அம்மா மறைவுக்கு அஜீத் இரங்கல்! பல்கேரியாவிலிருந்து கடிதம்!
எப்படியாவது உயிர் பிழைத்துவிடுவார் என்று காத்திருந்த தமிழக மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. மறைந்த இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தக்கூடிய சூழ்நிலையில் இல்லை அஜீத்! படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றிருக்கிறார். விஜய் உள்ளிட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். வர முடியாத அஜீத், பல்கேரியாவிலிருந்து தன் இரங்கல் கடிதத்தை மட்டும் அனுப்பியிருக்கிறார்.
அதில்,
மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்னும் செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமையைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஆழ்ந்த வருத்தத்துடன்
அஜித் குமார்
பின்குறிப்பு- நடிகர் கமல் அமெரிக்காவிலிருப்பதால், அவரும் தன் இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
https://youtu.be/9MOun9M1cIM