1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
சென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த 11ம் தேதி முதல் கடலில் கரைத்து வருகின்றனர். சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 14, 15, 16 மற்றும் 18ம் ஆகிய தேதிகளில் கடலில் கரைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் எடைமேடை, கார்போரைட் யுனிவர்செல் நிறுவனத்தின் பின்புறம் இருக்கும் கடற்கரை, எண்ணூர் ராமச்சந்திரா நகர் என மொத்தம் 6 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சிவசேனா கட்சி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. மேலும் இன்று 2வது நாளாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இந்து முன்னணி அமைப்பினர் இன்று விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர். திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் பேட்டையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் 1,400 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நகரில் பாதுகாப்பு பணியில் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் பட்டினப்பாக்கத்தில் அதிகமான சிலைகள் கரைக்கப்படுவதால் அங்கு புறக்காவல் நிலையம், மின் கட்டுப்பாட்டு அறை, 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து இந்த முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ் தாஸ், இணை கமிஷனர்கள் சண்முகவேல், சங்கர், ஸ்ரீதர், திருஞானம் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டனர்.