உனக்கு படம் கொடுக்கறதே பெருசு… இதுல சம்பளம் வேற கேட்கிறீயா? கதறவிட்ட ஹீரோவும், கலங்கிய இயக்குனரும்!
ஷுட்டிங் ஸ்பாட் என்பதையே ஏதோ பிக்னிக் ஸ்பாட்டாக கருதி எப்போதாவது வரும் ஹீரோ அவர். வந்தாலும் ஆயிரம் பிரச்சனைகளோடு வருவார். ஹீரோயினோட குளோஸ்ல போட்டோ எடுத்து அதை நெட்ல ரிலீஸ் பண்ணுவார். கடந்த காதல்களில் அவர் வெளியிட்ட பல புகைப்படங்களும் ஆடியோ பதிவுகளும் இப்பவும் சுட சுட ஆன்லைனில் விவாதிக்கப்பட்டு வரும் வில்லங்கங்கள்தான்! புரிஞ்சுருச்சா… சரி. மேட்டருக்கு வருவோம்.
அண்மையில் இவர் நடித்து பல வருஷமாக இழுபறியில் கிடந்த படம் ஒன்று ரிலீஸ் ஆனது. ஆனால் ஓடணுமே? “என்னய்யா படம் இது?” என்ற ஒரே வரி விமர்சனத்துக்குள் அடங்கியதால் படம் படு பிளாப். படத்தை வெளியிட்ட வகையில் சொந்தப்பணம் சில பல கோடிகள் அவுட். அதற்கப்புறம் கமுக்கமாக அடங்கிக் கிடந்தவரை தேடி வந்தது ஒரு வாய்ப்பு. அரசியல் பிரமுகர் ஒருவர், வரும் தேர்தலில் நிற்பதற்காக செலவுக்கு பைனான்ஸ்சியர் தேடிக் கொண்டிருந்தாராம். அவரிடம், “ஏண்ணே பைனான்ஸ் வாங்குறீங்க? நான் சொல்ற ஹீரோ பிளாப் ஹீரோதான். இருந்தாலும் அவருக்குன்னு பதினெட்டு கோடி வரைக்கும் பிசினஸ் இருக்கு. ஒரு சிறு தொகையை ஹீரோவுக்கு அட்வான்ஸ்சா கொடுத்துட்டு படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுங்க. விநியோகஸ்தர்கள்ட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கி எலக்ஷன் செலவு பண்ணலாம்” என்று ஐடியா கொடுத்தாராம் நண்பர்.
அவர் சொன்ன அந்த ஹீரோ, நாம் முதல் பாராவில் சென்ன இந்த ஹீரோதான். இரண்டு கோடி அட்வான்சாக கைமாறியிருக்கிறது. டைரக்டர் யாரு? “நல்ல கதையா வச்சுருக்கான். அதையே படமா பண்ணலாம்” கூறிய ஹீரோ சமீபத்தில் தன்னை வைத்து பிளாப் கொடுத்த அந்த டைரக்டரையே கோர்த்துவிட்டாராம்.
எல்லாம் முடிந்தது. ஒரு நல்ல மூடில் ஹீரோ இருக்கும் போது மெல்ல காதை கடித்தாராம் அந்த டைரக்டர். சார்… உங்க சம்பளத்தை கரெக்டா பேசி அட்வான்ஸ் வாங்கிட்டீங்க. எனக்குன்னு ஒரு சம்பளம் பேசலை. அட்வான்சும் வரலையே என்று புலம்ப, யோவ்… உனக்கெல்லாம் படம் கிடைக்கறதே பெரிசு. இதுல சம்பளம் வேற கேட்கிறீயா என்றாராம் ஹீரோ.
வால் பக்கமாக காட்டுகிற பிஸ்கட்டை கொஞ்சம் வாய் பக்கமும் நீட்றதுதானேய்யா மனிதாபிமானம்?