ரஜினி, ஷங்கரை பார்க்க அஜீத் ஏன் தயங்கணும்?
வந்த செய்தி உண்மையாக இருந்தால், விசாரித்த தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி-
AK57 என்று அஜீத் ரசிகர்களால் அன்போடு உச்சரிக்கப்படும் சிறுத்தை சிவா இயக்குகிற படப்பிடிப்பு சென்னை டூ திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்தப்படும் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் அங்கு ரஜினியின் 2,0 படப்பிடிப்பு நடக்கவிருக்கும் தகவல் அறிந்து, அஜீத் வேறு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டார். ரஜினி ஷங்கர் படத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று அவர் கருதியதாக கூறப்பட்டது. ஆனால் நிஜம் அதுவா?
விசாரித்தால் சுவாரஸ்யமான ஒரு தகவல்தான் கிடைக்கிறது. தகுதியிலும் மார்க்கெட்டிலும் தலை சிறந்த ஜாம்பவான்களாக இருக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும். இவ்விருவருக்குமான மார்க்கெட் என்பது மிக மிக பெரியது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படியிருக்கும் என்கிற ஆசை யாருக்குதான் வராது? அது டைரக்டர் ஷங்கர் மனதில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
2,0 படத்திற்கு பிறகு அவர் ஹாலிவுட் படத்தை இயக்கப் போய்விடுவார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தாலும், அஜீத்தும் விஜய்யும் சம்மதித்தால் ஷங்கரின் அடுத்த படம் இதுவாகவே கூட இருக்கலாம். அரசல் புரசலாக இந்த விஷயம் அஜீத்தின் காதுக்கு வந்திருந்தாலும், விஜய்யுடன் இணைந்து நடிக்க சரியான தருணம் இதுவல்ல என்று நினைக்கிறாராம் அஜீத்.
எப்படியும் பக்கத்து புளோரில் ரஜினியும் ஷங்கரும் இருக்கும் போது போய் பார்த்து ஒரு ஹலோ சொல்லாமல் இருக்க முடியாது. உணவு இடைவேளைகளில் ஒன்றாக சாப்பிடும் சூழ்நிலை கூட அமையலாம். இந்த நேரத்தில் அந்த சந்திப்பை தவிர்த்துவிட்டால், நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கலாம்.
ஒருவேளை நிஜம் இதுதான் என்றால், தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப் போடுகிற ஒரு நல்ல விஷயம் தள்ளிப் போய்விட்டதே என்ற வருத்தம்தான் மிச்சமாக இருக்கும்!
To listen audio click below :-