36 வயதினிலே – விமர்சனம்
‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா…?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் வரைக்கும் தாங்குகிற அளவுக்கு தன்னம்பிக்கை பூஸ்ட் கொடுத்து தைரியமாக அனுப்பி வைக்கிறார் ஜோதிகா. தமிழ்சினிமா ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியான இவருக்கு இதைவிட சிறந்த ரீ என்ட்ரி வேறென்ன இருக்க முடியும்? ‘மொழி’ மாதிரி படங்களில் அவ்வளவு கஷ்டமான கேரக்டரையே விரல் நகத்தில் வைத்து ஊதிவிட்டு போனவர் அவர். இந்த படத்தில் தரப்பட்டிருக்கும் கனம், அவருக்கு வெறும் சிறகுதான். காட்சிக்கு காட்சி உஃப்பென்று ஊதித்தள்ளுகிறார் ஜோதிகா!
கதை?
தனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அறிவுடன் இருப்பதாக ஜோதிகாவை அலட்சியப்படுத்துகிறார் அவரது கணவர் ரகுமான். கூடவே குழந்தையும் சேர்ந்து கொள்கிறது. கணவனின் லட்சியம் அயர்லாந்தில் குடியேறுவதுதான். ஆனால் மனைவிக்கும் அங்கு வேலை கிடைக்கவில்லை என்றால் காலத்தை தள்ளுவது சிரமம். அதற்காக இன்டர்வியூவுக்கு போகும் ஜோதிகா அங்கு பெயில். ‘நீ வரலேன்னா கூட பரவாயில்லை… நாங்க போறோம்’ என்று கிளம்ப தயாராகிறார்கள் அப்பாவும் மகளும்! இதற்கிடையில் ஸ்கூலுக்கு வரும் இந்திய ஜனாதிபதியிடம் ஜோதிகாவின் மகள் ஒரு கேள்வி கேட்கிறாள். அந்த கேள்வியில் அசந்து போன ஜனாதிபதி, ‘இந்த கேள்வியை உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தா?’ என்று கேட்க, தன் அம்மாவை சொல்லுகிறாள் அவள். உடனே அம்மாவை பார்க்க பிரியப்படுகிறார் ஜனாதிபதி.
தமிழ்நாடே அந்த சந்திப்பு பற்றி ஆவலாக இருக்க, நேரில் பார்க்கும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தில் லொபக்…(?). மயங்கி விழுகிறார் ஜோதிகா. இது போதாதா? ஊரும் உலகமும், பேஸ்புக்கும், ட்விட்டரும், கிண்டலுக்குள்ளாக்குகிறது அவரை. கூடவே கணவனும் குழந்தையும் சேர்ந்து கொள்கிறார்கள். அங்கு தவறவிட்ட அந்த மரியாதையை மீண்டும் அவர் அதே ஜனாதிபதியை பார்த்து பெறுவதுதான் க்ளைமாக்ஸ்!
ஓ…… ஒரு தென்றல் புயலாகி வருதே… என்றெல்லாம் போட்டு மிரட்டாமல், அழகாக மிக அழகாக ஸ்டெப் வைத்து நடக்கிறது திரைக்கதை. ஒருவர் லேசாக தடுக்கி விழுந்தால் போதும். மேலே கல்லை வைத்து சமாதி கட்டிவிடுவார்கள் என்பதற்கு அந்த பேஸ்புக் குரூப்பும், அதற்கு வந்த ஒரு லட்சம் லைக்ஸ்சும்தான் உதா‘ரணம்!’ பின்பு அதே பேஸ்புக்கில் ஜோதிகா தனது சிற்றுரையை வழங்குகிற காட்சிதான் எவ்வளவு அழகு! அதற்கப்புறம் எண்ட் வரைக்கும் வின்ட் மில் வேகம்தான்!
