ஒரு பிணத்தோடும், ஒரு கொலைகாரனோடும் கழித்த அந்த ஒரு இரவு!

கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் பைம்பொழில். ‘பசுமை நிறைந்த சோலை’ என்பது இதன் பொருள். ஆனால் ஊரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத மக்கள் ‘பம்புளி’ என்பார்கள். படிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழின் மீது தனியாத காதல். அழகான ஊர் பெயரை ஏன் இப்படி இந்த மக்கள் சிதைத்தார்கள் என்ற கோபமே என்னை எழுதத் தூண்டியது. 8ம் வகுப்பு படிக்கும்போது ‘உங்கள் ஊர்’ என்ற பெயரில் கட்டுரை எழுதச் சொன்னார்கள். ‘ஊரின் பெயரைக்கூட சரியாக உச்சரிக்காத ஊர் மக்களைப் பற்றி என்ன எழுதுவது’ என்ற ஒற்றை வரியில் கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். அதனைப்படித்த தமிழ் ஆசிரியர் பக்கம் பக்கமாக எழுதியவர்களை விட எனக்கு முழு மதிப்பெண் அளித்தார். “மீரான் உனக்கு எழுத வருகிறது எழுது” என்றார். இதுதான் என் எழுத்துக்கு போட்ட பிள்ளையார் சுழி. மக்கள் சரியாக உச்சரிக்காத ஊர் பெயரை பெயருக்கு முன்னால் சேர்த்து ‘பைம்பொழில் மீரான்’ என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

‘ஆனந்த விகடன்’ முதல் ‘தென்காசி டைம்’ வரை அத்தனை பத்திரிகைக்கும் கதை, கவிதை எழுதி அனுப்பினேன். என் எழுத்துக்களை அங்கீகரித்தது தினகரனும், தென்காசி டைமும்தான். 12ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. அதனால் ஊருக்குள் தலைகாட்ட முடியாமல் குறிப்பாக நான் நேசித்த பெண்ணின் முகத்தில் விழிக்க முடியாமல் ஊரைவிட்டு ஓட முடிவெடுத்தேன். வழக்கமாக எங்கள் ஊரில் ஓடிப்போகும் பையன்கள் கேரளாவுக்குச் சென்று ஓட்டலிலோ, பலசரக்கு கடையிலோ வேலைக்குச் சேர்ந்து சில வருடங்களிலேயே சொந்தமாக கடை வைத்து, அங்கேயே ஒரு மலையாளப் பெண்குட்டியை விவாகஞ் செய்து செட்டிலாவார்கள். ஆனால் நான் வடக்கு நோக்கி ஓடினேன். வந்து சேர்ந்த முதல் இடம் மதுரை.

அப்போது தினகரன் இதழுக்கு தென்பகுதியில் மதுரையில் மட்டுமே பதிப்பு இருந்தது. நான் எழுதிய சில சிறுகதைகள் பிரசுரம் ஆகாமல் இருந்தது. அதை விசாரித்து விட்டு சென்னையை நோக்கி பயணம் செய்யலாம் என்பது திட்டம். நேராக மதுரை தினகரன் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் “எனது கதை நீண்ட நாள் பிரசுரிக்கவும் இல்லை, பிரசுரிக்காதவற்றை திருப்பி அனுப்பவும் இல்லையே ஏன்?” என்று சண்டை போட்டேன். அப்போது தினகரன் நிறுவனர் அய்யா திரு.கே.பி.கந்தசாமி அவர்கள் அங்கு வந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. எனது சத்தத்தைக் கேட்டு என்னை கூப்பிட்டனுப்பினார். என்ன விபரம் என்று கேட்டார். கதை எழுதி அனுப்பினேன் பிரசுரிக்கவுமில்லை, திருப்பி அனுப்பவுமில்லை என்றேன். உடனே அவர் “கதை ஏரியாவை சென்னை அலுவலகம்தான் கவனிக்கும். அது சரி இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்றார். வேலை தேடி சென்னைக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றேன். “அப்படியா எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யத் தயாரா” என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா சரி என்றேன்.

“உனக்கு தெரிந்த ஒரு தி.மு.க பிரமுகரிடம் கடிதம் பெற்றுக் கொண்டு அடுத்த வாரம் என்னை தண்டுபத்தில் (கே.பி.கேயின் சொந்த ஊர்) வந்து பார்” என்றார். சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். சென்னை திட்டத்தை கைவிட்டு ஊருக்குத் திரும்பினேன். தந்தையிடம் விபரம் சொன்னேன். அவரின் நண்பரும், தென்காசி வழக்கறிஞருமான திரு.பாண்டிவளவன், திரு.வை.கோபால்சாமியிடம் (வைகோ) கடிதம் பெற்றார். கடிதத்துடன் இருவருமாக தண்டுபத்து சென்றோம். உடனே வேலை போட்டு கொடுத்தார் அய்யா கே.பி.கே. மாதம் 275 ரூபாய் சம்பளம். மெஸ் பீஸ் 90 ரூபாய் போக மீதியை கொடுப்பார்கள் என்று சொல்லி திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி தினகரன் பதிப்பில் பிழை திருத்துனராக எனது பத்திரிக்கை பணி துவங்கியது. 1985ல் துவங்கிய பணி இன்று வரை தொடர்கிறது. மூன்று முதலாளிகள் மாறி விட்டார்கள். ஆனால் நான் இன்னும் அதே நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது. அந்த பதிப்புக்கென்று தனியாக ஒரு புகைப்பட கலைஞரை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அப்போது திருச்சி வந்திருந்த அய்யா திரு.கே.பி.கந்தசாமி அவர்கள் போட்டோகிராபர் பணிக்கு நாயக்கர், அல்லது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித்தால் நல்லது. காரணம் அவர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும், துணிச்சலாகவும் பணியாற்றுவார்கள் போட்டோகிராபர் பணிக்கு இது ரொம்பவும் முக்கியம் என்று சொல்லி அப்படி யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். நாயக்கர் யாரும் இல்லை. முஸ்லிம் ஒரு பையன் இருக்கிறான் என்று என்னை கை காட்டினார் பதிப்பு மேலாளர். உடனே எனக்கு புகைப்பட கலைஞர் பணி கிடைத்தது. இதற்கான பயிற்சி பெற சென்னைக்கு அனுப்பப்பட்டேன். 1987ம் ஆண்டு சென்னை வந்தேன்.

