1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம்

1800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்திய போர் வீரர் தனது குடும்பத்தாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.1899-ம் ஆண்டு எகிப்து நாட்டின் டெப்டுனிஸ் நகரில் தொல்லியலாளர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த இந்த கடிதம் பெரும்பாலும் கிரேக்க வார்த்தைகள் கொண்டதாக உள்ளது. கிடைத்தபோது இந்த கடிதம் மிகவும் மக்கிய நிலையில் இருந்ததால் இதனை மொழிப்பெயர்த்து கடிதத்தில் உள்ள விபரங்களை அறிந்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை.

அமெரிக்காவில் மத சித்தாந்தம் தொடர்பான கல்வியை பயின்று வரும் கிராண்ட் ஆடம்சன் வசம் கடந்த 2011-ம் ஆண்டு இந்த பணி ஒப்படைக்கப்பட்டது. சிதிலமடைந்து, தூள்தூளாகிப்போன அந்த கடிதத்தை தூசி தட்டி, ஒட்ட வைத்து பழமையான கிரேக்க மொழியகராதி மற்றும் எழுத்தகராதியின் துணையுடன் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள செய்தியை முழுமையாக தற்போது மொழிப்பெயர்த்துள்ளார்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தை ஆட்சி செய்த ரோமானியப் பேரரசின் ராணுவத்தில் பயிற்சி வீரராக இருந்த இவரது கடிதம், குடும்பத்தை பிரிந்து போர்க்களங்களில் காலம் தள்ளும் ராணுவ வீரர்களின் மனநிலை எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாகதான் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆரெலியஸ் போலியான் என்ற அந்த வீரர் தனது சகோதர, சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது:-

கடவுள் அருளால் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் நான் வேண்டி வருகிறேன். உங்களைப் பற்றியே எப்போதும் நினைப்பதையும், உங்ளுக்கு கடிதம் எழுதுவதையும் நான் நிறுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், எனது கடிதங்களுக்கு எந்த பதிலையும் நீங்கள் இது வரை தெரிவிக்காததால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை எல்லாம் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.

இது நான் உங்களுக்கு எழுதும் ஆறாவது கடிதம். உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு இருந்தால் இந்த கடிதத்துக்காவது பதில் எழுதுங்கள். உங்கள் கடிதம் கிடைத்ததும் மேலதிகாரியிடம் விடுப்பு வாங்கிக் கொண்டு, நான் உங்களை வந்து சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஆரெலியஸ் போலியான் எழுதியுள்ளார்.

எழுத்தறிவு மிகவும் குறைவாக இருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே அந்த வீரரின் கிரேக்க மொழியறிவும், இலக்கணச் செறிவும், கையெழுத்தும் மிகப் பிரமாதமாக உள்ளது என்று கிராண்ட் ஆடம்சன் வியப்பு மேலோங்க கூறுகிறார்.

Read previous post:
என்னது…? மயிலுக்கு இவரு ஜோடியா?

ஒரு காலத்தில் பெரிய இயக்குனர்களாக கொண்டாடப்பட்ட எவரும் நடிகர்களாக மாறிய நேரத்தில் ‘அட கண்றாவியே’ என்று கலங்கதான் வைத்திருக்கிறார்கள். அதுவும் கே.பாலசந்தரும், பாரதிராஜாவும் நடிகர்களாகவும் களமிரங்கிய ரெட்டச்சுழி,...

Close