பட ஆரம்பத்திலேயே போலீஸ் கமிஷனர் ஆபிஸ். ஜோதிகாவை பின் தொடர்ந்து வேவு பார்க்கும் போலீஸ் என்று கதை க்ரைம் ஸ்டைலில் ஆரம்பிப்பதால், சற்றே குழம்பி ‘இதுல வயலன்ஸ் இருக்குமோ?’ என்று எண்ண வைக்கிறார் டைரக்டர் ரோஷன் ஆன்ட்ரூஸ். வயலன்ஸ் இல்லை. வாழ்க்கைக்கு தேவை இதுதாண்டா என்கிற வாழ்க்கை சயின்ஸ் இருக்கிறது படத்தில். அதுவும் நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் என்னவெல்லாம் தில்லுமுல்லு நடக்கிறது என்பதை அவர் விவரிக்கிற விதம், மனுஷனை நாலு நாளைக்கு பொரியல் கூட்டு பக்கம் போக விடாது போலிருக்கே? கொஞ்சம் விட்டிருந்தாலும், கதை வயலும் வாழ்வுமாக முடிந்திருக்கும். கவனமாக கையாண்டிருக்கிறார் ரோஷன்.
லேசாக கண்கலங்க விடுகிற பல காட்சிகள் படத்திலிருந்தாலும், அந்த பாட்டியின் குடிசைக்கே தேடிப்போய் விசாரிக்கும் ஜோதிகா, நான் கூட உன் பொண்ணுதான் என்று கூறி கண்கலங்குகிற போது, நமக்கும் கொஞ்சம் கண்ணோரத்தில் நீர்த்துளி!
படம் முழுக்க சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட நாசர், ஜெயப்ரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற தேர்ந்த நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களும் முழ நீளத்துக்கு வசனம் வேண்டும் என்று அடம் பிடிக்காமல், கொடுத்த சட்டைக்குள் நச்சென்று பொருந்தியிருக்கிறார்கள்.
கல்லூரி தோழியாக இருந்து, வெளிநாட்டில் கோடி கோடியாக சம்பாதிக்கும் சூசன் டேவிட் கேரக்டரில் அபிராமி. ஜோதிகா விளக்கென்றால் இவர்தான் அந்த திரியை தூண்டிவிடுகிறவர். இவருக்கும் இந்த படம் ரீ என்ட்ரி. ஜோதிகாவுக்கு வழங்கிய அதே பெருமையை அபிராமிக்கும் வழங்கியிருக்கிறார் ரோஷன் ஆன்ட்ரூஸ்.
படத்தின் ஆகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. வாடி ராசாத்தி பாடல் டைட்டிலில் முடிந்து போனது சற்றே வருத்தம்தான்! அதே போல நாலு கழுத வயசாச்சு பாடலையும் படம் முடியும் போது போடுகிறார்களா? படம் முடிந்தும் வெளியே வர விடாமல் இழுத்துப்பிடிக்கிறது அது. பின்னணி இசையிலும் மென் டச் கொடுக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
வாக்கிங் போகிற காட்சிகளில், தனக்குள் தேங்கியிருக்கும் அந்த திடீர் தன்னம்பிக்கையை ஜோராக முகத்தில் காட்டிவிட்டார் ஜோ. அவர் முன்னிலும் வேகமாக எழுந்து நிற்கிறார் என்பதை கேமிராவின் மூலம் சொல்ல வேண்டுமே? சற்றே லோ ஆங்கிளில் கேமிராவை வைத்து எல்லாரையும் நிமிர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.திவாகரன்.
‘இதென்ன சட்டசபைன்னு நினைச்சியா, நினைச்ச நேரத்துல வந்து கையெழுத்து போடுறதுக்கு?’ -இப்படி போகிற போக்கில் நாட்டு நடப்பை வாரிவிட்டு போகிறது விஜியின் வசனங்கள்.
நூறு ரூபாய் கொடுத்து தியேட்டரில் டிக்கெட் வாங்கினால், நூறு கிலோ தன்னம்பிக்கை கிடைக்குமா? அதெப்படி என்பவர்கள் ஒரு முறை 36 வயதினிலே படத்திற்கு போங்களேன், புரியும்!
-ஆர்.எஸ்.அந்தணன்