புகைப்படக் கலையை ஆர்வமாக சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. போட்டோ கழுவும் இருட்டு அறையை சுத்தம் செய்யவும், கேமராவை துடைத்து வைக்கவுமே 6 மாதங்கள் பயன்படுத்தப்பட்டேன். அப்போது தலைமை புகைப்பட கலைஞராக இருந்த திரு.ராஜேந்திரன் அவர்கள் எனக்கு கேமராவை எப்படி பயன்படுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் பயங்கர மழை ஊரெல்லாம் வெள்ளம். பணிக்கு வரவேண்டி எந்த புகைப்பட கலைஞரும் வரவில்லை. அய்யா கே.பி.கந்தசாமி அன்று வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே அலுவலகம் வந்து விட்டார். நேராக தனது அறைக்குச் சென்றவர். “மழை போட்டோவெல்லாம் எடுத்துட்டு வாங்க பார்க்கணும்” என்றார். “அய்யா போட்டோகிராபர் யாரும் வரலை எல்லாரும் மழையில மாட்டிக்கிட்டாங்க” என்று எடிட்டர் இண்டர்காமிலேயே சொன்னார். “திருச்சியிலேருந்து ஒரு பையன் வந்திருக்கானே அவன் என்ன ஆனான் அவனை மேல அனுப்புங்க” என்றார்.

நான் பயந்தபடியே அவர் அறைக்குள் சென்றேன். “தம்பி படம் எடுப்பீங்களா?” என்று கேட்டார். நான் தெரியாது என்று சொன்னால் வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ என்று பயந்து, ‘தெரியும்’ என்று பொய் சொன்னேன். “சரி டிரைவர்கிட்ட சொல்லி என் காரை எடுத்துட்டு போயி மழை வெள்ளப் படங்கள் எடுத்துட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பினார். அதுவரை தொட்டு மட்டுமே பார்த்த கேமராவுடன். முதலாளியின் வெள்ளை நிற கண்டசாவில் டிரைவர் அழைத்துச் சென்ற பகுதியிலெல்லாம் தெரிந்த வரையில் படம் எடுத்தேன். அப்போது மந்தவெளி பகுதியில் உள்ள ‘சாலிடர் டி.வி’ கம்பெனி தீபிடித்து எரிந்தது. அதையும் படம் எடுத்து திரும்பினேன். தரத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் படங்களின் கோணங்கள் நன்றாக இருந்தால் தினகரனின் கடைசி பக்கங்களில் அந்த படங்கள் வெளிவந்தது. அதுவும் அந்த சாலிடர் நிறுவன படம் வேறெந்த பத்திரிகைக்கும் கிடைக்காத படமாக அமைந்தது. நான் எடுத்த படங்களை பத்திரிகையில் பார்த்தபோது வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்ட மாதிரி இருந்தது.

மறுநாள் என்னை தனது அறைக்கு அழைத்த அய்யா, “பரவாயில்லையே 6 மாசத்துலேயே நல்லா கத்துக்கிட்டியே” என்று சொல்லி பளபள 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதோடு சேலத்துக்கு அசரமாக போட்டோகிராபர் தேவைப்படுகிறது. உடனே நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று உத்தரவு போட்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சேலத்தில் ‘தினகரன்’, ‘மாலை முரசு’ இரு பத்திரிகைக்கும் புகைப்பட கலைஞனாக பணியாற்றினேன்.

