நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்-

இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங் கிளாஸ் அணிந்து கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் ராசிக்கு கருப்பும் ஆகாது. சிவப்பும் ஆகாது. நடுவில் கொஞ்சம் வெள்ளை இருக்கலாமா என்பதை குடும்ப ஜோதிடரிடம் கலந்தாலோசிக்கவும். ராசி நிறம் நரைத்த வெள்ளை. திசை இமயமலை!

கமல்-

வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும் கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர் மூலமாகவோ கூட பேசாமலிருப்பது நல்லது. பின்பு அது பேட்டியாக வந்துவிட்டதே என்று புலம்புவதை கணிசமாக குறைக்கும். நீண்ட வருஷங்களாக பரணில் போட்டு வைத்த பழசு பட்டுகளுக்கு திடீர் மரியாதை கிடைக்கும். வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு, வாசலில் தேங்கியிருந்த குப்பை கூளங்கள் அகலவில்லையே என்று கடந்த வருஷத்தில் நீங்கள் பட்ட கவலை ராசிநாதனின் அமைதி காரணமாக மெல்ல மெல்ல மறையும். பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து சந்திரனை வழிபட்டால், நீங்கள் பேசுவதை நீங்களே புரிந்து கொள்கிற அளவுக்கு வாக்கில் நலம் கூடும்! ராசி நிறம் கருப்பு. திசை- ஈரோடு

அஜீத்-

காலுக்கு வந்த கண்டசனியை தோளில் விழுந்த துண்டு சனியாக கருதி ஆபரேஷன் செய்து கொண்டிருப்பீர்கள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, வெள்ள நேரத்தில் மட்டும் கண்ணை மறைக்கும் நோய் வந்து மறையும். எதற்கும் முடிச்சூரிலிருக்கும் மூகாம்பிகையையும், கோட்டூரபுரத்திலிருக்கும் கோலவிழியம்மனையும், அடையாறில் இருக்கும் ஆஞ்சநேயரையும் முட்டிக்கால் நீரில் நின்று மூன்று முறை சுற்றி வந்தால் மனபாரம் குறையும். கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் புதனின் நேரடி பார்வை இருப்பதால் எல்லா தொடர்புகளையும் துச்சமென விலக்கி வைப்பீர்கள். குறிப்பாக பத்திரிகையாளர்களை கிட்டவே சேர்க்க மாட்டீர்கள். சிவப்பு ஜிப்பா, மொட்டை தலையுடன் வேதாளக் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததை இந்த வருடமும் தொடர்வது சிறப்பு. ராசி நிறம் வெள்ளை. திசை வீட்டுக்குள்ளேயே எதுவாக இருந்தாலும்…

விஜய்-

போன வருஷத்தில் புலியடித்து அதனால் கிலியடித்துப் போயிருந்தீர்கள். ராசிநாதன் சற்று பலமாக இருப்பதால் இந்த வருடம் தெறிக்க விடுகிற யோகம் வரும். பயண காலங்களில் பெண் தெய்வங்கள் சில உங்களுக்கெதிராக உக்கிர கதியில் இயங்கி வருவதால், அந்த தெய்வங்களின் காந்த பலம் அதிகம் வீசும் போயஸ் பகுதியை தவிர்ப்பது நல்லது. அடுக்குமொழி பேசுகிறவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது உங்களை பார்த்து மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்! இந்த வருஷமாவது கட்சிக் கொடி தைக்கலாம் என்று கவர்ச்சி திட்டத்துடன் அழைக்கும் டெய்லர்களின் சகவாசத்தை இன்னும் நாலைந்து வருஷத்துக்கு ஒத்திப் போடுவது நலம். ஜல ராசிப்படி உங்களுக்கு தோஷம் வந்து சில வாரங்கள் ஆகியிருப்பதால், கோட்டூர்புரம், அடையார், முடிச்சூர் பகுதிகளை காரில் சுற்றி வந்தாவது வணங்கி பாவம் நீக்கிக் கொள்ளலாம். தோஷ நிறம் மஞ்சள் கருப்பு. தவிர்க்க வேண்டிய திசை வண்டலூர்.

