படி கதைகள் இருக்கலாம். அப்படிப்பட்ட ராஜாவின் பாடல்கள் பின்னி பிணைந்த கோடிக் கதைகளில் சில பத்துக் கதைகளையாவது சொல்ல முயற்சிக்கிறேன்.

அந்த கதைகளை இசைஞானிக்கே சமர்ப்பிக்கிறேன்.

(இசை வளரும்)

Read previous post:
நஸ்ரியா அனுப்பிய MMS – ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஒண்ணு கூடிட்டாங்க!

கண்ணு மண்ணு தெரியாம காதல்ல விழுந்தா ஊரே கூடி உருமியடிக்கும் என்கிற விஷயத்தை இனிமேலாவது உணர்வாரா நஸ்ரியா? இப்படிதான் இந்த செய்தியை எழுதி முடிக்கணும். ஏன்னா, நஸ்ரியா...

Close