நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்! வாக்களிப்புக்குப் பின் ரஜினி கருத்து

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நடிகர் சங்க விவகாரம் இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. (வந்துடுமா?) ரஜினி யார் பக்கம்? விஜய் யார் பக்கம்? அஜீத் யார் பக்கம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் கடைசி வரை விடை தெரியாமலே போனது. இருந்தாலும் இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே வாக்கு சாவடிக்கு வந்து உற்சாகமாக வாக்களித்தார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், விஜய்யும்!

“நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை கண்டு, எங்களுக்குள் ஒற்றுமையில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது” என்று கூறிய ரஜினி, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்ற வேண்டும்” என்று தனது கருத்தை பதிவு செய்தார். மீடியாவுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு-

நம்ம நடிகர்கள் எல்லாம் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி…  நமக்குள்ள என்னிக்குமே எப்பவுமே ஒற்றுமை இருக்கும், இருக்கணும். சமீபத்தில் சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள், மக்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள். முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.

அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.

தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

3 Comments
  1. Girija Sundar says

    சில அரைவேக்காடுகள் தலைவர் அவர்களை வசைமாரி பொழிய ஒரு சந்தர்ப்பம் அமைந்ததாக கருதினர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஏற்க்கனவே சொன்னது போல “இறைவா, நண்பர்கர்கள் இடமிருந்து என்னை காப்பாற்று” என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப முடிவு அமைந்து உள்ளது. விஷால் அணிக்கு, தலைவர் அவர்கள் தான் முதன் முதலில் நேற்று இரவே வாழ்த்து சொல்லி விட்டார். அது தான் சூப்பர் ஸ்டார். விஷால் அவர்கள் தலைவர் சொன்னது போல “தமிழ்நாடு நடிகர், நாடக நடிகர் சங்கம்” என்று பெயர் மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

  2. தமிழ் குமரன் says

    கமல் கூறியதை ரஜினி கூறியிருந்தால்..
    நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த ரஜினியும் கமலும் பின்வருமாறு தங்கள் கருத்தைத் தெரிவித்து இருந்தார்கள்.

    காலையில் ஓட்டளிக்க வந்த ரஜினி கூறியது

    “யார் ஜெயித்துப் பொறுப்புக்கு வந்தாலும் முதலில் “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்ற பெயரை எடுத்துவிட்டு “தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்” என்று மாற்ற வேண்டும் என்றார்.

    மதியம் ஓட்டளிக்க வந்த கமல் கூறியது

    “பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பிய சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். இந்தியாவில் வட இந்தியாவில் ஒன்று இருக்கிறது, தென்னிந்தியாவில் ஒன்று இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. உள்ள பிரிவுகள் போதுமானது” என்றார்.

    தென்னிந்திய நடிகர் சங்கம்

    முன்பு தென் மாநிலங்களின் திரைத்துறை அனைத்தும் “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்ற குடையின் கீழ் இயங்கி வந்தன. தென்னிந்திய நடிகர் சங்கம் தாய் அமைப்பாக விளங்கி வந்தது.

    தற்போது அனைத்தும் மாநிலங்களும் தங்களின் வசதிக்காகத் தங்கள் மாநில பெயரில் / வேறு பெயரில் தனியாகப் பிரிந்து விட்டன. இருப்பினும் தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே தொடர்ந்து கொண்டு இருந்தது.

    இதை நம் மாநிலப் பெயரிலேயே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தார்கள். தேர்தலுக்கு முன்பு இது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது.

    இந்த நிலையில் ரஜினி “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிறகு இது பரபரப்பானது. ஊடகங்கள் இதன் பிறகு தேர்தல் நடைபெற்ற நாள் முழுவதும் கலந்து கொண்ட நடிகர்களிடையே இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தார்கள்.

    மதியம் வந்த கமல், ரஜினி கூறிய கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்தான “இந்திய நடிகர் சங்கம்” என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

    இதில் ரஜினி கமல் என்ற பிம்பத்தை விட்டு விடுங்கள். அவர்கள் இருவரும் கூறிய கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலே யார் கூறியது சரியான ஒன்று என்று புரியும்.

    இந்தியா ஒருமைப்பாடு என்பதெல்லாம் சரி ஆனால், ஒரு மாநில திரைத்துறை அமைப்புக்கு எப்படி “இந்திய நடிகர் சங்கம்” என்று பெயர் வைக்க முடியும்? லாஜிக்காக யோசித்தாலே கமல் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று புரியும்.

