ஏ 1 / விமர்சனம்

ஊரே உர்ரென்று இருக்கிறது. பிராமணாள் சங்கத்திலிருந்து ஒரு அறிவிப்பு. ‘நம்ம சமூகத்தை சேர்ந்தவா யாரும் இந்தப் படத்திற்கு போக வேண்டாமென்று!’ ஏன் இவ்வளவு பெரிய கோவாச்சு? வேறொன்றுமில்லை… அக்ரஹாரத்தில் வந்து தன் ஜட்டியை காயப் போட்டிருக்கிறார் சந்தானம். கொடி அறுந்ததா? ஜட்டி கிழிந்ததா? என்பதெல்லாம் விஷயமில்லை. இரண்டு மணி நேரமும் பஞ்சமில்லாமல் சிரித்து விட்டு வருகிறதே ரசிகர் கூட்டம்… அதுதான் விஷயம்!

‘விஷப்பல் என்று தூற்றுவோர் தூற்றட்டும்… விஷமப் பல் என்று போற்றுவோர் போற்றட்டும்… என் கடன் சிரிக்க வைப்பதே’ என்று இறங்கி அடித்திருக்கிறார் சந்தானம். “கடங்கார பயலுகளா, காமெடி எங்கேடா?” என்று சமீபகாலமாக கதறிக் கொண்டிருந்த அத்தனை ரசிகர்களுக்கும் வானம் கொள்ளா சிரிப்பு மழை. (வந்திருங்க சந்தானம். முழுசா வந்திருங்க. தமிழ்சினிமாவின் காமெடி பஞ்சம் ஒழியட்டும்)

ஹீரோயின் தாரா அலிசாவுக்கு தன் பிராமணாள் சமூகத்திலேயே ஒரு மாட்டுப் பையன் வேண்டும் என்பதுதான் ஆசை. அவன் பலசாலியாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கிய குறிப்பு. தன்னை தாக்க வரும் ரவுடிகளை அசால்டாக புடைத்துத் தள்ளும் சந்தானத்தின் நெற்றியில் விரல் மறைக்கா சைசில் பெரிய நாமம். அது போதாதா? படக்கென்று காதலில் விழுந்து சடக்கென்று லிப் கிஸ்சும் அடிக்கிறார். பிறகுதான் தெரிகிறது… இந்த நாமம், தன் கனவுக்கே போடப்பட்ட கட்டி நாமம் என்று. சந்தானம் அய்யங்காரில்லை! கல்யாணத்திற்கு குறுக்கே நிற்கும் ஹீரோயினின் தோப்பனாரை சம்மதிக்க வைத்து சந்தானம் எப்படி தாராவை கைபிடிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

சந்தானத்தின் லொள்ளு சபா டீமே இறங்கி அடித்திருக்கிறது. முக்கியமாக மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி, மனோகர் என்று எந்த முகத்தை பார்த்தாலும் பொத்துக் கொண்டு வருகிறது சிரிப்பு. எம்.எஸ்.பாஸ்கர்தான் சந்தானத்தின் அப்பா. ட்ரெய்லரில் பார்த்தது கொஞ்சம்தான். திரையில் பிரித்து மேய்கிறார் பாஸ்கர். அதிலும் குடிகார அப்பா என்றால் கேட்கவா வேண்டும்? ‘மூச்சு விடவாவது கேப் விடுங்கப்பா..’ என்று கதற விடுகிறார்கள் ரசிகர்களை.

சந்தானம் சற்றே இளைத்து இளைத்து ரகம் ரகமாக வருகிறார். படத்தை அவ்வப்போது ஷுட் பண்ணியிருப்பார்கள் போல. ‘நடுவில் புத்தி பேதலித்து என்னென்னவோ ட்ரை பண்ணினோம்… அத்தனையும் வீண்’ என்று இப்போது புரிந்து கொண்டிருப்பார். இவருக்கும் தாராவுக்கும் அப்படியொரு பொருத்தம். “எங்க அப்பா கெட்டவர்னு ஒரு புரூஃப் காட்டு. நான் உன்னை கட்டிக்கிறேன்” என்று சவால் விடும் தாராவை மடக்க சந்தானம் போடுகிற திட்டம் கடைசியில் தானாகவே வொர்க்கவுட் ஆகிறதே… அதுதான் செம ட்விஸ்ட்!

தாரா அலிசா தமிழ்சினிமாவுக்கு ஏற்ற பேஸ்கட்டும், தளதள உடல் கட்டும் கொண்டு இன்னும் நாலு வருஷத்துக்காவது தாக்கு பிடிப்பேன் என்கிறார். கூடவே வரும் அவர் தோழி கூட கவனிக்க வைக்கிறார்.

படத்தில் கொஞ்சமே கொஞ்சம் வரும் மொட்டை ராஜேந்திரன் போர்ஷனை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம். (தொழில் முறை ரவுடிகள் ராஜேந்திரனின் கேரக்டரை பார்த்தால், எதிர்கால பிழைப்புக்கு ஒரு புது ஐடியா கிடைக்கும். போறீங்களா?)

ஆக்ஷன் படங்களில் முழங்கி வந்த டப்பிங் புகழ் சாய்குமாரையும் விட்டு வைக்கவில்லை சந்தானம். இந்தப்படத்தில் அவர் கண்டிப்பான இன்ஸ்பெக்டர். (கட்டுடல் சாய்குமார், இப்படி சந்தான பாரதி மாதிரியாகிட்டாரே… என்ற ஷாக்கிலிருந்து மீளவே சில நிமிஷம் ஆயிருச்சு)

பின்பாதி முழுக்க சாவு வீடு. அங்க என்னத்தைய்யா சிரிக்க வைக்கறது என்று யோசிக்காமல் அங்கும் ரவுண்டு கட்டுகிறார்கள் சந்தானம் அண் டீம். நடு நடுவே வசனம் இல்லாமல் கடந்து போகிற காட்சிகளிலும் சொசைட்டியின் பாப்புலர் ஃபிகர்ஸ் சாயலில் சிலர். தமிழிசையக்கா மாதிரி கூட ஒருவர் கிராஸிங்! லொள்!

இவ்வளவு ஜாலியான படத்தில் நாம மட்டும் எதுக்கு சீரியஸ்சா? என்று நினைத்திருக்கலாம். சந்தோஷ் நாராயணனின் இசையில் கூட கிச்சுகிச்சு. அந்த, ‘மாலை நேர மல்லிப்பூ’ பாட்டு ஷ்யூர் ஹிட்!

சந்தானத்தின் நண்பர் ஜான்சன் இயக்கிய படம். ஒரு பழத்தை புழிஞ்சு இரண்டு கிளாஸ்ல குடிக்கிறளவுக்கு திக் போலிருக்கு. இல்லையென்றால் சந்தானம் போல ஜான்சனும், ஜான்சன் போல சந்தானமும் யோசித்திருக்க முடியுமா? ரிப்பீட் ப்ளீஸ் நண்பர்களே…

‘ஃபூ நூல்’ என்கிறார் சந்தானம். ‘பூணூல்’ என்கிறார் பிராமணர். நடுவிலிருக்கிற நமக்கெதுக்கு அதெல்லாம்? வந்தா கோபம்… சிரிச்சா போச்சு!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. […] post ஏ 1 / விமர்சனம் appeared first on New Tamil […]

  2. Kokki Kumar says

    Have you asked the movie goers to see Viswaroopam in the same way like how you’re telling?

    You cannot, because you would have lost your head if you said that….

    Shameless creatures you’re…..

Reply To Kokki Kumar
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
ஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்! விஜய்யின் முடிவு என்ன?

Close