விக்கல் பீடியாவில் இருந்து விடுதலை!
‘நெட்ல தட்டுனா, கொட்றத பிடிக்க உங்கிட்ட பாத்திரம் இருக்காப்பா..?’ என்கிற அளவுக்கு இருக்கிறது கூகுளின் சேவை! பூனைக்கு மீசை நறுக்கணுமா, அல்லது புடவைக்கு முந்தானை அடிக்கணுமா? நெட்டை தட்டு…! இப்படி சகலத்திற்கும் கூகுளுக்குள் ஐக்கியமாகும் திருவாளர் பொதுஜனத்திற்கு, சினிமா தகவல்களுக்காக விக்கி பீடியாவில் மேயும்போது மட்டும், அது ‘விக்கல்’ பீடியா என்ற நினைப்பு வருவது ஏன்? சினிமா தகவல்கள் அவ்வளவு துல்லியமாக இருக்கிறதா அதில்? இல்லை. இல்லவே இல்லை!
ஆயிரம் இருந்தாலும், தானா அலைஞ்சு தனித்தனியா சேகரிக்கிற தகவல்களுக்கு இணை ஏது? கிட்டதட்ட ஐம்பதாண்டு காலமாக ஓயாமல் தேடி தேடி சினிமா தகவல்களை சேகரித்து வைத்திருந்த பிலிம்நியூஸ் ஆனந்தன், தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியமாகிவிட்டார். அவரது மறைவுக்கு பிறகு அந்த பணியை அர்ப்பணிப்போடு செய்ய ஆளே இல்லை என்று திரையை இழுத்து மூடும்போதுதான், ஒரு வெள்ளை டிரஸ் நபர், கொள்ளை சிரிப்புடன் ஆஜர் கொடுத்தார். அவர்தான் பெருதுளசி பழனிவேல். சினிமா மக்கள் தொடர்பாளர் யூனியனின் பெரும்புள்ளி. உலக உருண்டையை ஓயாமல் உருள விட்டுக் கொண்டிருக்கும் ஏவிஎம் நிறுவனத்தின் சின்சியர் தேனீகளில் ஒரு தேனீ.
‘துளசி சினிமா நியூஸ்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதங்களில் நிகழ்ந்த சினிமா நிகழ்வுகளையும் பட வெளியீடுகளையும் ஒரு புத்தகமாக தொகுத்தளித்து வருகிறார். சினிமாவுலக பிரமுகர்கள் இதை ஆவலோடு தேடிக் கேட்டு படிப்பதிலிருந்தே இந்த புத்தகத்தின் அருமை புரிகிறது.
பிலிம்நியூஸ் துளசிக்கு ஒரு கலர்புல் வணக்கம். தொடருங்க சார் தொடருங்க…!