எல்லாத்துக்கும் காரணம் அந்த ஐம்பது பைசா மிட்டாய்தான்!
ஒரு வெற்றிப்படத்தின் பிள்ளையார் சுழி எந்த நிமிடத்தில் விழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சமயத்தில் அந்த பிள்ளையாராலேயே கூட! அப்படிதான் இருக்கிறது உறுமீன் படம் உருவான கதையும். இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி அடிப்படையில் ஒரு சினிமா எடிட்டர்.
ஒரு முறை ஒரு கடைக்கு சென்று ஏதோ வாங்கியிருக்கிறார். மீதி வரவேண்டிய ஐம்பது பைசா சில்லரைக்கு பதிலாக, “சார்… சில்லரை இல்ல. அதுக்கு பதிலா இந்தாங்க ஹால்ஸ்” என்றாராம் கடைக்காரர். “இது ஒரு வியாபார டெக்னிக் என்பதும், ஒவ்வொருவர் மீதும் இப்படி ஏதாவது ஒரு விஷயம் இந்த நாட்டில் திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்ற உண்மையும் புரிந்தது. இந்த ஒரு லைனை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான திரில்லர் கதையை உருவாக்கிவிட்டேன்” என்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.
அந்த விறுவிறு கதையில்தான் பாபிசிம்ஹா ஹீரோ. மூன்று ஜென்ம கதைதானாம் இது. பாபிசிம்ஹா ஹீரோவாகவும் அவருக்கு சமமான இன்னொரு ரோலில் மெட்ராஸ் புகழ் கலையும் நடித்திருக்கிறார்கள். இந்த மூன்று ஜென்மத்திலும் பாபிசிம்ஹாவும், கலையும் தொடர்வார்கள். ஆனால் இவர்களை மையமாக வைத்து நகர்வது காதல் இல்லை. படு ஸ்டிராங்கான வேறொரு விஷயம் என்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.
ஒரு முக்கியமான விஷயம். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் சென்சார் சர்டிபிக்கேட் கொடுப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகளை காட்டினார்களாம். அப்புறம் மறு தணிக்கைக்கு போய் சிந்தாமல் சிதறாமல் படத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர். அப்படியே சிந்தாம சிதறாம ஹிட்டையும் அள்ளுங்க!