குடிசை வாழ் மக்களை பற்றி பேசினா கோவப்படுறாங்க! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவலை!
வெண்ணை மிதக்குது, தொன்னை மிதக்குது, வெற்றுக் காகிதம் நான் மிதக்கறதுக்கு என்ன? என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சென்னை மக்களின் சராசரி அவலம்! வீடா, குளமா? ஆறா, ரோடா? என்றே தெரியாதளவுக்கு அடிச்சு துவைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் சாக்கடை ப்ளஸ் மழைநீரின் மகிமை இன்னும் இன்னும் சில வாரங்களில் எப்படியெல்லாம் படுத்தப் போகிறதோ? அதை விடுங்கள்… ஒரு நடிகை இவ்வளவு மழையில் குடிசைப்பகுதி மக்களை நினைத்து கண்ணீர் விடுகிறார் என்றால், அவர் அன்னை தெரசாவாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களின் சென்னை தெரசாவே … என்று பாராட்டுகிற அளவுக்கு ஒரு விஷயத்தை போல்டாக பேசினார்.
அட்டக்கத்தி, சூது கவ்வும், காக்கா முட்டை என்று கலக்கிய நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்தான் அவர்.
‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது என்னை சைதாப்பேட்டை ஸ்லம் பகுதியில் கொண்டு போய் விட்டுவிட்டார் டைரக்டர் மணி கண்டன். அங்கேயே இருந்து அவங்களை முழுசா படிச்சேன். அதனால்தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சுது. கிட்டதட்ட அறுபது நாட்கள் நான் அவங்களோட வாழ்ந்திருக்கேன். வெள்ளம் மழையில்லாத அந்த சூழ்நிலையிலேயே அவங்களோட வாழ்க்கையை நினைச்சு கண் கலங்கியிருக்கேன். சென்னையில் சைதாப்பேட்டைங்கறது எப்படியொரு மையப்பகுதி? அங்கே வாழ்ற ஜனங்களை பற்றி கவலைப்படறதுக்கு யாருமேயில்லையே?ன்னு நினைச்சுருக்கேன்.
ஒருபேட்டியில் அவங்க வேதனையை பற்றி நான் பேசியதை கேட்டுட்டு எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்திச்சு. நீ ஒரு நடிகை. வந்தமா, நடிச்சமான்னு போகாம உனக்கு எதுக்கு இந்த அக்கறையெல்லாம்னு மிரட்ட ஆரம்பிச்சாங்க. ஆனால் இப்ப இந்த கொட்ற மழையில் அவங்களை பற்றி நினைச்சா, ஒரு வாய் சோறு கூட உள்ள இறங்கல. பேசுனா தப்புன்னு சொல்வாங்க. நான் என்னத்தை பேசறது? என்றார் கண்களில் மழைநீரை வெல்லும் கண்ணீருடன்.
நடிகைகளின் நிஜமான உணர்வுகள் கூட, சில நேரங்களில் நடிப்பாகவே பார்க்கப்படுகிறது. என்ன செய்ய?