ஆவி குமார்- விமர்சனம்

இட்லி ஆவிக்கும் இடியாப்ப ஆவிக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதல்லவா? அப்படி இட்லி இடியாப்ப ஆவிகளாக கோடம்பாக்கத்தில் திரியும் அடியாத்தீ… ஆவிகளில் ஒன்றுதான் இந்த ஆவிகுமார். (நிஜத்தில் ஆவிகுமாரி..!) நல்லவேளை… சாம்பிராணி, உடுக்கை, ஜடாமுடி எதுவுமில்லாத ஆவி படம். அதற்காகவே பிடியுங்கள் டைரக்டரே, ஒரு கப் ‘ஆவி’ன்பால் சூடா…!

ஆவிகளுடன் பேசுகிற மீடியம்தான் படத்தின் ஹீரோ உதயா. சிங்கப்பூரில் ஒரு டி.வி நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறார். அங்கு வரும் போலீஸ் கமிஷனர் நாசர் முன்னிலையில் நிகழ்ச்சி நடக்க, ‘இதெல்லாம் டூபாக்கூர் ’ என்று விமர்சிக்கிறார் நோஸ்சர். இல்ல நிஜம்தான் என்று நிரூபிக்க கிளம்புகிறார் உதயா. அந்த நேரத்தில் இவர் தங்கியிருக்கும் இடத்தில் ஒரு அழகான வசிகரமான திவ்யமான சூப்பரான லட்டு ஒன்று நடமாடுகிறது. பார்த்தால்…? அடக் கண்றாவியே, அதுதான் ஆவி. நீ செத்துட்ட. உயிரோட இல்ல. அதனால் நீ ஆவி என்கிறார் உதயா. ‘இல்ல நான் சாகல’ என்கிறாள் அவள். தன் பெயரே தனக்கு மறந்து போன அந்த லட்டு யாரென்று அடையாளம் காட்ட கிளம்புகிறார் உதயா. கடைசியில் அந்த ஆவியை அவரே காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.

உடல் வேறு உயிர் வேறாக திரியும் ஹீரோயின் என்னவானாள்? உதயாவின் காதல் கை கூடியதா? கிளைமாக்ஸ்!

கனிகா திவாரிதான் ஹீரோயின். கனிகா தீவாளி என்றே கூட பெயர் வைத்திருக்கலாம். கொளுத்திவிட்ட மத்தாப்பூ மாதிரி என்னவொரு அழகு? தன் பெயரை அறிந்து கொள்ளும் போதும், தான் ஒரு டாக்டர் என்பதை அறிந்து கொள்ளும்போதும், தனக்கு பிடித்தமான அந்த ஆஸ்பிடலை அறிந்து கொள்ளும்போதும் அவர் முகத்தில் வெடிக்கும் சந்தோஷம் அழகோ அழகு. எப்படியாவது தன் உடம்பில் நுழைந்துவிட மாட்டோமா என்று தவிக்கும் தவிப்பையெல்லாம் நன்றாகவே வெளிப்படுத்துகிறது பொண்ணு.

மெல்ல மெல்ல காதலில் விழுந்து தவிக்கும் உதயாவின் நடிப்பும் ஓ.கேதான். எப்படியாவது கனிகா திவாரியின் உடலை காப்பாற்றி அதன் உயிரோடு சேர்த்துவிட வேண்டும் என்று அவர் தவிக்கிற தவிப்பும், போராட்டமும் கலங்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் கூட பின்னி எடுக்கிறார்.

சர்வ மத கூட்டு பிரார்த்தனை பண்ணியாவது சினிமாவிலிருந்தே ஜெகனை ஒழித்துக் கட்டிவிட்டால் தேவலாம். வாயை திறந்தாலே எரிச்சல்தான் வருகிறது. அதுவும் மிக சீரியஸ்சான உருக்கமான காட்சிகளில் கூட ஜெகன் அடிக்கும் முனை மழுங்கிய ஜோக்குகளை கேட்டால், பக்கத்தில் அரைக் கல் அகப்படுகிறதா என்று தேடுகிறது கண்கள். சினிமா எவ்வளவு பெரிய வாய்ப்பு? ஹோம் வொர்க்கும் பண்ணுவதில்லை. ரசிகர்களின் மனநிலையும் புரிவதில்லை. என்ன ஜென்மங்கள்ப்பா…

முனிஸ்காந்த் – தேவதர்ஷினி தனி காமெடியில் ஆங்காங்கே பச்சை. ஆங்காங்கே இச்சை. நன்றாகவே ரசிக்க வைக்கிறது ஜோடி. கூடவே மனோ பாலா வேறு. கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.

விஜய் ஆன்ட்டனி மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமை. ஆச்சர்யம் என்னவென்றால், பின்னணி இசையிலும் மனசை பிசைகிறார்கள். ராஜேஷ் கே.நாராயணனின் ஒளிப்பதிவில் அழகான மலேசியா சிங்கப்பூரில் நாலைந்து நாட்கள் சுற்றி வந்த உணர்வு.

கே.காண்டீபன் என்பவர் இயக்கியிருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்கிற திறமை இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதிய தாய் முத்துச் செல்வன் காமெடி போர்ஷன் தவிர்த்து தனக்கான திறமையை நிரூபித்திருக்கிறார்.

ஆவி….. ‘ராவி’த் தள்ளிவிடுமோ என்ற அச்சமெல்லாம் வேணாம். கொமாரு கோல் அடிச்சுட்டாப்ல!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷாவும் அதிமுகவும்… தாமதமாக மறுத்ததன் பின்னணி?

நீ எதுக்கு ஆசைப்படணும்ங்கறத கூட நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறும் போலிருக்கிறது வதந்தி! வேறொன்றுமில்லை... கடந்த இரண்டு நாட்களாக த்ரிஷாவை போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடுகிற...

Close