கொஞ்சம் மூடுறீங்களா? சூர்யா பேமிலி 25 லட்சம்! விஷால் 10 லட்சம்! நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி ஸ்டார்ட்!
இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “சினிமாவுல மட்டும் வாரி வாரி கொடுக்கும் வள்ளல்களாக நடிக்கிற நீங்கள்லாம், நிஜத்தில் எங்கேப்பா போனீங்க?” என்று குடைய ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் பொறுத்தால் யார் வீட்டு சுவற்றிலும் சினிமா போஸ்டரை ஒட்ட முடியாது என்று நினைத்திருக்கலாம். இன்று தனது நன்கொடை பயணத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் சூர்யா பேமிலியும், விஷாலும்.
நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், சூர்யா, கார்த்தி, சிவகுமார் சார்பாக 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் 10 லட்சமும், நடிகர் தனுஷ் 5 லட்சமும் கொடுத்து கணக்கை துவங்கியிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தன் பங்கு இவ்வளவு என்று தானாக முன் வந்து கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. யாரும் கேள்வி கேட்கும் முன்பே இந்த வேலையை செய்திருந்தால் அவரவர் ரசிகர்களுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்?
அடுத்து ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று கணக்கு போட காத்திருக்கிறது விமர்சகர்களின் வாய். கொஞ்சமா கொடுத்து கோராமையில சிக்கிடாதீங்க. அம்புட்டுதான் சொல்லிபுட்டோம்!