2065ல் டாஸ்மாக் எப்படியிருக்கும்? அட… நம்ம சினிமாவுல செட் போட்டு காட்றாங்களாம்!

‘டைம் மிஷின்’ கதை தமிழுக்கு புதுசு. ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் கொட்டிக்கிடந்தாலும், எதையும் காப்பியடிக்காமல் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் ‘இன்று நோற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார். இந்த டைம் மிஷின் கதையால் தமிழ் சினிமாவுக்கு நல்ல டைம்தானா என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில தினங்கள் காத்திருந்தால் போதுமானது. இந்த படத்தை பற்றி ரவிகுமார் என்ன சொல்கிறார்?

விஷ்ணுவிஷால், அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இந்த படத்தில், கொஞ்சம் வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறேன். சூது கவ்வும் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செய்யும்போது சி.வி.குமாரிடம் இந்த கதையை சொன்னேன். அதற்கப்புறம் அதில் நிறைய மாற்றங்கள் செய்து கொண்டேயிருந்தோம். எங்களுக்கே இது திருப்தி என்று தெரிந்ததும்தான் ஷுட்டிங்குக்கு போனோம். ஒரு நண்பர்கள் குழு டைம் மிஷினில் ஏறி, கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் போகிற கதை என்றால் எவ்வளவோ யோசிக்க முடியும். அதற்கு எல்லையே கிடையாது. பட்ஜெட் இடம் கொடுத்தால், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய காலத்திற்கு கூட போயிருக்க முடியும். ஆனால் பல வருஷங்கள் கடந்து பின்னோக்கி போகவில்லை என்றார்.

சரி… உங்க கற்பனையில 2065 எப்படியிருக்கும்? என்றொரு கேள்வியை போட்டால், உற்சாகமாகிறார் மனுஷன். ‘நம்ம படத்துல அப்படியொரு சுச்சுவேஷனே இருக்கு சார். அப்ப மவுண்ட் ரோடு எப்படியிருக்கும்ங்கறதை செட் போட்டும், கிராபிக்ஸ் மூலமாகவும் உருவாக்கியிருக்கோம். ஒரு சின்ன பிட் மட்டும் சொல்றேன். 2065 ல் மவுண்ட்ரோட் டாஸ்மாக் எப்படியிருக்கும்னு காட்டியிருக்கோம். தலை சுற்றிப் போயிருவீங்க. ஐந்து மாடி கட்டிடத்தில் சும்மா பிரமாதமா இயங்கிக்கிட்டிருக்கும்’ என்றார் ரவிகுமார்.

தமிழனே போதையை மறந்தாலும், மூக்குக்கு நேரா விஸ்கி பாட்டிலை திறந்து காட்டாம விட மாட்டீங்க போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயனின் குட்புக்கில் இடம் பிடிக்கணும்! பிரபல தயாரிப்பாளர் தூண்டில்?

லாட்டரி சீட்ல கோடி ரூபா விழுந்த சந்தோஷம் வரணும்னா ‘ரஜினி முருகன்’ சொன்னபடி ரிலீஸ் ஆனா போதும்! இப்படி சிவகார்த்திகேயனை சுற்றியுள்ள சொந்த பந்தங்களும், சூழ்திருக்கும் நண்பர்களும்,...

Close