ஆடாம ஜெயிச்சோமடா- விமர்சனம்

தெரிந்தேதான் வைத்திருக்கிறார்கள் இப்படியொரு தலைப்பை! சேப்பாக்கம் கிரவுண்டை விட்டு இந்த கதை வெளியே வருமான்னு தெரியலையே என்கிற அச்சத்தோடு உள்ளே போனால், ‘ஆடாம ஜெயிப்போமடா’ என்று படத்தை வேறொரு சந்துக்குள் தள்ளிக் கொண்டு போகிறார் இயக்குனர் பத்ரி. காமன் பாத்ரூம் விஜயலட்சுமிக்கும், கார் டிரைவர் கருணாகரனுக்கும் வருகிற லவ்வை, ஒரே ஒரு பர்சனல் பாத்ரூம் இணைத்து வைப்பது என்றொரு வித்தியாசமான பில்டப்போடு வேகம் எடுக்கிறது படம். நடுவில் ஒரு கொலை, அதை தொடரும் இன்வெஸ்டிகேஷன், கிரிக்கெட் சூதாட்டம் என்று படம் எங்கெங்கோ அலைந்தாலும், எல்லாவற்றையும் கோர்வையாக சொல்லி குளிர வைக்கிற இயக்குனர் பத்ரிக்கு ‘சிக்சர் திலகம் ’ என்ற பட்டத்தை வழங்கி விடுவது முதல் அவசியம்!

கால் டாக்ஸி டிரைவரான கருணாகரனுக்கு சாமுத்ரிகா லட்சணம் தெரியும் என்று பில்டப்புகிறார் அவரே. அந்த லட்சணம் அடுத்த சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது கருணாவுக்கு. தன் காரில் பயணம் செய்யும் பாலாஜிதான் தனது மனைவி மீது எவ்வளவு லவ் வைத்திருக்கிறார்! சாமுத்ரிகா லட்சணம் அப்படி என்று கருணாகரன் வியக்கும்போதே, அவள் வேறொருத்தன் பெண்டாட்டி என்கிற உண்மை புரிய வருகிறது. இவனைப்போய்… என்கிற எரிச்சலில் எங்கோ ஓரிடத்தில் அவரை இறக்கிவிட்டுவிட்டு நைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார். ஆனால் பாலாஜியின் பைக்குள் லட்சம் லட்சமாக பணம் இருக்கிறது என்பதே தெரியாமல்! அது தெரியவரும்போது, படக்கென சரணாகதியாகிவிடும் கருணா, அவரை வைத்தே தன் கடன்களை அடைத்து லைஃபில் செட்டில் ஆகிவிடலாம் என்று கணக்குப்போட, ‘ரெண்டு நாள் எனக்கு டிரைவரா இரு. உன் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்’ என்கிறார் பாலாஜியும். நம்பிக்கையோடு அவரை பிக்கப் பண்ண மீண்டும் ஓட்டலுக்கு போனால், சிரித்தபடியே செத்துக்கிடக்கிறார் பாலாஜி.

‘கொலைகாரன் நீதான்’ என்று போலீஸ் பிடிக்கிறது இவரை. ‘நானில்லை’ என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கருணாவுக்கு. கொலையாளிகளை தேடக் கிளம்பினால்தான் தெரிகிறது எல்லாம் கிரிக்கெட் சூதாட்ட கும்பல் என்று. அவர்களின் சூதாட்டத்தை வைத்தே தன் வாழ்நாள் சந்தோஷத்தை எட்டி விடுகிறார்கள் கருணாகரன், விஜயலட்சுமி தம்பதி. எப்படி? க்ளைமாக்ஸ்!

அப்பாவியான, அதே நேரத்தில் திருட்டுக் களை வழியும் கண்கள் கருணாகரனுக்கு. படத்தில் இவருக்குதான் இரண்டு டூயட். அப்படியென்றால் இவர்தானே ஹீரோ? பொங்கி வெடிக்கிற அளவுக்கு சிரிக்க வைக்க இயலாவிட்டாலும், கதையோடு ஒத்துப்போகிறாரா? சிரித்தேயாக வேண்டியிருக்கிறது. நள்ளிரவிலிருந்தே கதவை தட்டும் கடன் காரர்களின் பெயரை அவனவன் தட்டுகிற நேரத்தை வைத்தே இவர் சொல்வது செம்ம்ம சிரிப்ஸ்! உனக்கு காலை கடன் பிரச்சனை. எனக்கு காலையிலிருந்தே கடன் பிரச்சனை என்று போகிற போக்கில் இவர் சொல்லும் சமாதானத்திற்கு சிரிக்காதவர்கள் உண்டோ? (வசனம்- மிர்ச்சி சிவா! வேறு யார் இப்படியெல்லாம் எழுத முடியும். வாவ்…)

விஜயலட்சுமியெல்லாம் இன்னும் ஹீரோயினாக தாக்கு பிடிக்கிறார் என்றால், அவருக்கு எங்கோ லட்சுமிகடாட்சம் இருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வளவு பதற்றமான நேரத்திலும், ஓட்டலின் பாத்ரூமிற்குள் எட்டிப்பார்த்து வியக்கிறபோது பாவமாக இருக்கிறது.