    “இந்திய நடிகர் சங்கம்” பெயரில் வைத்தால் இது ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் குறிப்பிடுவதாக வருகிறது. இதை எப்படி ஒரு மாநில அமைப்புக்கு வைக்க முடியும்?! மற்ற மாநிலங்கள் எப்படி இயங்கி வருகிறது என்பதைக் கமல் அறியாதவரா? ஒருவேளை இதே கமல் கூறியதை ரஜினி கூறியிருந்தால், தற்போது கமல் கூறியதை ஆதரிப்பவர்களும், நடு நிலை!! என்ற பெயரில் இருப்பவர்களும் என்னென்னெல்லாம் ரஜினியைப் பேசியிருப்பார்கள்?!

    ஞாயிறு அன்று இணையமே ரஜினியை திட்டி கரித்துக் கொட்டியிருக்காதா!! ரஜினி ஒரு கன்னடர், தமிழ் துரோகி அது இது என்று என்னென்ன பேசியிருப்பார்கள்.

    கமல் கூறிய கருத்து லாஜிக் இல்லாதது என்று தெரிந்தும் தற்போது அமைதியாக இருப்பவர்கள் ரஜினி கூறியிருந்தால் என்னென்ன பேசிப் பொங்கி இருப்பார்கள் என்பதை அவர்கள் மனது அறியும். கொண்டாட்டமாக இருந்து இருப்பார்கள்.

    இதைப் படித்துக்கொண்டு இருக்கும் ரஜினியை திட்டும் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும் யார் கூறியது சரியான கருத்து என்று. கமலை திட்ட வேண்டும் என்பது என் விருப்பமல்ல ஆனால், ரஜினியை மட்டும் “ஏன்” என்பதே கேள்வி!

    நடிகர் சங்கத் தேர்தல் என்ற பெயரில் மிகவும் மோசமான முறையில் அனைவரும் நடந்து கொண்டார்கள். ரஜினிக்கு நண்பர்களாக இரு பக்கத்திலும் இருக்கிறார்கள். எனவே, யாரையும் உசுப்பி விட அவர் நினைக்கவில்லை.

    இதைத் தன்னுடைய தேர்தல் தினப் பேட்டியில் மிகத் தெளிவாகக் கூறி விட்டார். ரஜினி கூறுவதை வைத்து அரசியல் செய்யலாம், அவரைத் திட்டலாம் என்று நினைத்தவர்களுக்குத் தன்னுடைய இரண்டு நிமிட பேட்டியில் சம்மட்டி அடி கொடுத்து விட்டார்.

    திருடனுக்குத் தேள் கொட்டியது போல மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பலரின் நிலையாகி விட்டது. இத்தனை நாள் சர்ச்சையை இரண்டு நிமிடப் பேட்டியில் காலி செய்து விட்டார்.

    ரஜினி பேட்டி வந்தது காலையில், கமல் பேட்டி மதியம். எனவே, கமல் கூறியதால் அதற்கு மாற்றாக ரஜினி இதைக் கூறி விட்டார் என்று கூறவும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. எனவே, எந்தப் பக்கம் போனாலும் ரஜினியை திட்ட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

    எனவே, வழக்கம் போல ஒருவரை வெற்றிக் கொள்ள முடியாதவர்கள் எடுக்கும் “தமிழன்” ஆயுதத்தை வைத்து ரஜினியை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். என்றைக்கு ஒருவரை மொழியை வைத்து திட்டுகிறார்களோ அப்போதே அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.

    விஷாலை “விஷால் ரெட்டி” என்று ராதிகா எப்போது கூற ஆரம்பித்தாரோ அப்போதே தோல்வி அடைந்து விட்டார். தங்களால் அடுத்தவரின் வெற்றியை ஜீரணிக்க முடியாத நிலை வரும் போது தான் இது போலச் செயல்படுகிறார்கள்.

    இதுவே அவர்களின் இயலாமையைத் தெளிவுபடுத்துகிறது.

    ஒரு பெண்ணைத் தங்கள் திறமையால் வெற்றிக் கொள்ள முடியாமல் அவர் குறித்துத் தவறாகக் கூறி அவரைக் கீழே தள்ள நினைப்பதற்கும் ரஜினியை தமிழனில்லை என்று கூறி விமர்சிப்பதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமுமில்லை.

    எத்தனை பேர் ரஜினியைக் கீழே தள்ள நினைத்தாலும் மக்களின் ஆதரவுடன் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்.

  3. ABBAS ALI says

    தலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.
    வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாகேஷா பிறந்திருக்கக் கூடாதா? சூர்யா ஏக்கம்!

நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால்...

Close