பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது
சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செங்கடலின் ஓரம் அமைந்துள்ள நகரம் அல் குன்ஃபுடா. இங்கு வசிக்கும் 90 வயது முதியவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அருகாமையில் உள்ள கிளினிக்குக்கு தூக்கிச் சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், இதய துடிப்பு நின்று விட்டதால் உயிர் பிரிந்து விட்டதாகவும், அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
எனினும், அந்த முதியவரை பிரிய மனமில்லாத உறவினர்கள், நம்பிக்கையை இழக்காமல் அவரை ஒரு காரில் போட்டுக் கொண்டு 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் நின்றுப் போன முதியவரின் இதயத்தை மின்சார அதிர்ச்சியின் மூலம் மீண்டும் இயங்க வைக்க முயற்சித்தனர். தொடர்ந்து சில முறை மிதமான மின்சாரத்தை அவரது மார்புப் பகுதியில் செலுத்தியதில் இயக்கத்தை இழந்த இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
அந்த 90 வயது முதியவர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என அரபு நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.