சேலத்துக்குப் பிறகு திருச்சிக்கு மாறுதல் கிடைத்தது. திருச்சியில் 10 ஆண்டுகள் புகைப்பட கலைஞராக பணியாற்றினேன். நான் புகைப்படம் எடுக்க செல்லும் நிகழ்ச்சிகளின் செய்தியை நானே எழுதிக் கொடுப்பேன். இருவர் வேலையை நான் ஒருவனே செய்ததால் நிர்வாகத்துக்கு பிடித்த ஊழியன் ஆனேன். சிறப்பு மலர் தயாரித்தல், அதற்கான விளம்பரங்கள் பெறுதல் என்று எனது பணிகள் விரிவடைந்தது. ஆனால் சம்பளம் மட்டும் ஆண்டுக்கு 200 ரூபாய் 250 ரூபாய் கூடியது. அய்யா கே.பி.கந்தசாமி அவர்களோ, அவருக்கு பின் பொறுப்புக்கு வந்த அய்யா திரு.கே.பி.கே குமரன் அவர்களோ திருச்சி வரும்போதெல்லாம் எனக்கு தனியாக பணமுடிப்பு தருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். குமரன் அய்யாவின் பணமுடிப்பு சமயத்தில் பத்தாயிரத்தையும் தாண்டும். இது அவர்கள் நிர்வாக இயக்குனராக இருந்த காலம் வரை தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் நான் புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு முழுநேர நிருபர் ஆனேன். நான் எடுத்த 10 ஆண்டு புகைப்படங்களைக் கொண்டு ‘திருச்சி 10 ஆண்டுகள்’ என்ற பெயரில் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தினேன். நான் எடுத்த விபத்து படங்களை தனியாக தொகுத்து ‘விபத்து விழிப்புணர்வு கண்காட்சி’ ஒன்றை திருச்சி போக்குவரத்து போலீசுடன் இணைந்து நடத்தினேன். எனது இந்த பொது நிகழ்ச்சிகளுக்கு நிர்வாக இயக்குனர் திரு.கே.பி.கே குமரன் அய்யா அவர்கள் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்கள். தினகரன் நிர்வாகத்தில் ‘கரன் டி.வி’ என்ற உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டவுடன் அதன் நிர்வாக அதிகாரி, மற்றும் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். உள்ளூர் மக்களை கவரும் விதமாக அதில் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். இன்றைக்கு சேட்டிலைட் தொலைக்காட்சிகள் நடத்தும், நடன, பாட்டு, மிமிக்ரி நிகழ்ச்சிகளை நான் அப்போதே சிறிய அளவில் நடத்தினேன். ‘கரன் டிவி’ பல நகரங்களில் தொடங்கப்பட்டதும் அதன் நிகழ்ச்சி அதிகாரியாக பதவி உயர்தப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டேன்.

கரன் தொலைக்காட்சிக்கு திரைபடங்களின் டிரைய்லர், பாடல்கள் வாங்க வேண்டிய பணி வந்தபோது அதில் ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தது. ‘சினிமா ரிப்போர்ட்டர்’ என்ற கூடுதல் தகுதியிருந்தால் அவற்றை எளிதாக பெற முடியும் என்று குமரன் அய்யா நினைத்தார்கள். அதன்படி தமிழ் முரசு சினிமா நிருபரானேன். அதன் பிறகு நிர்வாக மாற்றம் ஏற்பட்டது. சன் குழுமத்தின் நிர்வாகத்திலும் தொடர்ந்து சினிமா நிருபராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து அது தொடர்ந்து கொண்டிருக்கிறது…

திருச்சியில் பத்திரிகையாளர் சங்கம் தொடங்கி அதன் செயலாளராகவும், பொருளாளராவும் பணியாற்றினேன். திருச்சியில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பெற்றுத்தர போராடியவர்களில் நானு-ம் ஒருவன். கடைசியில் எனது நோக்கமும், உழைப்பும் வெற்றி பெற்று பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டபோது நான் திருச்சியில் இல்லை. அந்த பலனை நான் பெறவும் இல்லை. 25 ஆண்டுகால பத்திரிக்கையாளன் வாழ்க்கையில் அரசிடம் நான் பெற்ற சலுகை சில ஆண்டுகள் இலவச பஸ் பாசும், சில ஆண்டுகள் திருச்சி அரசு குடியிருப்பில் வாடகை வீடும்தான். 275 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை கால் நூற்றாண்டுக்கு பிறகே 10 ஆயிரத்தை தாண்டியது.

என்னைப் பொருத்தவரை பத்திரிகையாளர் பணி என்பது வயிற்றை நிரப்பவும், புத்தகங்கள் எழுதுவது ஆன்மாவை நிரப்புவதற்கும், பொதுப் பணிகள் மனதிருப்திக்கும் என்று கருதுவேன். முதன் முதலாக ‘புதிய தீக்குச்சிகள்’ என்ற கவிதை நூலை எழுதினேன். அதை திரு.குமரன் அய்யா அவர்களே வெளியிட்டார்கள். அதன் பிறகு சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதிவிட்டேன். சினிமா துறையில் ரஜினியின் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு நூல் குறிப்பிடத்தக்கது. இதற்காக திரு.ரஜினி அவர்கள் என் குடும்பத்தை அழைத்து கவுரவித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

மற்றவர்களின் அனுபங்கள் ஒரு குறிப்பிட் எல்லைக்குள் அடங்கிவிடக்கூடியது. ஆனால் ஒரு பத்திரிகையாளனின் அனுபவம் எல்லையில்லாதது. சில சுவாரஸ்யமான சம்பவங்களை மட்டும் இங்கே….

