மனோரமா உடலுக்கு இறுதி அஞ்சலி! மனைவி ஷாலினியுடன் நேரில் வந்தார் அஜீத்!
தமிழ்சினிமா பிரமுகர்களின் மரணம் எப்போது நிகழ்ந்தாலும், அங்கு அஜீத் வந்தாரா? விஜய் வந்தாரா? என்ற கேள்விகள் எழாமலிருக்காது. இயக்குனர் சிகரம் பாலசந்தர் மறைவுக்கோ, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைவுக்கோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத அஜீத் மீது திரையுலகம் சற்றே மன வருத்தத்திலிருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஏதேதோ காரணங்கள். ஏதேதோ மவுனங்கள். அவர் மனசுக்குள் இருந்ததை மற்றவர் எப்படி அறிவர்? ஆனால் மனோரமா இறந்த செய்தி கேட்டதும் திரையுலகம் தன்னையறியாமல் கண்ணீர் வடித்தது. இன்று நடக்கவிருந்த திரையுலக நிகழ்ச்சிகள் அத்தனையும் நிறுத்தப்பட்டன. சரத்குமார் அணி சார்பில் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரஜினி, விஜய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் மனோரமா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், யாரும் எதிர்பார வண்ணம் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் அஜீத். தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தவர், மனோரமாவின் மகன் பூபதியின் கைகளை பற்றி தனது ஆறுதலை அவருக்கு தெரிவித்தார்.
அஜீத்தின் வருகை சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.