சூர்யா-

சூரியனின் உச்சம் பெற்றவராதலால், வாழ்க்கை ‘ஜோ’வென்று பிரகாசமாக இருக்கும். “என்னை அறிந்தால் எல்லா சுபிட்சமும் தருவேன்” என்று நெருங்கி வரும் மேனன்களை தவிர்ப்பது தொழிலுக்கு நல்லது. பாலோ, தயிரோ என்ற குழப்பமே வேண்டாம். சைக்கோவா இருப்பாரோ என்று சந்தேகப்படும் நபர்களை தவிர்த்தால், இரண்டு வருஷத்துக்கு முடங்க வேண்டிய அவசியம் இருக்காது. மார்கண்டேயனின் அருளும் இருப்பதால் தோற்றப் பொலிவில் எந்நாளும் குறை வராது. ஒரு சிலேட்டில் அ- என்று எழுதி, அதை தினந்தோறும் படித்துவர, எல்லா நற்பெயரும் தானாக வந்து சேரும். நிறம்- பளிச்சென்ற எதுவும். திசை- அப்பா ரூம்!

தனுஷ்-

கஷ்ட திசை ‘மாரி மாரி’ அடித்ததால், வாழ்க்கையே வெறுத்து ‘போடா சோமாறி’ என்கிற அளவுக்கு விரக்தியடைந்திருப்பீர்கள். தங்கம் என்று நம்பி இறங்குகிற காரியங்கள், தகரமாகி நஷ்டம் ஏற்படுத்தும். மனைவி ஸ்தானமே பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருப்பதால், அவரை நம்பி பணம் போடுவதை தவிர்க்கவும். பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். குறிப்பாக இந்தி கைகொடுக்கும். வாழ்நாள் முழுக்க நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம், பீமன்தான்! அவ்வப்போது பிள்ளையாருக்கு கொழுக்கட்டைகளை படைத்து யாருக்கும் கொடுக்காமல் தின்று வந்தால் ஒல்லி தோஷம் நீங்கும்! ராசி நிறம் மாநிறம். திசை மாமனார் வீடு.

சிம்பு-

பேச்சாயி அம்மனின் அருளைப் பெற முடியாத துர்பாக்கியசாலி நீங்கள்தான். அதனால் சுமார் ஆறு வருடங்களுக்கு பேசவோ, பாடவோ, முணுமுணுக்கவோ, கூடாது. முக்கியமாக முக்கால் கிலோ எடையுள்ள நண்பர்கள் வந்தால் முற்றிலும் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது ‘குண’சந்திரிகா யோகத்தை கொடுக்கும். நாட்டு மருந்து கடையில் ‘மண்டை’ வெல்லத்தை வாங்கி தூள் தூளாக அரைத்து செல்போனுக்கு அபிஷேம் செய்து வந்தால் துர் சக்திகள் விலகும். நந்தி காதில் தொடர்ந்து ஓதிவர, ரகசியங்கள் கசியாமல் காக்கப்படும். பிடித்த நிறம் வெள்ளை. திசை – புழலாகவும் இருக்கலாம், வேலூராகவும் இருக்கலாம்!

விஜய்சேதுபதி-

கடந்த வருடம் ஆரஞ்சு மிட்டாய்க்கே அதிகம் செலவு செய்திருப்பீர்கள். கடைசியில் வாயின் ஓரத்தில் எறும்பு கடித்ததுதான் மிச்சம் என்று லாப நஷ்ட கணக்கு முடிந்திருக்கும்! வருஷ இறுதியில் நீங்கள் காட்டிய ரவுடி இமேஜுக்கு நல்ல மரியாதை இருந்ததால், வீரனை வணங்கி இனி வரும் காரியங்களை துவங்கலாம். ‘இடம் பொருள் ஏவல்’ தெரிந்த உங்களையும் கூட, வக்கிர சனி சொத்துக்களை விக்கிற சனியாக நின்று கஷ்டம் கொடுத்திருப்பார். இந்த வருடம் தர்ம துரையாக பெயரெடுப்பீர்கள். தவிர்க்க வேண்டிய நிறம் ஆரஞ்சு. தவிர்க்க வேண்டிய திசை -பைனான்சியர்ஸ் வீடு.

சிவகார்த்திகேயன்-

முருகனின் அருள் கிடைக்காமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அல்லாடி வருகிறீர்கள். அந்த வருத்தம் இந்த பொங்கலோடு போய்விடும். சொந்த வீட்டில் சுக்கிரன் உட்கார்ந்திருப்பதால், கல்லாபெட்டி சிங்காரமாக கவலையற்று இருப்பீர்கள். உங்கள் லக்னத்திலிருந்து வடக்கில் அமைந்திருக்கும் மதுரைக்கு செல்லும்போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருந்தால் பின் கழுத்தில் அடிபடுவதை தவிர்க்கலாம். முகம் தெரியாத நபர்கள் கையை ஒங்கிக் கொண்டு வந்தால், அங்கிருந்து ‘கமல’ பாதங்கள் தெறிக்க தெறிக்க ஓடிவிடுதல் பூர்வாசிரம கஷ்டங்களுக்கும் சேர்த்து விடுதலையளிக்கும். திருப்பதி, ஏழுமலை, போன்ற வேங்கடனின் பெயர் கொண்டவர்களை தொலைவிலிருந்தே வணங்கிவிட்டு ஓடிவிடுதல் நலம் பயக்கும். பிடித்த நிறம் நீலம். பிடித்த திசை நாலா திசையும்.