சேலம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண் ஒருத்தி கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் என்று தகவல் வந்தது. உடனே நான் அதைப் படம் எடுக்க கிளம்பினேன். அந்த இடத்தை சென்றடைவதற்குள் இரவு பத்து மணியாகிவிட்டது. அடைமழை வேறு பெய்து கொண்டிருந்தது. திரும்புவதற்கும் பஸ் வசதி இல்லை. ஆள் நடமாட்டமும் இல்லை வேறு வழியில்லாமல் பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருந்த ஒரு கடை முன்பு அமர்ந்தேன். மழையில் கேமரா நனையும் அபாயம் இருந்ததால் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டிருந்போது தலையில் கங்காணி போர்த்தியபடி ஒருவர் வந்தார். “என்ன தம்பி மாலை முரசுங்களா?” என்றார். ஆமாம் என்றேன். “ஏன் இப்படி மழையில நனையுறீங்க. கடை திறந்துதான் இருக்கு நான் அந்த கடையிலதான் வேலை செய்றேன், உள்ள போயி படுத்துக்குங்க” என்றார். அவரும் உடன் வந்து படுக்க சாக்கு விரித்து போட்டு பக்கத்திலேயே படுத்துக் கொண்டார். நானும் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன். கண் விழித்துப் பார்த்தபோது கடை முன்பு கூட்டம் கூடி நின்றது. போலீஸ் வந்திருந்தது. என்னையும், என்னுடன் படுத்திருந்தவரையும் அழைத்து விசாரித்தது. நான் நடந்தைச் சொன்னேன். அவனும் நடந்ததை சொன்னான். “அய்யா நான்தாங்க எம் பொஞ்சாதியை கொண்ணு கடைக்குள்ளாற போட்டுருக்கேன். ஊரு மேய்ற தே….ளா எந்த ஆம்பிளையால பொறுத்துக்கு முடியும். அதான் போட்டுத் தள்ளிட்டு நானே மாலை முரசுக்கு போன் பண்ணினேன். அவ படத்தை பேப்பர்ல போட்டாத்தான் நாலு பேரு திருந்துவாங்க” என்று கேசுவலாகச் சொன்னான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அதன் பிறகு போலீசார் என்னை சம்பிரதாயமாக விசாரித்தார்கள். “வேறொருத்தரா இருந்தா கேசுல இணைச்சு அலைய விட்டுருவோம். நீங்க பிரஸ்ங்றதால விடுறோம். இனிமேயாவது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிசுட்டு ஸ்பாட்டுக்கு வாங்க”ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பினார். ஒரு பிணத்தோடும், ஒரு கொலைகாரனோடும் கழித்த அந்த ஒரு இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.

தினகரன் நிறுவனர் கே.பி.கந்தசாமி அவர்கள் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ் நாட்டில் உள்ள கோவில்களையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம்… திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அவர் வரும்போது அவரது தனி புகைப்படக் கலைஞராக சென்று கொண்டிருந்தேன். அப்போது அனைத்து கோவில்களையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவில் கருவறைக்குள் இந்துக்கள் தவிர பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்பதால் ஒவ்வொரு கோவிலின் கருவறைக்குள் செல்லும்போதும் அமைச்சர் என்னைப் பார்த்து லேசாக புன்னகைப்பார். அதை புரிந்து கொள்ளும் நான் கருவறைக்குள் செல்லாமல் வெளியே நின்று கொள்வேன். சுற்றுப் பயணம் முடிந்து கிளம்பும்போது என்னைக் தன் அறைக்கு கூப்பிட்டு அனுப்புவார். “நல்லா கோஆப்ரேட் பண்ணினீங்க. இப்படியே கடைசி வரைக்கும் இருந்துக்குங்க” என்று சொல்லி சில நூறு ரூபாய் நோட்டுக்களை தந்துவிட்டுச் செல்வார். ஒருமுறை அவர் கோவில் விசிட் சென்றபோது அவருக்கு வேறொரு புகைப்படக் கலைஞரை அனுப்பினார்கள். அப்போது அவர் “ஏன் மீரான் எங்கே” என்று கேட்க. கோவிலுக்குள் தாராளமாக படம் எடுக்க இந்து போட்டாகிராபர்தான் சரியாக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அவரையே அனுப்பி வையுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். திரும்பவும் நானே சென்றேன். அவர் ஏன் கோவில் விசிட்டுக்கு என்னையே தேர்வு செய்தார் என்பதற்கான பதில் இதுவரை எனக்குத் தெரியவில்லை.

திருவரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி. அதிகாலை 5 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பிரவேசிப்பார். அவருடன் அந்த வாசலைக் கடப்பது பெரும் புண்ணியம் என்பது ஜதீகம். இதற்காக முதல்நாள் 12 மணிக்குள் கோவிலுக்குள் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு செல்ல அனுமதியில்லை. அந்த ஆண்டு புதிதாக ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றிருந்தார். மிகவும் கண்டிப்பான பேர்வழி. அவர்தான் வாசலில் நின்று அடையாள அட்டைகளை சரிபார்த்து கோவிலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார். நானும் சென்றேன். எனது அட்டையை சரிபார்த்தவர், “பத்திரிகையாளராக இருந்தாலும் நீங்கள் முஸ்லிம் அனுமதிக்க முடியாது” என்றார். இப்படி ஒரு சூழ்நிலையை அதுவரை நான் சந்தித்ததில்லை. கோவில் கருவறைக்குள்தான் பிற மதத்தவர் அனுமதியில்லை. மற்ற பகுதிகளில் வெளிநாட்டவர்கூட செல்வார்கள் என்று அவரிடம் வாதம் செய்தேன். அவர் “அதெல்லாம் எனக்குத் தெரியாது நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார். ஏன் இப்படி பிடிவாதம் செய்கிறீர்கள். என்றேன். “அரங்கநாதன் உங்களுக்கு சிலை எங்களுக்கு கடவுள்” என்றார். அவரது இந்த வாதம் என்னை கோபப்படுத்தியது. சற்றும் யோசிக்காமல் அரங்கநாதன் உங்களுக்கு கடவுள்தான் எனக்கு மச்சான் உங்களைவிட எனக்குத்தான் அதிக உரிமை உண்டு என்றேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை வழிவிட்டு விலகி நின்றார். திருவரங்க ஸ்தலபுராணப்படி அரங்கநாதர் துலுக்க நாச்சியார் என்ற இஸ்லாமிய பெண்ணை மணந்தவர்.

