ABCD2 விமர்சனம் -முருகன் மந்திரம்
வாழ்க்கையின் எல்லாவற்றையும் தீர்மானிப்பது, முதல் வாய்ப்பல்ல… இரண்டாம் வாய்ப்பு… என்று எனர்ஜி தத்துவத்தோடு வந்திருக்கிறது முப்பரிமாண #ஏபிசிடி2.
திரை முழுவதும் அசைவுகளால் அழகாகிறது. படம் முழுதுவதும் நடனங்களாய் நிரம்பி வழிகிறது. எங்கும் நடனம், எதிலும் நடனம், எப்போதும் நடனம்… என்று விரிகிற திரைக்கதையில் நட்பும், நம்பிக்கையும் ஒன்றாகச் சேர்ந்து உற்சாகமாய் கைதட்டிக்கொள்கிறது. கை தட்டச்சொல்கிறது.
விளையாட்டு, வேகம், விவேகம், விடாப்பிடிவாதம், பொறுமை… ஜாலி, கேலி, சென்டிமெண்ட் எல்லாமே இருக்கிறது. ஆனால் அத்தனையும் மென்மையாய்… ஒரு மிகப்பெரிய கூடாரத்தில்… வண்ணங்களாய் நிறைந்து சிரிக்கும் மலர் கண்காட்சிக்கு மத்தியில் மிரள வைக்கிற சர்க்கஸ் நிகழ்த்தப்படுவது போல… கண்களுக்குள் குளிர்ச்சி… ஆனால் இதயத்திற்குள் எப்போதும் சிறு மிரட்சி… தயவு செய்து பெரிதாய் எதுவும் அதிர்ச்சிகள் வேண்டாமே என்ற பிராத்தனையின் கூடவே தான் படம் தொடர்கிறது.
நடனம் தான் பிரதானம் என்றாலும்… மாஸ்டர் பிரபுதேவாவின் கேரக்டர், ஆரம்பத்தில் ஆஹாஹா அலப்பறை. அப்புறம் அதிரடி வகுப்பறை… அட்டகாசம் பண்ணுகிறார். அதிலும் சார் நீங்க செம பிரமாதமா டான்ஸ் ஆடுறிங்க… “போடா போடா, அது எனக்கு தெரியும்” என்று பிரபுதேவா பண்ணுகிற ராவடி, செம காமெடி. இடையில் வந்து போகிற அந்த இல்லறப்பிரிவின் இடைச்செருகல் சிதறும் யதார்த்த வலிகளில்… நடன மாஸ்டர் பிரபுதேவா… நடிப்பு மாஸ்டர் ஆகிறார். அதை நடிப்பென்று கூட சொல்ல முடியவில்லை…
தன் சொந்த வாழ்க்கையை திரும்பிப்பார்ப்பது போல… தன் மகனை பார்க்கக்கூட அனுமதி இல்லாத கையறு நிலையில் கலங்கும்போது திகைக்க வைக்கிறார். அதிலும் அந்த அப்பா, மகன்… சந்திப்பின் போது… உங்கள் கண்களால், கரை தாண்டும் கண்ணீர்த்துளியை கட்டுப்படுத்த முடியாது. கிரேட். கிரேட். வருண் தவான்… ஸ்ரத்தா கபூர்… அண்ட் கோ… வருண் தவானும் ஸ்ரத்தா கடைசி வரை உற்சாகம் குறையாமல் ஆடுகிறார்கள். தங்கள் குழுவை ஆட்டி வைக்கிறார்கள்.
பாடல்கள் எல்லாமே பக்கா வெஸ்டர்ன். ஒரு தண்ணீர்ப்பாட்டு இருக்கிறது. கொட்டும் தண்ணீரில் கொலைவெறி டான்ஸ் ஆடும் அவர்களைப் பார்க்கும் திகீர் ஆகிறது நமக்கு. ரசிப்பதா, மிரள்வதா, பதட்டப்படுவதா, பயப்படுவதா… ஹைய்யோ… அட்டகாசம்… அமர்க்களம்… ஆரவாரம். இந்தியக் க்யூட் ஸ்ரத்தா கபூர் போதாதென்று, இன்னொரு வெள்ளைக்காரக் குட்டி லாரன் கோட்லீப் வரவைத்திருக்கிறார்கள். அறிமுகம் ஆகும்போதே ஒரு அழகான கெட்ட நல்ல ஆட்டம் போடுகிறார் லாரன். ஆஹாஹா.
முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் “கணபதி பாப்பா மோரியா” என்று பக்திப்பரவசம் பரப்பியவர்கள்…. இரண்டாம் பாகத்தில் பரப்புவது தேச பக்தி. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வாய்க்கா, வரப்பு தகறாறுகளையும் தாண்டி… அட நம்ம கூட இந்தியன் தான் இல்ல.. இந்தியா… இந்தியா… என்று ரகசியமாய் கத்துக்கிறது மனம். உணர்வுகளை உசுப்பேத்தும் இந்தியா, இந்தியன், நாடி நரம்புகளை துள்ள வைக்கும் நடனம், பிரமிக்க வைக்கிற சர்வதேச நடனப்போட்டி, கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கிற லாஸ் வேகாஸ்… இடையிடையே லேசாக கதவு திறக்கிற காதல், சென்டிமென்ட்… பக்கா ஃபிட் ஆக இருக்கிறது ஏபிசிடி2.
வெற்றி மட்டும் தான் கொண்டாட்டமாகும் இறுதி நிமிடங்களில்… ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் மௌனத்திற்குள் தள்ளி…. நிசப்தம் நிரம்பிய அரங்கமும் அதிர்ச்சியில் உறையும் பார்வையாளர்களுமாய்… அந்த கடைசி நிமிடங்கள்… சொல்வது என்ன?
படத்தின் முதலில் சொன்னது தான்…. கடைசியும், LIFE IS ALL ABOUT THE SECOND CHANCE. சினிமாவை காதலிப்பவர்களுக்கும் நடனத்தை காதலிப்பவர்களுக்கும்.. சினிமாவை ரசிப்பவர்களுக்கும் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ஹைடெக் தலைவாழை விருந்து வைக்கிறது ANY BODY CAN DANCE 2. ENJOY. இயக்குநர் ரெமோ டி சூஸா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் பட்டைய கௌப்பி இருக்கிறார்.
-முருகன் மந்திரம்