100 கிராம் எக்ஸ்ட்ரா மூளையுடன் ஒரு ஹீரோ கம் இயக்குனர்!

சாமியார்களே ‘சைடு’ பிசினஸ்சாக சினிமாவில் இன்வெஸ்ட் பண்ணுகிற காலம் இது. மெய்ஞானிக்கு இருக்கிற ஆசை ஒரு விஞ்ஞானிக்கு இருக்காதா? அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்து வரும் ‘நாசா’வில் விஞ்ஞானியாக இருந்த பார்த்திக்கும் கோடம்பாக்கத்தின் மீது திடீர் ஆசை! அதற்காக நாலு ஃபைட், ரெண்டு டான்ஸ், ஒரு கட்டாய சென்ட்டிமென்ட், ஒரு கிண்ணம் அழுகாச்சி என்று ரெகுலர் ரூட்டில் நொண்டியடிக்காமல் தனது எண்ணத்தில் உதித்த கதையை எழுத்தாக வடிப்பதற்கே ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்துக் கொண்டாராம்.

ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி காதலில் விழுகிறார். அந்த காதலும் கல்யாணமுமே அவரது ஆராய்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆராய்ச்சி வென்றதா, அல்லது அவரது ஆராய்ச்சியை காதல் கொன்றதா? இதுதான் விஞ்ஞானி படத்தின் மையக்கதையாம்.

சென்னை ஐஐடி யின் உள்ளே நுழைவதற்கே 100 கிராம் மூளை எக்ஸ்ட்ராவாக வேண்டும். அங்கு படித்து டாக்டர் பட்டமும் வாங்கியிருக்கிறார் பார்த்தி. சுமார் ஒரு குயர் பேப்பரில் இண்டு இடுக்கெல்லாம் எழுதுகிற அளவுக்கு கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பயோ-டேட்டா வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் லடாக்கிலும் குலுமணாலியும் யாரோ ஒரு அசைவ அழகியை கட்டிப்பிடித்து ஆட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் அறிவியல் கழகம் வேண்டுமானால் கவலைப்படட்டும். ஆனால் ரசிகர்களுக்கு ‘ஹையா ஜாலி’தான்!

ஏனென்றால் நமக்கு காட்டப்பட்ட விஷுவல் அப்படி. சற்றே சீரியஸ் முகத்துடன் கதாநாயகியை லவ்வுகிறார். டான்சும் முறைப்படி கற்றிருப்பதால் லெக் ஸ்லிப் இல்லாமல் டான்ஸ் ஆடுகிறார். ஆவேசப்படுகிறார். அழுகிறார். துடிக்கிறார்… கொஞ்சம் அச்சமாகக் கூட இருக்கிறது அவரது சவால்களை கேட்டால். ‘நல்ல படம் வரல… நல்ல படம் வரலன்னு சொல்றீங்க. அதுக்காகதான் இத்தனை வருஷம் மெனக்கெட்டு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கேன். இதை உலக மக்கள்ட்ட சொல்லுங்க. எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கட்டும்…’ என்கிறார் படபடவென்று!

பார்த்தி கொஞ்சம் விபரமான ஆள்தான். சினிமாவையும் அதன் வியாபாரத்தையும் கூட ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார் போல. தான் புதுமுகம் என்பதால் தன்னை சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரையும் அறிந்த முகமாக நடிக்க வைத்திருக்கிறார். விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி, சஞ்சனா சிங் என்று வாரியிறைக்கப்பட்ட நட்சத்திரங்கள் படம் முழுக்க! முக்கியமாக பார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீராஜாஸ்மின்.

பூமியல்லாத கோள்களில் மனித உயிரினங்கள் இருக்கிறதா என்பதுதான் பார்த்தியின் ‘நாசா’ கால ஆராய்ச்சியாக இருந்திருக்கிறது. ஒருவேளை அப்படி இருக்கும் பட்சத்தில், விஞ்ஞானி படத்தை அங்கேயும் ஓட்டுவாரோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
NATPATHIGARAM MAKING STILLS

Close