அந்த விஷயத்துல அஜீத்தும் ஆர்யாவும் ஒண்ணு?

வேறென்ன… ரேஸ்தான்! ஒருகாலத்தில் அஜீத் பைக் ரேஸ் மீது வெறி பிடித்துக் கிடந்தார். தனது படத்தின் ஷுட்டிங்கையெல்லாம் கூட விட்டுவிட்டு ரேஸ் பைத்தியமாக அவர் திரிந்ததை சற்று அதிர்ச்சியோடுதான் கவனித்து வந்தது சினிமாவுலகம். முன்னணி தயாரிப்பாளர் கேயார் தனது வாயை வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல், ‘அஜீத்தை நம்பி பல தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை கொட்டி வருகிறார்கள். அவர் பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்துக்குள்ளானால் அவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு யார் பாதுகாப்பு? இதனால் அஜீத் ரேசை கைவிட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

அவ்வளவுதான்… அஜீத் பொங்கி விட்டார் பொங்கி. இப்போது இருக்கிற அளவுக்கு அப்போது பக்குவம் இல்லை அவரிடம். ‘கண்ட நாயும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டியதில்லை’ என்று ஒரு பிரபல வார இதழில் பேட்டியே கொடுத்துவிட்டார். இந்த சுடு சொல் காரணமாக தமிழ்சினிமாவில் பெரிய சலசலப்பு எழுந்தது. அதற்கப்புறம் இந்த பைக் ரேஸ் கதையெல்லாம் சினிமா வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை தானாகவே உணர்ந்து கொண்டார் அஜீத். அவர் அப்போது பேசிய வார்த்தைகளும் மெல்ல மெல்ல காற்றிலிருந்து அழிந்தே விட்டது.

இப்போது ஆர்யா சீசன். இப்போதும் அதே ஊர் வாய். ‘ஏம்ப்பா… இந்த தம்பி இருக்கிற வேலையை விட்டு ஸ்வீடன்ல நடக்கிற சைக்கிள் ரேசுக்கு போறேன்னு கிளம்பி ஓடுது. 300 கி.மீ தூரத்தை பதினைந்து மணி நேரத்துல கடந்துட்டாருன்னு பரிசெல்லாம் வேற கொடுத்துருக்காங்களாம். போதும்ப்பா… வெட்டி வேலையை விட்டுட்டு மார்க்கெட் இருக்கும் போதே நாலு படத்துல நடிச்சு ரூவாய தேத்திக்க சொல்லு’ என்கிறார்களாம்.

இந்த விமர்சனங்களெல்லாம் தன் காதுக்கு வந்தாலும், அஜீத் போல அனல் கக்காமல் ஸ்மார்ட்டாக சிரித்துவிட்டு நடையை கட்டுகிறாராம் ஆர்யா. இப்பவும் தினந்தோறும் மூணு மணி நேரம் சைக்கிள் பிராக்டீஸ் செய்து வருகிறார். அடுத்து எந்த நாட்டுக்கு கிளம்புவாரோ?

பல ஹீரோக்களுக்கு பசி ஏப்பம். ஆர்யா மாதிரி ஆசாமிகளுக்கு புளி ஏப்பம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை...

Close