அதர்வாவுக்கும் த்ரிஷாவுக்கும் நடுவில் சிக்கி முழிக்கும் ஒரு ஐயோ பாவ இயக்குனர்!
எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான் இருவரும். அந்த வகையில் த்ரிஷாவின் தூண்டில் இப்போது அதர்வா மீது. அதன் பின் கதை, முன் கதை சுருக்கம் வருமாறு-
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஒருவர் அதர்வாவை சந்தித்து ஒரு கதையை சொன்னார். முதல் முயற்சியிலேயே ஆள் பாஸ். “நாம சேர்ந்து படம் பண்ணலாம்” என்று கூறிவிட்டார் அதர்வா. அதற்கப்புறம் அதர்வாவின் நாலெட்ஜ் இல்லாமலே த்ரிஷாவை சந்தித்து அதே கதையை சொல்லிவிட்டார் அவர். அப்புறமென்ன? அதர்வாவை விட அதிக ஸ்பீடில், “நான் இந்த படத்தில் இருக்கேன்” என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டார் த்ரிஷா. கெட்டி மேளம் மண்டைக்குள் ஒலிக்க நல்லபடியாக அந்த நாளை முடிவுக்கு கொண்டு வந்த அந்த வருங்கால இயக்குனருக்கு மறுநாளே காதோரத்தில் காக்ரே மூக்ரே சவுண்டு. ஏன்?
அதர்வாவே ஒரு தயாரிப்பாளரை சொல்லி “அவரைப் போய் பாருங்க” என்றாராம். என்ன ஆச்சர்யம். அவர்களுக்கும் கதை பிடித்துவிட்டது. எப்போ பூஜையை வச்சுக்கலாம் என்று ஆர்வத்தோடு கேட்டவர்களுக்கு, “த்ரிஷா இந்த படத்தில் இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்” என்றாராம் இவர். தயாரிப்பு தரப்பு ஒரே பிடிவாதமாக “த்ரிஷா வேண்டாம்” என்று கூறிவிட்டது. இவரும் தகவலை த்ரிஷாவுக்கு பாஸ் பண்ணிவிட, பதறிப்போனாராம் அவர்.
“தயாரிப்பாளரை விட்டுட்டு வாங்க. நான் உங்களுக்கு தயாரிப்பாளர் தர்றேன்” என்கிறாராம். இப்படி நாம போட்ட பிள்ளையார் சுழி, பிக்காசோ ஓவியம் போல கண்டபடி இழுக்குதே என்று கண்கட்டி போயிருக்கிறார் இயக்குனர். எந்த வழியில் போனா நல்லாயிருக்கும்… அட நீங்களே சொல்லுங்க மக்கா?