ஆ – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சீசன் மாறியதிலிருந்தே, பேய் பங்களா புரோக்கர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. நாலு வெள்ளை கவுன், முகத்தில் தடவ மக்கிப்போன மைதா மாவு கொஞ்சம், உருட்டல் முழிக்காரர்கள் சிலர், எதையாவது உருட்டி இசை பயமூட்டும் மீஜிக் டைரக்டர் கிடைத்தால் இன்னும் சவுரியம். பேய் படம் ரெடி! இப்படியெல்லாம் படம் எடுத்து, போட்ட பணமும் வராமல், வாங்கிய கடனுக்கு பதில் சொல்லவும் முடியாமல் நள்ளிரவில் கூட பேயாட்டம் திரிந்து கொண்டிருக்கிறார்கள் அநேக ஆவிப்பட தயாரிப்பாளர்கள். இந்த நேரத்தில்தான் இன்னொரு பேய் படமாக ஆ…! ஆனால் மேற்கூறிய எவ்வித இம்சையும் இல்லாமல்! அதற்காகவே ஹரி-ஹரீஷ் இரட்டை இயக்குனர்களுக்கு கொட்டை பாக்கு வெற்றிலை சகிதம் குலவையே போடலாம்!

படத்தில் தனித்தனியாக நான்கு எபிசோட்கள். நாலும் நாலு வகை! பேய் இருப்பதாக நம்பும் கோகுல்நாத், பாலா, மேக்னா மூவருக்கும், பேய் இல்லை என்று நம்பும் சிம்ஹாவுக்கும் ஒரு பந்தயம். ‘இருப்பதை நிரூபிச்சிட்டா என் சொத்துல பாதி உங்க மூணு பேருக்கும். இல்லேன்னா உன்னோட எமஹா பைக் எனக்கு’ என்கிறார் சிம்ஹா. பாதி சொத்தே பல கோடியாம். அதுக்கு எப்படி எமஹா பைக் ஈடாகும்? என்றெல்லாம் வேறொரு கதைக்குள் நுழைந்து இம்சிக்காமல் நேரடியாக பேய் வாசஸ்தலத்திற்கு கிளம்பிவிடுகிறார்கள் இயக்குனர்கள்.

நடுக்கடலுக்கு போன போட், திரும்பல. அதில் போன காதல் ஜோடி அதே போட்ல ஆவியா திரியுது என்று கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட படகுக்கு கிளம்புகிறார்கள் மூவரும். அந்த கடல் பிராந்தியமும், பொசுக்கென்று வந்து முகம் காட்டிவிட்டு போகும் அந்த ஆவியும் லேசாக குலுக்கிப் போடுவதை தைரியமாக ஒப்புக் கொண்டேயாக வேண்டும். அதற்கப்புறம் ஜப்பானுக்கு கிளம்புகிறார்கள் மூவரும். அங்கு மருத்துவமனையில் நடக்கிறது அந்த சம்பவம். நம்ம ஊரு ஆசாமிகளுக்கு இருக்கிற கண்கள் மாதிரி உருட்டி முறைக்க முடியவில்லை அவர்களால். இருப்பதே சிக்கனக்கண்ணு, சின்னக்கண்ணு. அதுல எங்க உருட்டுறது? முறைக்கறது? நமக்கு சிரிப்புதான் வருகிறது. அட.. அந்த ஜப்பானையாவது கண் கொள்ளாமல் ரசிக்கலாம் என்றால், ஒளிப்பதிவாளர் செல்போனில் பதிவு செய்திருப்பார் போலிருக்கிறது. செம எரிச்சல்!

அப்படியே வண்டியை துபாய்க்கு விடுகிறார்கள் மூவரும். அங்கு ஒரு ஆன்ட்டி. தன் துப்பட்டாவுக்குள் முகம் புதைத்துக் கொண்டு ‘மெல்ல திறந்தது கதவு ’ பட அமலா எபெக்ட்டில் திரிகிறார். இத்தனை நாளும் அவர் புருஷன் என்று சொல்லி வைத்திருந்தது புருஷன் இல்லீங்… வேறொருவன் சிக்கியதும் அவர் எடுக்கிறாரே ஓட்டம்… படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை போக்குகிறது அது. ஆனால் அந்த பாலைவனத்தில் இவர்கள் தப்பித்து ஓடுகிற காட்சியில் லேசாக மூச்சிரைக்கிறது நமக்கு. அந்த ஆன்ட்டிதான் பேய்னு தெரியுதே? அப்புறம் ஏன் பாலா, அவர் அழைத்ததும் காதல் மன்னன் ஜெமினி எபெக்டில் முகத்தை வைத்துக் கொண்டு பின்னாலேயே போக வேண்டும்?

கடைசி கடைசியாக எம்.எஸ்.பாஸ்கரின் ஏ.டி.எம் அட்டம்ட்! மூன்றையும் சேர்த்து வைத்து இதில் மிரட்டுகிறார்கள் இயக்குனர்களான ஹரியும் ஹரீஷும். ரூபாயை கையில் வைத்துக் கொண்டே இறந்து போன அந்த வாலிபன், மீண்டும் அதே டெத் கெட்டப்போடு பாஸ்கரை வளைப்பது செம த்ரில். அதுவும் அந்த ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணமாக பறக்கிற காட்சி, கிராபிக்ஸ் அழகு.

நடுநடுவே காட்டுகிறார்கள் சிம்ஹாவை. வேக வேகமாக வளர்ந்து வரும் சிம்ஹா, இந்த படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டது பாராட்டுக்குரியது. சில காட்சிகளே வந்தாலும், திறமை பளிச்சிடுகிறது அவர் நடிப்பில். இந்த படத்தின் ஆகப்பெரிய குறையே ஒளிப்பதிவாளர் சதீஷ்ஜியும், இசையமைப்பாளர் கே.வெங்கட்பிரபு சங்கரும்தான்.

ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் டிராலியை சுற்ற விட்டுவிட்டு டிபன் சாப்பிட கிளம்பிவிட்டார் போல. நமக்கு தலையே சுற்றிப்போகிறது. இன்னொரு காட்சியில் மியூசிக் டைரக்டர் ங்கொய்ய்ய்ய்ய் என்ற ஒலியை சுமார் ஐந்து நிமிடம் ஒலிக்கிறார். கோயமுத்துர் பக்கமாக இருந்தால் ‘தொழிற்சாலை சங்கு ஊதியாச் மாப்ளே’ என்று தியேட்டரிலிருந்து ஆட்கள் எழுந்து ஓடியிருப்பார்கள்.

அடுத்தடுத்து வந்து தமிழ்சினிமாவை தாக்கிக்கொண்டிருக்கும் ஆவி பட வரிசையில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும் முக்கிய இடத்திலிருக்கிறது ஆ!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கதவை சாத்திக் கொண்டு காச்…மூச்! ஆத்திர மிஷ்கின், அசைந்து கொடுக்காத பாலா?

‘நெட்டை தொறக்க முடியல. திட்றானுங்க...அசிங்க அசிங்கமா திட்றானுங்க’ என்று சமீபத்தில் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்த மிஷ்கினுக்கு, அந்த மனக்குமுறலை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரி ஒரு...

Close