வலிமை அப்டேட் தேதி! மீண்டும் தவறு செய்கிறார்களா?
விட்டால் ஐ.நா சபைக்கே கூட ஒரு மனுவை தட்டி விட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு “வலிமை அப்டேட் சொல்லுங்க“ என்று சமுதாயத்தின் எல்லா மட்டங்களில் இருப்பவர்களையும் வளைத்து மறித்து படுத்தி எடுத்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். ஆளு வச்சு அசிங்கப்படுத்துறாங்களோ? என்று தனது போட்டி ஹீரோவை அஜீத் தரப்பே சந்தேகப்படுகிற அளவுக்கு போனது இந்த தொந்தரவு.
கொஞ்ச நேரம் சும்மாயிருங்களேன்ப்பா… என்ற எரிச்சலை, பல்வேறு வார்த்தைகளில் சொல்லி பதப்படுத்தி வந்த அஜீத்தின் தரப்பு, ஒரு கட்டத்தில் வாய்விட்டு அறிவிப்பு கொடுக்கிற அளவுக்கு போனது. “வலிமை பற்றிய அறிவிப்பு வரும் வரைக்கும் ரசிகர்கள் பொறுமை காக்கவும்“ என்பதுதான் அந்த அறிவிப்பு. அப்படியிருந்தும் கட்டுக்கடங்காத ஆர்வத்தோடு ஆங்காங்கே நடமாடி வந்த அஜீத் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் போய் கோரிக்கை வைக்க, அஜீத்தின் உச்சி மண்டையில் ஒரே சுர்ர்ர்ர்…
இது நாள் வரை எதற்கும் அசைந்து கொடுக்காத வலிமை தரப்பு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, வெந்த புண்ணில் சந்தனத்தை தடவியிருக்கிறது. “அஜீத்தின் பிறந்த நாளான மே.1 ந் தேதி வலிமை அப்டேட் தரப்படும்“ என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மே 2 ந் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள், யார் ஜெயிப்பார்கள்? என்கிற கருத்து கணிப்புகள் உலா வரத் தொடங்கியிருக்கும். நாடே, “நமது அடுத்த தலையெழுத்து அவரேதானா? இல்ல வேறொருத்தரா?“ என்று ஒரு நம்பர் லாட்டரியை சுரண்டிக் கொண்டிருக்கும் போது வலிமை அப்டேட் யாருடைய மனசை தட்டி மங்காத்தா ஆடும்?
இந்த உண்மையெல்லாம் புரியாமல் மே 1 ந் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன்? ஒருவேளை உங்க அரசியல் கணக்கெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் என் சினிமா கணக்கை காணதான் உலகம் துடிக்கும் என்று நினைத்தாரா அஜீத்?
ஊர் ஓரமா பூத்திருக்கும் ஊமத்தம் பூ வை தார் ரோட்ல கொண்டு வந்து போட்றதுதான் தப்பு மேல தப்பு.