நயன்தாரா-

அண்ணாநகர் ராகுவும், தி.நகர் கேதுவும் வாழ்வில் மாறிமாறி வந்து தொல்லை கொடுத்த காலம் போன வருஷத்தோடு போச்சு. தும்பிக்கை விநாயக விக்னேஷன் அருளால் நெற்றியில் பொட்டும், காலில் மெட்டியுமாக இல்லறம் செழிக்க நடப்பீர்கள். மூன்றெழுத்துக்காரர்களால் மன உளைச்சல் ஏற்பட்டாலும், வினை விதைத்தவனே அதை அறுப்பான் என்ற நம்பிக்கையுடைய உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வீடு வாங்கினாலும் ‘கோடி’ வீடாக பார்த்து வாங்குவீர்கள். இதுவரை வணங்கி வந்த மன்மதனை விட்டுவிட்டு எப்போது விநாயக விக்னேஷ்வரனை வணங்கினீர்களோ, அன்றே பீடை ஒழிந்தது. பிடித்த நிறம் வெள்ளை. திசை- வாடிகன்

விஷால்-

கடந்த சில வருடங்களாகவே ‘வரலட்சுமி’ விரதம் இருந்து வந்த நீங்கள், இந்த வருஷம் மூக்கு முட்ட விருந்து சாப்பிட்டு அந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம். புதன் செவ்வாய் உள்ளிட்ட எல்லா கிரகங்களும் அபிபுல்லா சாலையில் கூடியிருப்பதால், இந்த வருஷம் கட்டிட யோகம் உண்டு. நற்பலன்கள் விளைந்தாலும், வக்கிரசனி அவ்வப்போது அச்சப்படுத்தி வருவதால், நாட்டாமைகளையோ, பஞ்சாயத்து தலைவர்களையோ கண்டால், கண்டவுடனேயே உடலில் உஷ்ணம் ஏற்படும். இதற்கு மருந்தும் இல்லை, மாத்திரையும் இல்லை. பரிகாரமும் இல்லை என்பதால், காணாமலிருப்பதே உத்தமம்! பிடித்த நிறம் கருப்பு. திசை- ஆந்திரா, தமிழ்நாடு.

நமீதா-

‘குன்று’ இருக்கும் திசையெல்லாம் குமரன் இருக்கும் திசை என்று அவரையே வணங்கி வந்தீர்கள். உங்களையே ‘பக்தி குன்று’ என்று பாடி பரவசம் கொண்டனர் பக்தர்கள். புது வருஷம் உங்களை இறகு போல ‘வெயிட் லெஸ்’ ஆக்கி விடும். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் ஏகப்பட்ட கூட்டம் நின்று இன்டர்வியூவுக்கு அலைபாய்வதால், திருமண ஆசையை இன்னும் பத்து வருஷத்துக்கு தள்ளிப் போடலாம். கைவிரல் முழுக்க கத்திரிக்கோல் ரேகை பரவிக்கிடப்பதால், ஒரு லட்சம் கடைகளை குறிவைத்து இந்த வருஷத்தை துவங்கலாம். பலன் உண்டு. பிடித்த நிறம்- மெல்லிசாக எதுவும். திசை- தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்!

ஜோதிடப் பலன்களை துல்லியமாக கணித்தவர் – ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி கல்கி வார இதழ்

2 Comments
  1. raj pandian says

    aruva thanga mudiyala…

  2. நடராசன் கி. says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேன்மிட்டாய் சுமந்த அரிசி மூட்டை! போக்கிரி ராஜா படப்பிடிப்பில் ஹன்சிகா நெகிழ்ச்சி

பிளைட்டை பிடிக்கிற அவசரத்திலிருந்தார் ஹன்சிகா மோத்வானி. அவரிடம், “இந்த ஏழைங்களுக்கு கொஞ்சம் உதவி செஞ்சுட்டு போங்களேன்” என்று தயாரிப்பாளர் பி.டிசெல்வகுமார் அழைக்க, கொடி தலையில் கோணிமூட்டையை ஏற்றினார்கள்....

Close