ஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க! டைரக்டர் பேச்சால் பரபரப்பு
‘யய்யா… தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க…’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை இளம் ரசிகைகள்! முரட்டு ஆசாமியாக இருக்கணும், குறைஞ்சது முப்பது பேரையாவது அடித்து புரட்டியவனாக இருக்கணும். ஆங்… முக்கியமா அழுக்கா இருக்கணும்! இப்படி போய் கொண்டிருக்கிறது அவர்களின் ரசனை. இந்த நேரத்தில்தான் இன்னமும் சாக்லெட் பாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் வினய். இனி எப்படியோ? காதல் மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரண் வசம் வந்து சேர்ந்திருக்கிறார் வினய். இனி ஏறுமுகம்தான் என்று நம்பலாம்!
இவர் நடிப்பதோ ஒன்றிரண்டு தமிழ் படங்கள். அந்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு கூட அவர் வரவில்லை என்றால் எப்படி? ஆத்திரத்திற்குள்ளான ஒரு தயாரிப்பாளர், ‘வினய்க்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. அதனால்தான் வரல.. ’ என்று கிளப்பிவிட்டுவிட்டார். பிறகென்ன? ‘அவருக்கு கல்யாணமாம்ப்பா. இனி நடிக்க மாட்டாரு’ என்று வேறொரு வெறி நாயை அவிழ்த்துவிட்டது இன்னொரு வதந்தி. பதறிப்போன வினய், இன்று சரண் இயக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ பிரஸ்மீட்டில் அதற்கான விளக்கத்தை கொடுத்தார். அவர் மட்டுமல்ல, அவர் சார்பில் சரணும் சில சங்கதிகளை அவிழ்த்துவிட்டார்.
‘வினய் வீட்ல செல்லப்பிள்ளை. அடிக்கடி ஷுட்டிங்னு ஷுட்டிங்னு வெளிநாட்டுக்கு போயிடுறாரா? எப்பவாவது வீட்டுக்கு வரும்போது, பெற்றோர்களை அழைச்சிகிட்டு கோவில்களுக்கு போக ஆரம்பித்துவிடுகிறார். அந்த மாதிரி நேரங்களில்தான் அவரால் விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போயிடுது. மற்றபடி ரொம்ப ரொம்ப நல்ல டைப் நம்ம வினய்’ என்றார். இந்த படத்தில் மூணு ஹீரோயின்கள் இருக்காங்க. இவங்களையெல்லாம் விட்டுட்டு நான் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்றதா இல்ல… என்று ஒரேயடியாக அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வினய்.
சரி அது போகட்டும்… படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஒரே ஒரு ஹீரோ. நியாயமாக ‘ஆயிரத்தில் மூவர் ’ என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்? இந்த கேள்விக்கு பதில் சொன்ன சரண், படத்தின் சஸ்பென்சே அதுதான்ங்க என்றார். ஏதேதோ வாயில் நுழையாத வடக்கத்திய பெயர் கொண்ட நடிகைகளுக்கெல்லாம் சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என்றெல்லாம் பெயர் வைத்திருந்தார் சரண். ‘இவங்களையெல்லாம் இந்த தமிழ்நாட்லேயே திருமதிகளாக்கி வச்சுக்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்க பொறுப்பு. ஏன்னா நிறைய காதலை உருவாக்கறதும் நீங்கதான். அழிக்கறதும் நீங்கதான்’ என்றார் பூடகமாக!
சார் கிசுகிசுக்களை சொல்றாப்ல….!