அஜீத் சூர்யாவுக்கு தனுஷ் தந்த பாடம்!

அதி தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, ஆவரேஜ் ரசிகர்கள் கூட இல்லையென்றால் ஒரு ஹீரோ கண்டிப்பாக ஜீரோதான். இந்த உண்மையை அவ்வப்போதுஆணி அறைந்து நிரூபித்து வருகிறது காலம். இப்போதெல்லாம் எந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் என்றாலும், மேல் மாடியை ரசிகர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள் ஹீரோக்கள். பேசும்போது அவர்களை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்காக கவரேஜ் செய்ய வரும் ஒளிப்பதிவாளர்கள், ‘அண்ணேய்… இங்க பார்த்து பேசுங்க, இல்லேன்னா நார்மலா எதிர்ல உள்ளவங்களை பார்த்து பேசுங்க. தலையை அண்ணாந்து பேசுனா, டெலிகாஸ்ட்டின் போது அசிங்கமா இருக்கும்’ என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் ஹீரோக்களிடம் கெஞ்சுகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை.

ஆனாலும் ரசிகர்களே தெய்வம் என்று அங்கு நோக்கியே இருக்கிறது அவர்களின் பார்வை. இந்த நல்ல விஷயத்தை முறைப்படி கடைபிடித்து சமீபத்தில் வெற்றியை ஏராளமாக அறுவடை செய்திருப்பவர் தனுஷ். வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் ஒரு சில காட்சிகளில் தமிழகம் முழுவதுமிருக்கிற அவரது ரசிகர் மன்றத்தினரைதான் நடிக்க வைத்தார் அவர். அதன் விளைவை அவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் நாளே அனுபவித்துவிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும், நகராட்சியிலும், ஒன்றியத்திலும் இருக்கிற தனுஷ் ரசிகர்கள் தாங்கள் மட்டுமல்லாது தங்களுக்கு தெரிந்தவர், அறிந்தவர் என்று அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்று விட்டார்கள். தமிழகம் முழுக்க ஒரு தியேட்டர் பாக்கியில்லாமல் ஹவுஸ்புல். அதுமட்டுமல்ல, இந்த கூட்டம் அப்படியே தொடர்ந்து மூன்று நாளைக்கு திரண்டதாம்.

இப்படியொரு மாஸ் ஓப்பனிங் அஜீத் விஜய் படங்களுக்கு மட்டுமே நடைபெறுகிற அதிசயம். அதற்கப்புறம் சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு நிகழ்ந்தது. ரஜினி கமலை விடுங்கள். அவர்கள் எப்பவும் மாஸ். இந்த நிலையில் தனுஷின் இந்த ரசிகர் மன்ற முக்கியத்துவ அறிவை கண்டு வியந்திருக்கிறார்களாம் சூர்யாவும் அஜீத்தும். மறுபடியும் ரசிகர் மன்ற தோழர்களை முன்னிலும் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை வந்திருக்கிறதாம் அவர்களிடத்தில்.

இனிமேல் வருகிற தங்கள் படங்களில் ரசிகர் மன்ற தோழர்களையும் நடிக்க வைக்கும் திட்டத்தை கடை பிடித்தாலென்ன என்றும் நினைக்கிறார்களாம். அதுமட்டுமல்ல, மன்றத்தை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைக்கவும் திட்டமிட்டு வருவதாக கேள்வி. ஆனால் இதற்கு முன்பு நாம் ஒருமுறை அஜீத் ரசிகர் மன்றம் மீண்டும் துவக்கம் என்று எழுதியிருந்த போது, அதை மறுத்தார் அவர். ஆனால் இந்த முறை அவரது மனிசிலும் அந்த ஆசை துளிர் விடுவதாக கூறப்படுகிறது.

மாநில கட்சி அரசியலிலும், மத்திய கட்சி அரசியலிலும் பங்கு பெற மாட்டோம். வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டோம்… என்று சில விதிமுறைகளை வலியுறுத்தி அதற்கு ஒப்புக் கொண்டால் மீண்டும் மன்றம் துவங்கும் திட்டத்திற்கு அஜீத் வரக்கூடும் என்று தகவல்கள் கசிகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை வட மாவட்டத்தில் பெருகி வந்த அஜீத் ரசிகர் மன்றத்தை கண்டு அதிருப்தியுற்ற மருத்துவர் கட்சி முக்கியஸ்தர் ஒருவர், மன்றத்தினரை பிடித்து தேடி தேடி இம்சித்தாராம். ‘இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள மன்றத்தை கலைச்சுட்டு ஓடிடணும். இல்லேன்னா ரத்த காயம் பார்ப்பீர்கள்’ என்று அவர் எச்சரிக்க, அவரிடம் மல்லுக்கட்ட முடியாதவர்கள் தலைமையிடம் முறையிட்டார்களாம்.

‘ஏன் அவ்வளவு சிரமப்படணும். அன்பு உள்ளத்தில் இருந்தா போதும். உங்க சேஃப்டிதான் முக்கியம். மன்றத்தை கலைச்சுருங்க’ என்றாராம் அஜீத். அதற்கப்புறம் எங்குமே மன்றம் வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்தார். இப்போது தனுஷ் தன் படத்தில் ரசிகர்களுக்கு இடம் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தியிருப்பதுதான் லேசான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம் அஜீத் மனதில்.

எப்படியோ? ‘வேலையில்லா பட்டதாரி’, அஜீத் சூர்யாவை சில முடிவுகளுக்குள் தள்ளிவிட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலன்றி வேறென்ன?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிள்ளையார் சுழிக்கு பதிலாக மண்டை ஓடு? பில்லி சூனிய ஆவிகள் பிடியில் கோடம்பாக்கம்!

‘காஞ்சனா’வில் லாரன்ஸ் ஆரம்பித்து வைத்த சூடு, இன்னும் ஆறியபாடில்லை. அதற்கப்புறம் ‘யாமிருக்க பயமே’ அடித்த ஹிட்டில் ஆடிப்போன அத்தனை பேய்களும் பில்லி சூனிய மந்திரவாதிகளிடமிருந்து விடுபட்டு, சினிமா...

Close