‘முதல் நாளே ரஜினி வாழ்த்திட்டாரு… ’ களைகட்டிய கல்யாணத்தின் கல்யாணம்!
பேருதான் ‘ஃபோர் பிரேம்ஸ்…’ ஆனால் அதன் நிர்வாகி கல்யாணத்தின் அரட்டைக்கும் அன்புக்கும் எந்த ஃபிரேமும் கிடையாது. ரஜினி வந்தாலும் அதே பரபரப்பு வரவேற்பு. ரங்கநாதன் வந்தாலும் அதே பரபரப்பு வரவேற்புதான்! ‘என் தியேட்டருக்குள்ள வந்துட்டா எல்லாரும் எனக்கு விஐபிதான்’ என்கிற அவரது நட்புக்கு முன் அவர் சொல்லும் ‘அந்த எல்லாருமே’ காலி. அநேகமாக தமிழகத்திலிருக்கும் அத்தனை விஐபி களும், அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் படம் பார்க்க விரும்பினால், ‘கல்யாணத்துகிட்ட சொல்லிடுங்க’ என்பார்கள். அப்புறம் நடப்பது எல்லாமே கச்சிதம்… கச்சிதம்!
அவருக்கு மசால் வடை பிடிக்கும். இவருக்கு லேசா வறுத்த முந்திரி. அவரா… கடலை முட்டாய் வாங்கி வச்சுர வேண்டியதுதான். இன்னைக்கு பவுர்ணமியா? இருக்கட்டுமே? அவருக்கு பிடிச்ச சிக்கன் ரோஸ்ட் ஆர்டர் பண்ணி வச்சுரலாம்! இப்படி விஐபிகளுக்கு ஏற்றார்போல, ‘கொரிக்ஸ்‘ தயார் பண்ணுவதில் அவருக்கு நிகர் அவரே. அப்படிப்பட்ட கல்யாணத்திற்கு கல்யாணம் என்றால் சும்மாயிருக்குமா ஊர். தமிழ்சினிமாவின் அத்தனை விவிஐபிகளும் திரண்டு வந்து வாழ்த்த… களை கட்டியது கல்யாணத்தின் அறுபதாம் கல்யாணம். கல்யாணம்-ஷோபா தம்பதிகளை வாழ்த்துவதற்காக மூத்த அறிஞர் மற்றும் கலைஞர்களான திருமதி ஒய்.ஜி.பி, சாருஹாசன், ஏ.வி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் என்று பெரியவர்களும், சூர்யா, நகுல், ஜீவா மாதிரியான சிறியவர்களும் திரள, ரஜினியின் ராகவேந்திரா மண்டபமே களை கட்டியது. பார்த்திபன், சுஹாசினி, குட்டி பத்மினி என்று இன்னொரு குரூப் மேடையிலேயே நின்று நிகழ்ச்சியை அழகாக்கினார்கள்.
வெளிநாட்டில் லிங்கா படப்பிடிப்பிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, முதல் நாள் இரவே தன் வாழ்த்துக்களை போனில் தெரிவித்துவிட்டாராம். மணவிழா மேடையில் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் கூட, அவர் தன்னை பார்க்க வந்த விஐபிகளை அவர் அரெஞ்ச் செய்து அரவணைத்த விதம் இருக்கிறதே, நல்ல நிர்வாகிக்கான அடையாளம் அதுதான்.
நமது www.newtamilcinema.in கல்யாணம் ஷோபா தம்பதியை பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறது.