13வது திருத்த நடைமுறையில் உறுதி.. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
கொழும்பு: ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தீவிரம் காட்டுவதைக் கண்டித்து கொழும்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜிவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது திருத்ததம். இதன்படி ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும். ஆனால் அண்மைக்காலமாக அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தையே ரத்து செய்ய இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிகளை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பியிருந்த பிரதமர் மன்மோகன்சிங்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று கூறியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து கொழும்பில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கையில் இந்தியாவின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன
.