ஆகம் விமர்சனம் (கழுகாருடன் ஒரு கண்டிஷன்ஸ் அப்ளை)
“பல்பு அவுட்டாகி பனிரெண்டு மணி நேரம் ஆச்சு. இன்னுமா சுவிட்சை நோண்டிகிட்டு இருக்க?” என்ற குரல் கேட்டு திரும்பினால் கழுகார் நின்றிருந்தார். “வாங்க கழுகார். உங்களதான் தேடிகிட்டு இருக்கேன். உங்க காம்பவுன்ட்ல புக் எழுதுன ஒரு ஆளாச்சேன்னு டைரக்டரை நம்பிதான் தியேட்டருக்கு போனேன். இனி வருவியா வருவியா…ன்னு விட்டு வெளாசிட்டாரு…” என்று ஆத்திரத்தோடு கூறிய என்னை ஏற இறங்க பார்த்த கழுகார், “முதல்ல எங்க காம்பவுன்ட்ல அதுக்கு விமர்சனம் எழுதுறாங்களான்னு பாரு” என்றபடியே நகர முற்பட்டார்.
அவருக்குதான் வறுத்த முந்திரி கொடுத்தால் நகர மாட்டாரே… தட்டை நீட்டியதும் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார். பஞ்சாயத்து ஆரம்ம்ம்ம்ம்பம் ஆனது.
“மிஸ்டர் கழுகார்… சின்ன படம் ஒடலேன்னு சின்னப்படம் ஓடலேன்னு அவனவன் புலம்புறான். பாராளுமன்றத்தை கூட்டி இது சம்பந்தமா விவாதம் பண்ணனும்ங்கிற அளவுக்கு குரல் கொடுக்குறான். இதுல இந்தாளு ஒரு படத்தை எடுத்து இனி சின்னப்படம்னாலே சுவத்துல போஸ்டர் ஒட்டக் கூட ஒருத்தனும் இடம் கொடுக்காதளவுக்கு பண்ணிட்டாரே…” என்று புலம்ப, “கதை என்னய்யா? அத சொல்லு” என்றார் கழுகார் மிகவும் கூலாக!
“இங்க படிச்சுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகாதீங்க. உங்க அறிவையெல்லாம் இந்தியாவுல விதைச்சா, இந்தியா வல்லரசாகிடும்னு சொல்றாரு ஹீரோ. ஆனால் அவரு வீட்லேயே அதுக்கு எதிர்ப்பு. கூடப் பொறந்த அண்ணன் அமெரிக்காவுக்கு போயிடுறான். அவனை அனுப்பி வைக்கும் நிறுவன அதிபர்களான ஒய்ஜிமகேந்திரனும், ரியாஸ்கானும், போலி டாகுமென்ட்ஸ் தயாரிச்சுதான் எல்லாரையும் அனுப்பி வைக்குறாங்க. இது ஒருபக்கம் இருக்க, நம்ம செயப்பிரகாஷ் ஒவ்வொரு மாவட்டத்திலேயும் இருக்கிற இயற்கை வளங்களையும் அதுக்கேற்றார் போல அந்தந்த மாவட்ட இளைஞர்கள் என்ன வேலை செய்யலாம்னும் ஒரு புராஜக்ட் ரெடி பண்றாரு. ஆனால் அதை அந்த வில்லனுங்க ரெண்டு பேரும் அபகரிக்க முயல்றாங்க. (அதற்குள்ளாகவே கழுகாரின் கண்கள் சொக்க ஆரம்பிக்கிறது. முகத்தில் சுடுதண்ணியை பீய்ச்சி அடித்து அவரை எழுப்பி உட்கார வைத்து மிச்ச கதையை கன்ட்டினியூ பண்ணினோம்)
நடுவுல செயபிரகாஷ்ட்ட இருக்கிற ஒரு விஞ்ஞானி பூட்டேயில்லாத ஒரு லாக்கரையும் அதுக்கு சாவியே இல்லாத ஒரு டெக்னிக்கையும் கண்டுபிடிக்கிறாரு. அதை திறக்கணும்னா ஹீரோ அமைதியா உட்கார்ந்து மனசை ஒரு நிலை படுத்தணும். அப்படி படுத்துனாதான் பூட்டு திறக்கும். செயப்பிரகாஷ் தன்னோட பொன்னான திட்டத்தை அந்த லாக்கருக்குள்ள வச்சு பூட்டிடுறாரு. எப்படியோ வில்லன் கோஷ்டியும் அவங்களோட சொத்து பத்து டாகுமென்டுகளை அதுக்குள்ள நைசா வச்சு பூட்டிடுது. நடுவுல திடீர்னு செயப்பிரகாஷு கோமாவுக்கு போய்விட, (கழுகார் இப்போது இறக்கையை சுருட்டிக் கொண்டு ஆவேசமாக எழ, மீண்டும் அவர் முகத்தில் சுடு தண்ணியை ஊற்றி கதற கதற விழிக்க வைத்து கதையை கன்ட்டினியூ செய்தோம்)
