6 விமர்சனம்
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது.
இன்டர்வெல் நேரத்தில், வீட்டுக்கு போன் அடித்து ‘புள்ள எங்க இருக்கு’ என்று கேட்காத ஒரு சிலரை ‘தம்பி பேச்சுலர் போலிருக்கு’ என்று புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு கலங்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும்.
பீச்சுக்கு போகிற இளம் தம்பதிகளான ஷாமும், பூனம் கவூரும் தனது ஐந்து வயது மகனை தொலைத்துவிடுகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு ஓடுகிற அவர்களிடம், ‘விசாரிக்கிறோம்’ என்று ஒற்றை வர்த்தையோடு அனுப்பி வைக்கிறது சட்டம் ஒழுங்கு. அதிலும் இரக்க மனம் படைத்த அதிகாரி ஒருவர், சட்டத்தை புறம் தள்ளி சந்து வழியாக கொஞ்சம் கருணையை அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற கொஞ்சூண்டு க்ளுவை வைத்துக் கொண்டு குழந்தையை தேடி புறப்படுகிறார் ஷாம். ஆந்திராவின் நகரியில் ஆரம்பித்து வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என்று தனது குழந்தையை தேடி ஷாம் நடத்தும் வேதனையான பயணம்தான் முழு படமும்.
இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? இவர்களை பிடித்து உறுப்புகளை உசுரோடு அறுத்தால் என்ன என்கிற ஆத்திரத்தை வரவழைக்கிறது இந்த கதையில் வழிந்தோடும் நிஜம். வெறும் காட்சிகளுக்காக மட்டும் கற்பனையை தட்டிவிடாமல் எங்கெல்லாம் இந்த கொடுமைகள் நடக்கிறதென தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் துரை. அதற்காகவே மனசார பாராட்டலாம் இவரை.
படத்தில் ஷாமின் நடிப்பு? ஒரு நல்ல நடிகனை இத்தனை காலம் ஊறுகாய் ஜாடி போல பயன்படுத்திய முந்தைய இயக்குனர்களை தேடிப்பிடித்து குட்ட வேண்டும் போலிருக்கிறது. இரக்க குணம் படைத்த நடுத்தர குடும்பஸ்தன் எப்படியிருப்பான்? எங்காவது ஓரிடத்தில் தன் பிள்ளையை பார்த்துவிட மாட்டோமா? பசி மறந்து உறக்கம் மறந்து ஓய்வு மறந்து திரிகிறவனின் கண்களில் நிரந்தரமாக தேங்கிக் கிடக்கும் சோகம் எப்படியிருக்கும்? ஷாம் ஒரு டிக்ஷனரியாகவே மாறிப் போயிருக்கிறார் இந்த 6 க்காக.
இவனை கொன்றால் தன் குழந்தை கிடைக்கும் என்பதற்காக முரட்டு வில்லனைக் கூட அசால்ட்டாக பந்தாடும் காட்சி, நிச்சயம் ஆக்ஷனுக்கான ‘ஸ்பேஸ்’ அல்ல. ஒரு அப்பனின் நிஜமான ‘ஃபேஸ்’ அது.
இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் குழந்தைகள் தன் காலை பிடித்து கெஞ்சுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடவுளே… என்று கதறிக் கொண்டே ஓடிவரும் ஷாமின் நடிப்பை இப்போது நினைத்தாலும் நரம்பெல்லாம் அதிர்கிறது. இன்னும் 100 படங்களில் நடித்தாலும் உங்களால் இந்த 6 போல் நடிக்க முடியாது ஷாம்! அருமை…
குழந்தையும் ஷாமும் சந்தித்துவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு வினாடியும் நம்மை ஏங்க வைக்கிறார் டைரக்டர். அந்த கடைசி காட்சி…? நல்லவேளை, சரியான முடிவாக வைத்தார் துரை. இல்லையென்றால் தியேட்டரை கூட கொளுத்தாத தயங்காது அப்பன்களின் மனசு.
குழந்தைய தேடுனது போதும். இன்னும் பத்து புள்ளை வேணும்னாலும் பெத்து தர்றேன். உடனே வா… என்று போனில் கதறும் பூனர் கவுரின் இந்த வசனங்கள் தாய்மையை கேலி பேசினாலும், எல்லாவற்றையும் இழந்தவளின் வேதனையாக கருதி அதை பொறுத்துக் கொள்ளலாம்.
குழந்தை திருடர்களின் நெட்வொர்க் எப்படியிருக்கிறது. அவர்களின் பல்வேறு முகங்கள் என்ன? கொண்டு செல்லப்படும் குழந்தைகள் என்னவாகிறார்கள்? எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறார்கள். காட்சிகள் நகர நகர இரும்பை காய்ச்சி இதயத்தில் ஊற்றியது போல இருக்கிறது அத்தனையும். இந்த பதற்றத்தை அப்படியே நமக்குள் செலுத்துவதில் பெரும் அக்கறை காட்டியிருக்கிறது கிருஷ்ணசாமியின் கேமிராவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும். இதில் ஸ்ரீகாந்த் தேவாதான் நம்மை மேலும் ஆச்சர்யமூட்டுகிறார். இத்தனை காலம் வெட்டியாக தட்டிக் கொண்டிருந்தவரின் விரல்கள் இத்தனை அர்த்தபூர்வமானதா? ஆச்சர்யம் பெரிசு!
ஷாமை விட வேகமாக பிள்ளையை தேடிக் கிளம்புகிறது தியேட்டரில் இருக்கும் ரசிகனின் மனசு. அதை மிக சரியாக புரிந்து கொண்டு நீட்டி முழக்காமல் சுருக்கென வெட்டி, நறுக்கென சொல்லியிருக்கும் எடிட்டர் அருண்குமாருக்கும் பாராட்டுகள். இந்த படத்தின் வசனகர்த்தா பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் சில இடங்களில் மட்டுமே வெளிப்படுகிறது அவரது வசனங்கள்.
ஷாமின் மேக்கப்மேன் யாரோ? அவருக்கும் நம் பாராட்டுகள்.
கடத்தப்படும்போது மெர்க்குரி விளக்கை போல பிரகாசமாக இருக்கும் அந்த சிறுவன், க்ளைமாக்சில் கரிபடிந்த அரிக்கேன் விளக்காக காட்சியளிக்கும்போது அழுகையே வந்துவிடுகிறது. பெற்றவர்களே… ஜாக்கிரதை.
ஷாம் இத்தனை காலம் எதை தேடினாரோ, அது படத்தில் கிடைத்துவிட்டது. நிஜத்திலும் கிடைக்கும்!
-ஆர்.எஸ்.அந்தணன்