ஜிகிர்தண்டா புகழ் பாபி சிம்ஹாவுக்கு இன்ஸ்பெக்டர் வேஷம். தனது மேலதிகாரியான கே.எஸ்.ரவிகுமாரிடம் ஒவ்வொரு முறையும் இவர் மொக்கை வாங்குவதுதான் பலே சிரிப்பு. ‘கொலை நடந்த இடத்துல இந்த டைரி கிடைச்சுது சார் ’ என்று இவர் கொடுக்க, அதில் எழுதப்பட்டிருப்பதையெல்லாம் விஷவலாக கற்பனை செய்து விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கையில் ‘அது என்னோட சினிமா கதை சார்’ என்று ஒருவர் வந்து நிற்க, பாபி முகத்தை பார்க்க வேண்டுமே! ‘நாங்க மஹாராஷ்டிரா போலீஸ்’ என்று கூறி பாபியிடம் இருந்து கருணாவை கடத்திப் போகும் நரேனின் கேரக்டரும் அம்சம். ‘மஹாராஷ்டிரா போலீஸ்ங்கிறீங்க, தமிழ் பேசுறீங்க?’ என்று மடக்கும் போது, நரேன் கோஷ்டியின் சமாளிப்ஸ் பலே பலே சிரிப்பு. தனது தம்பியை ஹீரோவாக வைத்து இவர் எடுக்கும் சூறாவளி படமும் இந்த படத்தினுள் இன்னொரு படமாக வந்து வயிறை பதம் பார்க்கிறது. (பேச்சுக்கு இல்ல, நிஜமாகவே இப்படி எத்தனை படங்கள் கோடம்பாக்கத்தில்!?) கையில் பணமில்லேன்னா பிச்சைக்காரன் தட்டுல இருந்து கூட களவாடலாம் என்று பாலாஜி செய்யும் ஒரு சேஷ்டைக்கும் கூட பலத்த கைத்தட்டல்!

வெளிநாட்டு பெண் ஒருவரும், நீக்ரோ ஒருவரும் கூட நடித்திருக்கிறார்கள். ‘அதென்ன வெள்ளைக்காரிக்கு ராணின்னு பேரு வச்சுருக்கீங்க?’ என்று விசாரிக்கும் பாபியிடம், இங்கிலாந்து ராணியின் போட்டோவை காட்டி, ‘இவங்க பேரு என்ன, ராணிதானே?’ என்று மடக்கும் நீக்ரோ… ம்ஹும் சான்சே இல்லை! குடி போதையில் அசால்ட்டாக கிரிக்கெட் பெட் ரகசியத்தை அந்த வெள்ளைக்காரி அவிழ்க்கிறார் என்பதெல்லாம் அநியாயம்ப்பா!

கிரிக்கெட் சூதாட்டம்னா என்ன என்கிறவர்களுக்கு, படத்தில் சிறுவர்களின் கிரிக்கெட்டை வைத்தே எளிய விளக்கம் கொடுக்கும் போது நிமிர்கிறார் பத்ரி. படம் துவங்கி சூடு பிடிப்பதற்குள் நமக்கு தாவு தீர்ந்து விடுகிறது. சில பல கொட்டாவிகளும் எட்டிப்பார்ப்பது சிக்கல்தான். அதற்கப்புறம் கொலை நடந்தது எப்படி என்கிற கோணத்தில் படம் நகர்வதும், கிரிக்கெட் சூதாட்டத்தின் முடிவென்ன என்கிற ஆவலும் நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறது கிளைமாக்ஸ் நோக்கி. பாலாஜி எப்படி இறந்தார் என்பதை பூவுக்கும் நோகாம நகத்துக்கும் வலிக்காம பத்ரி சொல்லியிருக்கும் விதம், அட போங்கப்பா!

ஒளிப்பதிவு துவாரகநாத். ஏக நாதனாய் நின்று அருள் புரிந்திருக்கிறார் மனுஷன். ஷான் ரோல்டன் இசையில் ஒரு பாடலையும் ரசிக்க முடியவில்லை.

ஆடாம ஜெயிச்சோமடா…. ஆங்காங்கே ரசிச்சோமடா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘குளிக்கிற விஷயத்தில் இவங்க எப்படி?’ நடிகையால் அவஸ்தைப்பட்ட இயக்குனர் நிம்மதி

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமில்லை. ஆர்வத்தோடு அறிமுகமான அத்தனை பேரும் ஜெயித்தார்களா என்றால், அதுதான் இல்லை. கோடம்பாக்கம் இதில் பல பேருக்கு ‘நோ பார்க்கிங்’ ஏரியாவைதான் ஒதுக்கிக்...

Close