“…கோமாவுக்கு போயிடுறாரா? அப்புறம் அவர் குணமாகி வந்து நடந்த கதையையெல்லாம் ஹீரோவுக்கு ஞாபகப்படுத்தி அவன் மனசை ஒரு நிலைப்படுத்தி அந்த லாக்கரை திறந்து…. ஆங். சொல்ல மறந்தாச்சு. இந்த படத்துல மூணு பார் சாங் இருக்கு. ஹீரோவுக்கு ஒரு லவ்வர் கூட இருக்கா. அந்த ஹீரோ படம் முழுக்க முழுக்க பறந்து பறந்து பைட்டெல்லாம் வேற பண்றாரு” என்று கூற, (கழுகார் சப்தநாடியும் ஓடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தார். அவரது குரல் உடைந்து வார்த்தைகள் வெளிப்பட்டன)
“ஹீரோ ஹீரோங்கிறீயே? யாரு தம்பி அவரு? எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கு” என்றார் கழுகார் பரிதாபமாக. நாமும் மனசை ஒருநிலைப்படுத்தி யோசிச்சாலும் அந்த தம்பி பேரு ஞாபகத்துக்கு வராமல் போய்விட, செய்திக் குறிப்பை பார்த்து சொன்னோம். “இர்பான்…” (யப்பா…யய்யா… ராசா… வேல இருக்கு. விட்றா கௌம்புறேன் என்று கழுகார் கெஞ்சினாலும் அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா?)
“இந்த படத்துல ஒய்.ஜி.மகேந்திரன்தான் வில்லன்னா பாத்துக்குங்க கழுகார். அட… அந்த ரியாஸ்கான் இருக்காரே, சிவாஜி சமாதியில ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி ஒரு மண்டலம் உருண்டு புரண்டு நடிப்பை கத்துகிட்டு வந்திருப்பாரு போலிருக்கு. உதட்டுல லிப்ஸ்டிக்கை போட்டுட்டு நடிச்சு தள்றாரு. படத்தோட ஒரே ஆறுதல் அரவாணியா நடிச்சுருக்கிற பிரேம்தான்” என்று நாம் பேசிக் கொண்டே போக, கழுகாரும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். எவ்வளவு கதறுனாலும் விட மாட்டான் என்று யோசித்திருக்க வேண்டும். தரையில் பள்ளம் பறித்து அதற்குள் கிட்டதட்ட படுக்கிற பொசிஷனில் சாய்ந்தபடி, “நீ சொல்லுய்யா” என்றார். (இப்படிதான் நாங்களும் ஒரு கட்டத்துல, என்ன ஆனாலும் சரின்னு சரணாகதியானோம் என்று அவரிடம் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தோம்)
“இந்த கதையை எட்டு வருஷமா ஆராய்ச்சி செஞ்சு எழுதினாராம் படத்தோட டைரக்டர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். ‘எண்ணம், ஆராய்ச்சி, கதை இயக்கம்’னு டைட்டில்ல போட்றாரு” என்று நாம் கூறியதும், “என்னய்யா சொல்ற…?” என்று பேரதிர்ச்சிக்குள்ளானார் கழுகார். இந்த படத்துக்கு ஏன்யா இவ்வளவு பில்டப்பு என்று அவர் கேட்க வந்திருப்பார் போலிருக்கிறது. மெல்ல அடக்கிக் கொண்டு நம்மை ஏற இறங்க பார்த்தவர், “இப்ப என்னை என்னய்யா பண்ண சொல்றே…?” என்றார் அழுகையை அடக்கிக் கொண்டு.
“நீங்கதான் நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்கு பறந்தே போயிடுவீங்களே, நம்ம டைரக்டரை இறக்கையில ஏத்திட்டு போய், அமெரிக்காவுல விட்டுட்டு வந்திர்றீங்களா? ஹாலிவுட் படங்களா எடுத்து தள்ளட்டும். நம்ம ஊர்ல சின்னப்படங்கள் பொழச்சே ஆகணும்” என்று நாம் தீர்மானமாக சொல்ல, படீர் என்ற சப்தம் கேட்டது. கழுகாரை காணோம். ஜன்னல் மட்டும் ‘பப்பரக்கா’ என்று அகலத் திறந்து கிடந்தது.
-ஆர்.எஸ்.அந்தணன்
அந்தணன் செம! 🙂 கலக்கல் ரைட்டப்
இந்த கழுகார் அந்தக் கழுகாரா 🙂
அவரு பதில் சொல்லணும்னா நீங்க ஆகம் படத்தைப் பார்த்துவிட்டு டிக்கெட்டைக் காண்பிக்கணும்
செம்ம.. சிரிச்சு முடியல.