அடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பாலா

அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்! மூத்தவர்கள் வாழ்த்த, இளையவர்கள் மகிழ்ந்த அந்த பொன்னான தருணம் நேற்று சென்னையில் அரங்கேறியது. ஆனால் ரஜினியோ, இளையராஜாவோ, வைரமுத்துவோ அங்கு இல்லை. ஆனால் அவர்கள் திரையில் வந்து ஆசிர்வதிக்கும் அந்த ஆடியோ வீடியோ பிரசன்ட்டேஷன் இருந்தது.

அவங்க மூணு பேரையும் இங்கு அழைக்கணும்னுதான் நினைச்சோம். ஆனால் அவங்களை ரிசீவ் பண்ணி உட்கார வைக்கிறதுல இருக்கிற சிக்கல்களை உணர்ந்து வீடியோ பிரசன்ட்டேஷனாவே பண்ணிட்டோம் என்றார் ஐஸ்வர்யா ரஜினி. (வைரமுத்து இருக்கும் இடத்தில் இளையராஜா இருக்க மாட்டார். இவர் இருந்தால் அவர் வரவே அச்சப்படுவார். அதனால்தான்… ) இவரது இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு இசைக்கருவிகள் இல்லாத இல்லாத கெட்டிமேளம்!

டைரக்டர்கள் பாலா, எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த விதத்தில், தனது கம்பீரத்தையும் தேர்ந்த அறிவையும் வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா தனுஷ். இவருடன் இணைந்து மதன் கார்க்கி, யுவன், கல்பாத்தி அகோரத்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் நிகழ்ச்சியை தொகுத்தளித்தது சுவாரஸ்யம்.

மைக்கை பிடித்த பாலா, நேரடியாக ஐஸ்வர்யா தனுஷை பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார். இந்த படம் கண்டிப்பா வெற்றி பெரும். ஏன் சொல்றேன்னா உனக்கு பிடிவாதம் அதிகம். அடம் பிடிச்சே நினைச்சதை சாதிச்சுருவ. இந்த படத்தின் பூஜைக்கு என்னை கூப்பிட்ட. அப்ப நான் வேறொரு ஊர்ல இருந்தேன். இல்ல அண்ணா. நீங்க வந்துதான் ஆகணும்னு சொன்னே. வந்துட்டேன். அதே மாதிரி இப்பவும் என்னை நீ கூப்பிட்டப்ப, நான் அவுட்டோர் ஷுட்டிங்ல இருந்தேன். விட்டுட்டு வர முடியாது. இங்க 100 பேரு இருக்காங்க. எப்படி விட்டுட்டு நான் கிளம்பி வர முடியும்னு கேட்டேன். ஆனா நீ பிடிவாதமா வந்தே ஆகணும்னு சொல்லிட்ட. அதனால் வந்தேன்.

ரஜினி சார் பொண்ணா இருந்தாலும் வேறொரு தயாரிப்பாளர்ட்ட கதை முறையாக கதை சொல்லி அப்புறம்தான் இந்த வாய்ப்பை நீ வாங்கியிருக்கே. கண்டிப்பா உனக்கு வெற்றிதான் என்றார் பாலா.

யுவனின் பாடலை விழாவுக்கு வந்த அனிருத் மனசார பாராட்டியதும் கூட இளைய தலைமுறையின் பக்குவத்திற்கான எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படியே இன்னொரு கூத்தும் நடந்தது. அது செம்ம….

படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பற்றி பேசிய காமெடியன் சதீஷ், வேல்ராஜ் சார் எப்பவுமே செட்ல காயத்ரி ரகுராம் கூடவேதான் இருப்பார். சப்போஸ் அவர் செல்போன் ரீச் ஆவலேன்னா நாங்க காயத்ரிக்கு போன் அடிச்சுருவோம். எப்படியிருந்தாலும் அவர் அங்கதானே இருப்பார்ங்கிற நம்பிக்கை. இப்ப கூட பாருங்க. காயத்ரி பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கார் என்று சொல்ல, அரங்கம் அதிர்ந்தது. ஐயோ பாவம்…அவர்தான் மூச்சடைத்துப்போனார்.

விழா முடிஞ்சு வீட்டுக்கு போகணும்ல?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மோசடி செய்தாரா இளையராஜா? காவல் துறை மற்றும் இசையமைப்பாளர் சங்கத்தில் புகார்!

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தார்....

Close