ஒரு நாள் அதிகாலை போன் தகவல். ‘மதுரையிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்த ஒரு வங்கி வேன் இடைறித்து கொள்ளையடிக்கப்பட்டது’ என்ற தகவல் அது. அவசர அவசரமாக கிளம்பி ஓடினேன். மோட்டார் சைக்கிளில் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தேன். போலீசார் பெருமளவில் குவிந்திருந்தார்கள். ஸ்பாட்டுக்கு உள்ளூர் பத்திரிகையாளர்கள் சிலர் வந்திருந்தார்கள். திருச்சியிலிருந்து சென்ற முதல் ஆள் நான்தான். போலீசார் கொள்ளையர் விட்டுச் சென்றிருந்த மீதி பணக் கட்டுகளை எடுத்து அடுக்கி வைத்திருந்தார்கள். கொள்ளையடிக்கப்பட்ட வேன் சாலையில் இருந்து விலகி உருண்டு கவிழ்ந்து கிடந்தது. அதை சுற்றிச் சுற்றி பல்வேறு கோணங்களில் படம் எடுத்தேன். ஒரு குறிப்பிட்ட ஆங்கிளுக்காக சற்று தூரமாக சென்று அங்குள்ள புதர் செடிகளை விலக்கி அங்கு நின்று படம் எடுத்தபோது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது, குனிந்து பார்த்தேன். இரண்டு 500 ரூபாய் கட்டுகள். மனசு திக் என்றிருந்தது. எடுத்து அப்படியே கேமரா பேக்கில் போட்டுக் கொண்டு சென்றால் யாருக்கும் தெரியாது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இதுவும் சேர்ந்திருக்கும். ஆனால் அது தர்மமா? நாம் செய்யும் தொழிலுக்கு அது துரோகம் செய்தது மாதிரி ஆகாதா என்ற கேள்விகள் என் மனதை குடைந்தது. இந்த ஊசலாட்டமெல்லாம் சில விநாடிகள்தான். அடுத்து நொடியே தூரத்தில் நின்று கொண்டிருந்த போலீசாரை அழைத்தேன்.

கும்பகோணத்தில் மகாமகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய திருவிழா. தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் கூடும் விழா. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஒருவர் மாறி ஒருவர் தண்ணீரை தலையில் ஊற்றி குளித்தார்கள். இதை மிக அருகில் இருந்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எனது முதுகுக்கு பின்னால். அப்போதைய உயர்போலீஸ் அதிகாரி தேவாரம் நின்று கொண்டிருந்தார். மக்கள் புனித நீராட வேண்டிய நேரத்தை அந்தக் காலத்தில் கோவிலில் மணியடித்து தெரிவிப்பார்களாம். ஆனால் இந்த ஆண்டு போலீஸ் அதிகாரி தேவாரம் தன் கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு நல்ல நேரம் துவங்கி விட்டதை அறிவித்தார். இதை நான் படம் எடுத்தேன். அதன் பிறகு மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல நூறு பேர் இறந்து போனார்கள். யுத்தங்களை படம் பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் அன்றைக்கு அந்தக் காட்சிகளை படம் எடுக்கும்போது யுத்தகளத்தில் படம் பிடித்த உணர்வைப் பெற்றேன். பின்னர் எதிர்கட்சியினர். போலீஸ் அதிகாரி தேவாரம் வானத்தை நோக்கி சுட்டதுதான் நெரிசலுக்கு காரணம் என்றார்கள். அவர் சுட்டதால்தான் ஏதோ கலவரம் நடப்பதாகவும், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் தவறாக புரிந்து கொண்டதுதான் இத்தனை மரணங்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். ‘தினகரன்’ இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக நான் எடுத்து படத்தை பெரிய அளவில் வெளியிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேதாரண்யம் பண்ணையார் போலீஸ் காவலில் இருக்கும்போது வேதராண்யம் ஓய்வு விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நேரம். திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு 5 மணி நேரம் பஸ் பயணம். செய்தி கேள்விப்பட்டதும் கிளம்பினேன். நான் சென்று சேர்வதற்குள் எல்லாமே முடிந்து விட்டிருந்தது. பெரிய பத்திரிகைகள் தனி கார்களில் வந்து பண்ணையாரின் உடலை படம் எடுத்து சென்றிருந்தார்கள். நான் சென்றிருந்தபோது அவரது உடல் மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு படம் எடுக்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த இடம், பண்ணையார் தூக்கில் தொங்கிய மரம் இவற்றை மட்டும் படம் எடுத்தேன். எப்படியாவது பண்ணையாரின் உடல் படத்தை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போது வேதாரண்யம் பகுதி நிருபரிடம் உள்ளூர் போட்டோகிராபர்கள் யாராவது எடுத்திருப்பார்கள், அவர்களிடம் வாங்கிக் கொடுங்கள் என்றேன். விசாரித்ததில் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே உள்ளூர் ஸ்டூடியோக்காரர் ஒருவர் எடுத்திருந்த விபரம் தெரிந்தது. அவரிடம் பேசி அந்தப் படத்தை வாங்கி அப்போது கம்ப்யூட்டர் வசதி இல்லாததால் பேக்சில் அனுப்பி வைத்தேன். பண்ணையார் மரத்தில் தொங்குவது போன்ற தெளிவான படம் அது. மரத்தில் தொங்கும் பண்ணையாரின் கால் தரையில் தொட்டுக் கொண்டிருப்பது மாதிரியான படம். நான் ஒரிஜினல் படத்துடன் திருச்சி திரும்பினேன். உள்ளூர் ஸ்டுடியோகாரரிடமிருந்து போலீசார் அந்த நெகட்டிவை வாங்கி விட்டா£ர்கள் என்று கேள்விப்பட்டேன். யாருக்கும் கிடைத்திருக்காது என்று நினைத்த போலீசார் மறுநாள் காலை தினகரனில் முதல் பக்கத்தில் அந்தப் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பண்ணையாரின் மரணத்தில் பல சந்தேகங்களை கிளப்ப இந்தப் படமே ஆதாரமாக அமைந்தது.

