அதர்வாவை புழிஞ்சு அக்கக்கா கழட்டி… ஒரு ஈட்டி!
இந்த கதையை வேறு எந்த ஹீரோவிடம் சொல்லியிருந்தாலும், டைரக்டரிடமும், புரட்யூசரிடமும், “நீங்க பேசிகிட்டே இருங்க… இந்தா வந்துர்றேன்” என்று கிளம்பி கிழக்கு ஆப்பிரிக்காவுக்கே ஓடியிருப்பார். ஏனென்றால், ஒரு மெலுக்கான மென் டச் ஹீரோவை அதிர அதிர பயிற்சி கொடுத்து நிஜமாகவே ‘அத்தலட்டிக்’ ஆக்குவதென்பது டைரக்டருக்கும் சரி, சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவுக்கும் சரி… முள்ளை வச்சு பல்லு விளக்குறதுக்கு சமம்! அப்படியொரு ரிஸ்க்கான கேரக்டரை செம துணிச்சலாக அட்டர்ன் பண்ணியிருக்கிறார் அதர்வா.
படம் துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகிவிட்டாராம் இதற்கு. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கடுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார். பெங்களுரில் நிஜமாகவே ஒரு ஓட்டபந்தய கிரவுண்டில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். நாளொன்றுக்கு லொகேஷன் கட்டணமே மூன்று லட்சமாம். அங்கு நிஜமான வீரர்களுடன் ஓடுகிற அளவுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார் அதர்வா. ‘ஈட்டி’ எப்படி வேகமாகவும் கூர்மையாகவும் பாயுமோ? படத்தில் அப்படியே பாய்ந்திருக்கிறாராம் அதர்வா. அதனால்தான் படத்திற்கே ‘ஈட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ரவி அரசு.
கரூரில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமா ஆசை வந்துவிட்டது ரவி அரசுவுக்கு. அங்கிருந்து பாதிப்படிப்பில் சென்னைக்கு ஓடி வந்தவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். அதற்கப்புறம் தனது நெடுநாளைய கனவான இந்த கதையை படமாக்க நினைத்தவர் கண்ணில் பட்ட ஹீரோவுக்கெல்லாம் கதை சொல்லாமல், இந்த கதையை தாங்குகிற உடல்வாகும், மன பலமும் உள்ள ஹீரோதான் வேண்டும் என காத்திருந்தாராம். பொறுத்தமாக வந்து சேர்ந்திருக்கிறார் அதர்வா. பரதேசி துவங்குவதற்கு முன்பே இந்த கதைக்கு டிக் மார்க் கொடுத்துவிட்ட அதர்வா, அதற்கப்புறம் பரதேசிக்காக சில பல மாதங்கள் எடுத்துக் கொண்டாலும், ரவி அரசுவையும் விடாமல் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருந்தாராம்.
கதையை கேட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்ல வந்த ஸ்போர்ட்ஸ் கதைகளிலேயே இவ்வளவு பர்பெக்ட்டா ஒரு கதை வந்திருக்குமான்னு தெரியல. செலவை பற்றி யோசிக்க வேண்டாம் என்று பச்சைக்கொடி காட்ட, ஓட்ட ஓட்டமாக வளர்ந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது ஈட்டி!
பொருளையும் புகழையும் மட்டுமல்ல, ஏகப்பட்ட அவார்டுகளையும் கூட ஈட்டித் தரப் போகிறது ஈட்டி!