நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறோம்! தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேச்சு!
கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் ‘54321: இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர். இரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதையே இரண்டு மணி நேரப் படமாகியுள்ளது. ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் நடித்துள்ளார்கள். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ட்ரெய்லரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
விழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது.” எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன் .’54321′ படத்தின் ட்ரெய்லரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது. காட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான் இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும். நாங்கள் நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். பத்து கதாநாயகர்கள் பத்து கதாநாயகிகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும். சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொருரகம். இப்படி இருக்கிறது சினிமா.இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும். இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ” என்று டி.சிவா பேசினார்.
ஒரு படம் தயாரிக்க பல படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன் :எஸ்.தாணு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது ” இங்கே இயக்குநர் அம்மா, அப்பா, குரு, அறிமுகப் படுத்திய தயாரிப்பாளர் ஆகிய முன்று பேருக்கு நன்றி கூறினார்.இந்தப் படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மறக்கக் கூடாது. இயக்குநருக்கு தாய் தந்தையாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். இதை மறந்து விடக் கூடாது. நம்பி முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான்.. 1984ல் நான் நண்பர் சேகரனின் எண்ணத்தில் ‘யார்?’ என்று ஒரு திகில் படம் எடுத்தேன். 9 லட்சத்தில் முடிக்க நினைத்து வட்டி சேர்ந்து 36 லட்சத்தில் வந்து நின்றது. அதற்காக என்னிடம் இருந்த பல அருமையான படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன். படம் பெரிய வெற்றி அதே போல இப்படமும் வெற்றி பெற வேண்டும். இப்போது பெரிதாகி வரும் ‘க்யூப்’ பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும். பெரிய படங்களுக்கு ‘க்யூப்’பிற்கு அதிகமாக தொகை வாங்கிக் கொள்ளலாம். சிறிய படங்களுக்கு வாரம் மூவாயிரம் போதும் என்று கேட்டுள்ளோம். அதற்காக நானும் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் பேசி முடிவெடுத்திருக்கிறோம். ” என்று தாணு பேசினார்.