கௌம்பிருச்சுய்யா கௌம்பிருச்சு! ஐ படத்தின் வெளிநாட்டு பிரதிகள் அனுப்பப்பட்டன!

ஏழுரு மாரியாத்தா கோவில்லேயும் கூழு ஊத்தி கும்பிட்ற வேண்டியதுதான்! சிறு மற்றும் சின்னஞ்சிறு படங்களை அச்சுறுத்தி வந்த ஐ ஒரு வழியாக சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டது. இந்த சிறு பட தயாரிப்பாளர்கள் எப்போதெல்லாம் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய கிளம்புகிறார்களோ…? அப்போதெல்லாம் ‘ஐ வருதே. என்ன பண்ணுவீங்க?’ என்று அச்சமூட்டிக் கொண்டேயிருந்தார்கள் தியேட்டர் வட்டாரங்களில். இதனால் தங்கள் படங்களின் வெளியீட்டை கடும் மன சூட்டோடு ஒத்தி வைத்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் இந்த செய்தி தேனாக இனிக்கும். இனி வெற்றியோ, தோல்வியோ? குறைந்த பட்ச தியேட்டர்களாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது அத்தனை பேருக்கும்.

நேற்று ஐ படத்தின் வெளிநாட்டு பிரதிகளும் இந்தி படத்தின் பிரதிகளும் அனுப்பப்பட்டுவிட்டன. இன்று தெலுங்கு பிரதிகள் அனுப்பப்படுமாம். எல்லாம் சரி. டெல்லிக்கு போனார்களே? அங்குள்ள தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துவிட்டதா?

தமிழகத்தில் சென்சார் செய்தவர்கள், படத்தின் இரண்டாம் பகுதியில் கோரமான விக்ரமை பார்த்தால் குழந்தைகள் அஞ்சுவார்கள் என்று யு/ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டது. இப்படி யு/ஏ கிடைத்தால் கிடைக்க வேண்டிய 30 சதவீத வரி விலக்கு கிடைக்காமல் போய்விடும். 100 ரூபாய் வசூலில் 70 ரூபாய்தான் கைக்கு கிடைக்கும். அப்படி பார்த்தால் பெருத்த நஷ்டம் ஏற்படுமே? அதனால்தான் டெல்லிக்கு போயாவது யு வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார் தயாரிப்பாளர். ஆனால் அங்கும் ஏமாற்றம்தானாம். யு/ஏ வில் உறுதியாக இருந்துவிட்டது டெல்லி.

இனியும் பொண்ணை பூட்டி வச்சுருந்தா அவ கிழவியானாலும் ஆச்சர்யமில்லை என்பதால், பெரிசோ, சிறுசோ, வந்ததோ, வெந்ததோ, தள்ளிவிட்ருவோம்னு படத்தை வெளியிட தீர்மானித்துவிட்டார் தயாரிப்பாளர். ஆக மொத்தம் இந்த வருட பொங்கல் ஐ பொங்கல்தான். சந்தேகம் வேண்டாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் சாக மாட்டேன்! அஜீத் ஆவேசம்….

முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி... அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும்,...

Close