கரைச்சு காலி பண்ண நினைச்சாலும் முளைச்சு முன்னேறுவார் காளி!
சினிமாவையே கரைச்சு ‘காலி‘ பண்ணணும் என்கிற எண்ணத்தோடு கோடம்பாக்கத்துக்கு ரயில் ஏறுகிற ஆர்வலர்கள் பலர், இனிமேல் சினிமாவில் ‘காளி‘ போல ஆகாமல் விடக்கூடாது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிற அளவுக்கு நம்பிக்கை உரம் ஏற்றுகிறது காளியின் வாழ்க்கை.
பெயர் சொன்னால் தெரிந்து கொள்கிற அளவுக்கு இன்னும் நாற்காலியை பிடிக்கவில்லை காளி. ஆனால் அருகிலிருக்கும் போட்டோவை பார்த்தால், ‘அட நம்ம ஆளுப்பா இந்த பையன்’ என்கிற சந்தோஷம் பொசுக்கென்று சட்டை பாக்கெட்டுக்கு பக்கத்தில் குடியேறும். ஏனென்றால் காளியின் நடிப்பு அப்படி. பெப்பர் சிக்கனில் மெல்லிசாக விசிறப்பட்ட பெப்பர் போலவே எங்கேயும் துருத்திக் கொண்டு நில்லாமல் சுவை கூட்டும் நடிப்பு அவருடையது.
கோவில்பட்டி பக்கத்திலிருக்கும் குவளயதேவன் பட்டிதான் காளிக்கு சொந்த ஊர். ஆனால் வந்த ஊரான சென்னையில் அவர் பட்ட கஷ்டம், சினிமாவில் கூட நடக்காத சம்பவம். சரி அது எதற்கு இப்போ? இப்பதான் காளி இல்லாமல் கேரக்டர் ரோலே இல்லை என்றாகிவிட்டதே?
“ஓர் குரல்”, “முண்டாசுப்பட்டி”, “சைனா டீ”, “ரவுடி கோபாலும் நான்கு திருடர்களும்”, “சட்டம் தன் கடமையை செய்யும்”, “ஃப்ரீ ஹிட்”, “அ”, “தோஸ்த்”, “வசூல்”, இப்படி பல குறும்படங்களில் அடுத்தடுத்து நடித்த காளி இப்போது முழு நீள திரைப்படத்தில் அதுவும் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் முக்கியமான படங்கள் இவைதான். இப்போது வெளிவர உள்ள “முண்டாசுப்பட்டி”, ”பூவரசம்பீப்பி”, “கத சொல்லப் போறோம்”, மற்றும் “உறுமீன்”
காமெடியன்கள் ஹீரோவாகிக் கொண்டிருக்கிற காலம் இது. காளியும் சிறந்த காமெடியன்தான். காலம் அவருக்கு ஒரு இம்சை அரசன் 23 ம் புலிகேசியை தயார் செய்து வைத்திருக்கலாம், யார் கண்டது?
தெகிடியிலும் வசிகரமான, கவனிக்கத்தக்க நடிப்பு இவருடையது.