அஜீத் படத்தின் பெயர்? ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு!
பேரு வச்சியே, சோறு வச்சியா? கதைதான் அஜீத்தின் ஒவ்வொரு படத்திற்கும்! படம் எடுக்க கிளம்பினீங்களே? பேரு வச்சுட்டு கிளம்பினீங்களா? என்று கேள்வி கேட்க கூட முடியாமல், ‘அவங்க அப்படிதான்’ என்கிற மனநிலைக்கு ஆளாகிவிட்டார்கள் ரசிகர்கள். தல 55, தல 56 என்று எழுதி வரும் ரசிகர்கள், அஜீத் படத்திற்கு தலைப்பு வைக்கும் விஷயத்தையே திருவிழாவாக கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆகஸ்ட் 15 அவர்களுக்கு திருவிழாவாக இருக்கப் போவது நிச்சயம். மிக பொருத்தமான ஒரு தலைப்பை தேர்வு செய்துவிட்டாராம் அஜீத். ஆனால் அதை சொல்வதற்கு ஒரு நல்ல நாள் வேண்டும். அதுவரைக்கும் பொறுமையாக இருக்கவும் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளரிடம். அஜீத் ஒரு சாய்பாபா பக்தர் என்பது உலகறிந்த விஷயம். இந்த படத்தை தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னமும் ஒரு சாய்பாபா பக்தர். வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் இருவருக்குமே உண்டு. அப்படியிருக்கும் போது இந்த ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை வருகிறதா என்றால் அதுவும் இல்லை.
சுதந்திர திருநாளை இதற்காக தேர்வு செய்திருக்கும் அஜீத், இரண்டு நாட்களுக்கு முன்பாக அதாவது வியாழக்கிழமையே கூட பெயரை ரிலீஸ் செய்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.
பிரசவ வலி எடுக்கும் போது பிள்ளை தானாகவே வெளியே வரும். ஆனால் அது வியாழனா? ஞாயிறா? குழப்புறீங்களே…ஜி!