பிரேமானந்த சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார். அவரது தீவிர பக்தர் ஒருவர் திருச்சியில் இருந்தார். அவரது பிறந்தநாளையட்டி தினகரனில் ஒரு சிறப்பு மலர் வெளியிட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான கட்டுரை தயாரிக்கவும். அவரை பல கோணங்களில் படம் எடுக்கவும் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டேன். அவரது ஆசிரமத்தின் பல்வேறு பணிகள் குறித்து தனித்தனியாக கட்டுரைகளை அங்கேயே உட்கார்ந்து எழுதினேன். அதோடு பிரேமானந்தா மக்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியாக ஆன்மீகம், தன்னம்பிக்கை கலந்த ஒரு கட்டுரையை எழுதி அவரிடம் காட்டினேன். அதைப் படித்து பார்த்த பிரேமானந்தா ஆச்சர்யப்பட்டார். “நிஜத்தில் நான் இந்த அளவுக்கு பேசியதோ எழுதியதோ இல்லை அற்புதம், அற்புதம்” என்று பாராட்டினார். பின்னர் அவவீu உச்சி முதல் உள்ளங்கால் வரை அனுஅனுவாக படம் எடுத்தேன். ஆசீர்வதிப்பது போன்று தவம் செய்வது போன்று குழந்தையை கொஞ்சுவது போன்று என விதவிதமாக எடுத்து தள்ளினேன். அப்போது அங்கிருந்த திவ்யா மாதாஜியுடன் ஒரு படம் எடுக்குமாறு அவரை அணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்போது நான்தான் சுவாமி திவ்யா மாதாஜி உங்கள் பக்தையாக இருந்தாலும் இதுபோன்ற படம் வெளிவந்தால் மக்கள் உங்களை தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்றேன். அவரும் அதை ஒப்புக் கொண்டார். அவரது பிறந்த நாள் மலரும் வெகு சிறப்பாக வந்திருந்தது. பின்னர் ஆசிரமத்துக்கு என்னை கூப்பிட்டு அனுப்பினார். ஆசிரமத்தில் அவரது தனி சொகுசு அறையில் அவருடன் மதிய உணவு அருந்த வைத்தார். அப்போது எனக்கு சாப்பாடு பரிமாறிய பெண்கள்தான் பின்னர் அவர் மீது பாலியல் புகார் கொடுத்தவர்கள். மலரின் சிறப்பு பற்றியும், அதில் எனது பணி பற்றியும் பாராட்டிவிட்டு சில ஐநூறு ரூபாய்களை பழத்தட்டில் வைத்துக் கொடுத்தார். பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பணம் வேண்டாம் என்று மறுத்தேன். “சந்தியாசிகள் கொடுப்பதை ஏற்க மறுப்பது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது” என்றார். வேறு வழியில்லாமல் எடுத்துக் கொண்டேன். கடைசியாக கிளம்பும்போது ஒன்று சொன்னார். “மீரான் உங்கள் பணி எனக்கு தேவையாக இருக்கிறது. ஆசிரமத்திற்கென்று ஒரு பத்திரிக்கை நடத்துகிறேன். அதில் உங்கள் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து பணியாற்றலாம். அதற்காக உங்களுக்கு நல்ல ஊதியம் தருகிறேன்” என்றார். யோசித்து சொல்கிறேன் சாமி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இது நடந்து சரியாக மூன்றாவது மாதத்தில் பிரேமானந்தா கைது செய்யப்பட்டார். அவரது பிறந்த நாளுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இப்போது வேறு விதமாக பத்திரிகைகளில் பிரசுரமானது. ஒரு வேளை பிரேமானந்தாவின் வேண்டுகோளுக்கு நான் சம்மதித்திருந்தால் இந்நேரம் வேலூர் மத்திய சிறையில் இருந்து சிறை அனுபவங்களை எழுதிக் கொண்டிருந்திருப்பேன்.

