அதிபர் விமர்சனம்
கொழுத்த ராவு காலத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே தொலைந்து போன ‘திருட்டுப்பயலே’ புகழ் ஜீவன், திரும்பி வந்திருக்கிறார். அவர் வந்த நேரம் நல்ல நேரமா? அல்லது அதே ராவு காலமா? தீர்மானிக்க வேண்டிய நிலையிலிருக்கிறது ‘அதிபர்’. மனுஷன் தொலைந்து போன போது போட்டிருந்த அதே சட்டை, அதே பட்டையோடு மீண்டும் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார். அந்த பாகவதர் கிராப்பும், பவர்புல் சிரிப்புமாக அப்படியே இருக்கிறார் என்பது வெள்ளை வெளேர் சட்டையில் மேலும் கொஞ்சம் சொட்டு நீலம்!
கதை? இலங்கை தமிழரான அவர் மூன்று வயதில் புலம் பெயர்ந்து கனடா போகிறார். ‘நாடு விட்டு நாடு வந்த இடத்தில், இப்படி கேடு கெட்டு தெருச் சண்டை போடுறீயே, நீ உருப்புடுவியா?’ என்று அம்மா கோபித்துக் கொள்ள, ‘ஒரு ரிலாக்சுக்கு நான் சொந்த மண்ணுக்கு போறேன்மா’ என்று கிளம்புகிறார். கதைப்படி இலங்கைக்கு போக வேண்டியவர், அங்கு ஷுட்டிங் எடுக்க சவுகர்ய;g படாததால் சென்னைக்கு வருகிறார். (இதை மானசீகமாக டைட்டிலில் அறிவிக்கும் டைரக்டரின் நேர்மைக்கு ஒரு லைக்)
இங்கு வந்து ஒரு இடத்தை வாங்கி அபார்ட்மென்ட் கட்டி விற்கலாம் என்று கிளம்புகிறவருக்கு, வக்கீல் மற்றும் தாதாக்கள் கொடுக்கும் தொந்திரவும், அதிலிருந்து அவர் மீள்வதும்தான் கதை. ஒரு எறும்பு மட்டுமல்ல, எருமை சும்மா கிடந்தால் கூட வஞ்சகமும், வம்பும் அதன் மீது கூடு கட்டி குடித்தனம் நடத்தி விடும் என்பதை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் டைரக்டர் சூர்யபிரகாஷ். ஒரு நேர்மையாளனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கிற ஏமாற்றமும், லாக்கப்பும் ஐயோ பாவம் ஆக்குகிறது ஜீவனை. தர்மத்தின் வாழ்வதனை ரஞ்சித் கவ்வி, பின் ஜீவனே வெல்வதுதான் இந்த கதையின் ஒன் லைன்!
முதலில் இந்த படத்தின் பைட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சூடம் காட்டிவிட்டுதான் மற்றவர்களுக்கு கும்பிடு போட வேண்டும். அந்தளவுக்கு விறுவிறு சண்டைக்காட்சிகளுக்கு உத்தரவாதம் இருக்கிறது படத்தில். அதையும் ஜீவனே ஓங்கி உயர்ந்த கோலத்தில் நின்று அடித்து துரத்துவது மிரட்டலோ மிரட்டல்! ஜீவனுக்கு வந்த இடத்தில் பெண் பார்க்க கிளம்பும் தாய் மாமன் தம்பி ராமய்யாவின் கடி காமெடிகள் ஆங்காங்கே சுர்ரென சிரிக்க வைக்கிறது. ஆனாலும் அவரது மகன் என்கிற ஏழு வயது சிறுவன் தம்பி ராமய்யாவை வாடா போடா என்று அழைப்பதும், பெற்ற பிள்ளையை அவர் வாங்க போங்க என்று அழைப்பதும் எரிச்சல்ஸ்!
ஜீவனின் உற்ற நண்பனாக வரும் நந்தாவும், நந்தா போய் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும் சமுத்திரக்கனியும் ஒரு சேர மனசில் ஒட்டிக் கொள்கிறார்கள். அதிலும் சமுத்திரக்கனி பேசுவது சொந்த வசனங்களாக கூட இருக்கும். அந்த வசனங்களையும் சமுத்திரக்கனியின் இமேஜையும் பொருத்திப் பார்த்து ரசிக்க முடிகிறது.
படத்தின் கதாநாயகி வித்யா. ஒரே ஒரு டூயட்டுக்காக அவரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். மற்றபடி சடக்கென ஜீவனை கல்யாணம் பண்ணிக் கொண்டு காணாமல் போகும் அவர், அதற்கப்புறம் ஒன்றிரண்டு காட்சிகளில் தலைகாட்டி ஓய்வெடுத்துக் கொள்கிறார். நல்ல கேரக்டர் கிடைத்தால் நிரூபிப்பாரோ என்னவோ?
வில்லனாக வரும் ரஞ்சித் ஓகே தான். அவரது ஒட்டுத்தாடிதான் ஓவராக உறுத்துகிறது.
சென்னையில் நிலமோ, வீடோ வாங்குகிறவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை சுருக்கென மனதில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் சூர்யபிரகாஷ்.
சரி… படம் எப்படி? ‘பட்டா’ நிலம்தான், சந்தேகமில்லை!
-ஆர்.எஸ்.அந்தணன்