‘மூன்று முகம்’ வேணாம் அஜீத் பிடிவாதம்!
‘அஜீத்தின் அடுத்த படம் என்ன?’ டி.என்.பி.எஸ் சி தேர்வு தாளில் கூட இப்படியொரு கேள்வியை கேட்டு விடுகிற அளவுக்கு அவரை நெருக்கமாக வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறது ஊர் உலகம். அஜீத்தும், தனது முன்னாள் நண்பரும், சமீபத்திய எதிரியுமான எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சு. ஆனால் எல்லாவற்றையும் காலி பண்ணிவிட்டது அந்த தகவல். ஆமாம்…. சத்யஜோதி நிறுவனத்திற்காக சைன் பண்ணியிருக்கிறாராம் அஜீத். இந்த படத்தை இயக்கப் போவது கே.வி.ஆனந்த் என்பதும் முடிவாகியிருக்கிறது.
வெகு காலமாகவே ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ படத்தில் நடிக்க விருப்புவதாக முன்னணி ஹீரோக்கள் பலர் குறித்து தகவல் கிளப்புவார்கள். ஆனால் அந்த விஷயத்தில் அஜீத் மட்டும் ‘நமக்கெதுக்கு அது?’ என்கிற டைப். இந்த முறையும் அவரிடம், ‘மூன்று முகம் படத்தை ரீமேக் பண்ணலாமே?’ என்று சத்யஜோதி சார்பில் கேட்கப்பட்டதாகவும், ‘கே.வி.ஆனந்த் எனக்கு சொன்ன சப்ஜெக்டே நல்லாதான் இருக்கு. அதையே பண்ணலாம்’ என்று அவர் பதிலளித்தாகவும் காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி.
கே.வி.ஆனந்த் படம் என்றாலே அதில் சமூக கருத்து ஏதாவது ஒன்று அழுத்தம் திருத்தமாக ஒளிந்து கொண்டு தலையை நீட்டும். இந்த படத்திலும் அப்படி ஏதாவது இருந்தால், அது அஜீத்திற்கும் பெருமைதானே?
எப்பங்க ஷுட்டிங்?