ஒரு பழம்பெரும் நடிகையை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். தலைப்பு ‘மலரும் நினைவுகள்’. “மலரும் நினைவுகள் பேசுற அளவுக்கு எனக்கு வயதாகிவிட்டதா?” என்று பிகு பண்ணிக் கொண்டே பேட்டியைத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு வயது 70 கடந்திருந்தது. பேட்டி நடந்து கொண்டிருந்தபோது புகைப்படக் கலைஞர் தாமதமாக வந்தார். வந்த புகைப்பட கலைஞர் கேமராவை தயார் செய்து மளமளவென படங்களை எடுக்கத் துவங்கினார். அவ்வளவுதான் அந்த நடிகை தன் வயதையும் மறந்து திடீரென எழுந்தவர் தாம் தூமென்று குதிக்கத் தொடங்கினார். “பேட்டி மட்டும்தானே கேட்டீர்கள் இப்போது படமும் எடுக்கிறீர்கள். இதற்கு முன்பே நீங்கள் என்னிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். பேட்டியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் கிளம்புங்கள்” என்று கத்தத் தொடங்கிவிட்டார். இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் “சாரி மேடம் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் போட்டோ வேண்டாம், பேட்டி மட்டும்போதும்” என்று சொன்னேன். கொஞ்சம் இறங்கி வந்தார். “ஏற்கெனவே எடுத்த போட்டோவை என் கண்முன்னாலேயே டெலிட் செய்யுங்கள் அப்போதுதான் பேட்டி தருவேன்” என்றார். போட்டோகிராபரும் அவரிடம் காட்டியபடியே படங்களை டெலிட் செய்தார். பின்னர் என்ன நினைத்தாரோ “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் வந்து விடுகிறேன். அதன் பிறகு போட்டாவுடன் பேட்டி எடுங்கள்” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். அதுவரை சாதாரண நைட்டியில் இருந்தவர் பளபள பட்டுப்புடவையில் வந்தார். முகத்தின் ஒரு இன்ஞ்சுக்கு மேக் அப் இருந்தது. சும்மா சொல்லக்கூடாது 20 வயதை தாராளமாக குறைத்திருந்தார். “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி எனக்குன்னு வெளியில ஒரு இமேஜ் இருக்குது. அதை நான் காப்பாத்தணும்” என்று சொன்னபடியே பேட்டியைத் தொடர்ந்தார். அன்றுதான் ஒரு நடிகையை போட்டோ எடுக்கச் செல்லும்போது முன் அனுமதி பெற்று விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது தெரிந்தது.

விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த நேரம். முக்கியமான முகாம்களுக்கு தேசிய தலைவர் பிரபாகரன் அவ்வப்போது சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஒருமுறை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் நடக்கும் பயிற்சி முகாமிற்கு அவர் வர இருப்பதாக எனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அவரை நேரில் சந்திக்க வேண்டும், தனி பேட்டி எடுக்க வேண்டும் என்கிற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாவே இருந்தது. இந்த தகவல் கிடைத்ததும். அதை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். அலுவலகத்தில் சொன்னால் அனுமதி தருவார்களோ, மாட்டார்களோ என்ற சந்தேகம் இருந்தது. அதானல் தனிப்பட்ட முறையில் செல்வது என்று முடிவு செய்தேன். வேதாரண்யத்தில் புலிகள் அமைப்போடு தொடர்புடைய பலர் எனக்கு அறிமுகம். அவர்களிடம் எனது ஆசையைச் சொன்னபோது அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார்கள். சில நாட்களிலேயே “தேசிய தலைவர் உங்களை சந்திக்க அனுமதித்து விட்டார். ஆனால் பேட்டி எதுவும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார்” என்றார்கள். அவரை சந்திக்கிற வாய்ப்பே போதும் என்று கோடியக்காட்டுக்குச் சென்றேன். வேதாரண்யத்திலிருந்து அந்த நண்பர்கள் ஜீப்பில் என்னை அழைத்துச் சென்றார்கள். புதர் செடிகள் நிறைந்த அந்த காடுவழியாக பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக நாங்கள் சென்ற ஜீப் பழுதடைந்து நடுக்காட்டில் நின்றது. அதை சரி செய்ய நீண்ட நேரம் ஆனது. ஒரு வழியாக சமாளித்து முகாமை அடைந்தபோது தேசிய தலைவர் அவசர வேலையா கிளம்பிச் சென்றிருந்தார். “உங்களுக்காக இதுவரை காத்திருந்தார். அதற்குள் அவரசமாக கிளம்ப வேண்டிய ஒரு பணி சென்றுவிட்டார் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னார். அடுத்த முறை வரும்போது கட்டாயம் சந்திப்பதாகச் சொன்னார்” என்று அங்கிருந்த இன்னொரு புலி சொன்னார். தூரத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த அவரது படகை மட்டுமே அன்று காண முடிந்தது. அதன் பிறகு அந்த ஆசை நிறைவேறவே இல்லை. அன்று என்னிடம் தேசிய தலைவர் பிரபாகரன் சார்பில் பேசியவர்தான் பின்னாளில் இயக்கத்தை காட்டிக் கொடுத்த கருணா என்பது பின்னாளில் எனக்குத் தெரிந்தது. ஒருவரை சந்திக்க முடியாமல் போனதற்கும், இன்னொருவரை சந்தித்தற்கும் இப்போதும் வருந்திக் கொண்டு இருக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட சாதி சங்கம் நடத்திய சுயம்வர நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பெண்கள் ஒவ்வொருவராக மேடைஏறி தங்கள் தகுதியைக் கூறி தங்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதேபோல ஆண்களும் சொன்னார்கள். எனக்கென்னவோ அது சந்தையில் மாடு விற்பது போலத்தான் இருந்தது. விழா முடிந்ததும் அங்கிருந்த பெண்களை பேட்டி எடுத்தேன். 40 வயதை கடந்த பெண் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த பெண்ணிடம் அவர் யார்? பெயர், எந்த ஊர் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டேன். அவரும் சிரித்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “இத்தனை வயதாகியும் உங்களுக்கு ஏன் திருமணமாகவில்லை” என்று டக்கென்று கேட்டுவிட்டேன். இந்த கேள்வியை எதிர்பார்க்காத அந்த பெண் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார் எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. எவ்வளவு முட்டாள்தனமான ஒரு கேள்வியை கேட்டுவிட்டோம் என்று வருந்தினேன். அந்த பெண்ணிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தேன். அன்றுதான் புரிந்தது. ஒரு பத்திரிகையாளர் என்னென்ன கேள்வி கேட்கலாம் என்பதைவிட எதை கேட்ககூடாது என்பதைப் பற்றித்தான் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று-.

திருச்சியில் பிரபலமான ஒரு அரசியல்வாதி தி.மு.கவைச் சேர்ந்தவர். அவருக்கு நான் குடும்ப நண்பராக இருந்தேன். அவரது மகளை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். வீட்டுக்குச் சென்றால் அங்கிள் அங்கிள் என்று காலைகட்டிக் கொண்டு வளையவரும். அந்தப் பெண்ணுக்கு கல்லூரியில் படிக்-கும் போது உடன் படிக்கும் மாணவரோடு காதல். அவன் சாதாரண ஏழை வீட்டு பையன் என்பதாலும் வேறு ஜாதியைச் சேர்ந்தவன் என்பதாலும் அந்தக் காதலுக்கு அரசியல்வாதி கடும் எதிர்ப்பு. ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. அவள் காதலனோடு ஓடிப்போய்விட்டாள் என்பது மட்டும் தெரியும். அரசியல்வாதி தன் இமேஜ் கெட்டுவிடும் என்பதற்காக தனது அடியாட்கள், மற்றும் நெருக்கமான போலீஸ் அதிகாரிகளை வைத்து தேடினார். தேவைப்பட்டால் அந்த பையனை போட்டுத்தள்ளிவிட்டு மகளை கொண்டு வருமாறும் சொல்லியிருந்தார். ஆனால் அவரது எந்த முயற்சியும் பலன் தரவில்லை. சரியாக ஒரு வருடம் கழித்து அந்த பெண்ணிடமிருந்து எனக்கு போன். “அங்கிள் நாங்கள் இரண்டு பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். 3 மாதங்கள் ஆகிவிட்டது. துப்பாக்கி தொழிற்சாலை குவார்ட்டர்சில் தங்கியிருக்கிறோம். நாங்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி பத்திரிகையில் வரவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் நீங்கள்தான் அங்கிள் உதவி செய்ய வேண்டும்” என்றார். எனக்கு அதிர்ச்சி. அரசியல்வாதியிடம் காட்டிக் கொடுத்தால் இருவரின் உயிருக்குமே ஆபத்து. அதேநேரம் அந்த பெண் சொல்கிறபடியும் என்னால் உதவி செய்ய முடியாது. காரணம் அந்த அரசியல்வாதி எங்கள் பத்திரிகைக்கும் நெருக்கமானவர். என்ன செய்வதென்று யோசித்தேன். ஒரு மாதம் பொறுங்கள் நான் ஏதாவது செய்கிறேன் என்று சொன்னேன். இதற்கிடையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். இருவருமே கண்கலங்கினார்கள். “காதலிச்சது தப்பா அங்கிள்” என்று அந்தப் பெண் சின்னக் குழந்தை மாதிரி கேட்டது என்னை நெகிழ வைத்தது. ஒரு மாதத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா வந்தது. இந்த விழாவில் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு பூஜை செய்வார்கள். இந்த திருவிழாவை பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன். இருவரும் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு மணக்கோலத்தில் வந்து விடுவங்கள் அங்குள்ள மண்டபத்தில் இருங்கள். நான் அங்கு வருவேன். நான் சைகை செய்யும்போது இருவரும் படித்துறைக்கு வந்து மாலையை ஆற்றில் விடுங்கள் என்றேன். சொன்னபடியே இருவரும் வந்து காத்திருந்தார்கள். சிந்தாமணி காவிரி படித்துறையில் நானும் மற்ற புகைப்பட கலைஞர்களும் அதிகாலையில் கூடுவோம். அன்றும் கூடினோம் புதுமண தம்பதிகள் திருமண மாலையை ஆற்றில் விடுவது போன்று படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் அரசியல்வாதியின் மகளை பார்த்து சைகை செய்தேன். இருவரும் மணக்கோலத்தில் வந்து காவிரி ஆற்றில் பூஜை செய்து மாலையை ஆற்றில் விட தயாரானார்கள். நான் “டேய் மச்சான் அங்க பாருங்கடா சூப்பர் ஜோடி” என்று நண்பர்களிடம் சொன்னதும். அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தார்கள். பின்னர் அவர்களிடம் சென்று விடுமாறு சைகை செய்தேன். அவர்களும் சென்று விட்டார்கள். வந்திருந்த தம்பதிகளில் இவர்கள்தான் சற்று அழகு என்பதால் தினகரன் உள்பட மற்ற சில பத்திரிகைகளிலும் அவர்கள் புகைப்படம் வெளிவந்தது. அன்றே திருச்சி முழுவதும் இன்னாருடைய மகள் என்று தெரிய ஆரம்பித்தது. அரசியல்வாதி என்னை போனில் பிடித்தார். “உணக்கு அவளை அடையாளம் தெரியலையா? எனக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டாமா-?’ என்று சத்தம் போட்டார். சத்தியமா எனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு ஒரு வார இதழில் அவர்களின் பேட்டி வந்தது. உலகத்துக்கே தெரிந்து விட்டது இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்ட அரசியல்வாதி பின்னர் சமாதானமாகி, தான் காதலை அங்கீகரிப்பவன் போல நடந்து கொண்டார். இன்றைக்கு அவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். –

1 Comment
  1. Ghazali says

    மீரானின் அனுபவங்கள் படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம்.
    சில பல திரைப்படங்களுக்கான கதைகள் இவரிடம் நிச்சயம்!
    – கஸாலி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சும்மாயிருந்த சுஹாசினியை சுடு தண்ணியா மாத்திட்டாய்ங்க!

குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு....

Close